ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ந‌ல்​வழி காட்ட நாட்​டி​யக் கலை!

மனத்தை மகிழ்விக்கும் பொழுதுபோக்குக் கலையாக இல்லாமல் நெறியான வாழ்வுக்கு வழிகாட்டும் தெய்விக வழிபாடு போலவும் திகழ்கிறது பரதக் கலை.  இக் கலையைப் பணம் ஈட்டுவதற்கான ஒரு தொழிலாகக் கொள்ளாமல் இளைய தலைமுறையினர

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:57 pm

வே.சுந்தரேஸ்வரன்

மனத்தை மகிழ்விக்கும் பொழுதுபோக்குக் கலையாக இல்லாமல் நெறியான வாழ்வுக்கு வழிகாட்டும் தெய்விக வழிபாடு போலவும் திகழ்கிறது பரதக் கலை.

 இக் கலையைப் பணம் ஈட்டுவதற்கான ஒரு தொழிலாகக் கொள்ளாமல் இளைய தலைமுறையினர் நல்வழி காட்டும் கலையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தேசியத் தலைநகர் பிராந்தியம் நொய்டாவில் நாட்டியப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த பவானி அனந்தராமன்.

 "பவானி பிரசன்னாலயா' எனும் பெயரிலான இந்த நாட்டியப் பள்ளி நொய்டாவில் உள்ள செக்டார் '93 ஏ'-வில் செயல்பட்டு வருகிறது.

 இசை, நாட்டியத்தில் தனக்குள்ள 35 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டு நொய்டாவைச் சேர்ந்த சிறார்களுக்கு நாட்டியக் கலையைப் பயிற்றுவிக்கிறார் பவானி.

 சென்னை, மும்பையில் பவானி பிரஸன்னாலயா பல ஆண்டுகளாக இயங்கி வருவதாகக் கூறும் இவர், தற்போது மூன்று ஆண்டுகளாக நொய்டாவில் இப்பள்ளியை நடத்தி வருகிறார். தன்னிடம் பயிலும் மாணவர்களை மேடையேற்றி ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் இசை நாட்டிய விழாவையும் நடத்தி வருகிறார்.

 இவ்வாண்டின் விழாவுக்காக நடைபெறும் ஒத்திகைக்கு இடையே பவானி அனந்தராமை சந்தித்தோம்.

  ""சென்னை எனது சொந்த ஊர். நான்கு வயதிலிருந்தே இசை மீது எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்து இசை கற்கத் தூண்டியவர் தந்தை ஜெயராமன். நாட்டியத்திலும் ஆர்வமிருந்ததால் 6 வயதில் உலகப் புகழ்பெற்ற கலாúக்ஷத்திரத்தில் பரத நாட்டியம் பயிலத் தொடங்கினேன்.

 சிருங்காரத்திற்கு மட்டுமே பரதம் என்ற கண்ணோட்டத்தில் இருந்த இக்கலையை ஓர் உயர் கலையாக உருவாக்கும் நோக்கில் கலாúக்ஷத்திரத்தை ஆரம்பித்தவர் ருக்மணிதேவி அருண்டேல். ஏழு வயதுக்கு மேல் உள்ளவர்களை மட்டுமே நாட்டிய வகுப்பில் சேர அனுமதித்து  வந்தபோதிலும், எனது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்தில் 6 வயதிலேயே என்னை நாட்டியம் கற்க உதவியவர் அவர்.

 13 வயது இருந்தபோது எனது நாட்டிய அரங்கேற்றம் அவர் முன்னிலையிலேயே நடைபெற்றது.

  அதன்பிறகு பிரசன்னவதனி என்பவரிடம் தொடர்ந்து நாட்டியம் பயின்றேன். தவிர, வி. தனஞ்சயன், அடையாறு லட்சுமணன், சாவித்திரி, ஜெகந்நாத ராவ் ஆகியோரிடமும் பரதக் கலை நுணுக்கங்களைக் கற்றேன்.

   சாஸ்திரீய சங்கீதம் தெரிந்திருந்தால் அது நாட்டியக் கலைக்கு உதவும் என்பதால் சீதாராம சர்மாவிடம் வாய்ப்பாட்டு கற்கத் தொடங்கினேன். தொடர்ந்து, சென்னை அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டும், வீணையும் கற்றேன். அப்போது, நரசிம்மாச்சாரி - வசந்தலட்சுமி தம்பதியினர் நடத்தி வந்த "கலா சமர்ப்பணா' அமைப்பு மூலம் நிறைய நாட்டிய நாடகங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

  இசைக் கல்லூரியில் பயின்றபோது நிறைய போட்டிகளில் பங்கேற்க அதன் முதல்வராக இருந்த பானுமதி ராமகிருஷ்ணா ஊக்குவித்தார். அதே போன்று, ராணி மேரி கல்லூரியில் பி.ஏ. பயின்றபோதும் பல்வேறு இசைப் போட்டிகளில் கலந்துகொண்டேன். வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். இதனிடையே நட்டுவாங்காங்கமும் கற்றேன்.

 என்னுடைய குரு பிரசன்னவதனியின் திடீர் மறைவை அடுத்து அவரது நினைவாக சென்னையில் 1990-ம் ஆண்டு "பவானி பிரசன்னாலயா' எனும் பெயரில் நாட்டியப் பள்ளியைத் தொடங்கினேன். 7 ஆண்டுகள் நடைபெற்ற அந்தப் பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட மாணவியர் முதல்தர நாட்டியக் கலைஞர்களாகக் கற்றுத் தேர்ந்தனர்.

எனது அமைப்பின் கலைஞர்கள் சென்னையில் உள்ள ஆர்.ஆர். சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் உள்ளிட்டவற்றில் நடைபெற்ற பாரதி விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதல் பரிசு, 2-ம் பரிசுகளைப் பெற்றனர்.

எனது கணவர் அனந்தராமன் பணி நிமித்தமாக மும்பைக்கு மாற்றலானதால் அங்கு குடியேறினோம். பிறகு, மும்பை செம்பூரில் 14 ஆண்டுகள் நாட்டியப் பள்ளியை நடத்தினேன்.  அங்கிருந்து நொய்டாவுக்கு 2009-ம் ஆண்டு வந்தோம்.

சென்னையில் இயங்கி வந்த எனது நாட்டியப் பள்ளியில் பயின்ற மாணவர்களை வேறு ஒரு நாட்டிய ஆசிரியையிடம் ஒப்படைத்தேன். அதே போல மும்பையில் எனது பள்ளியில்

பயின்ற மாணவர்களுக்கு மூத்த மாணவர் ஒருவர் தற்போது பயிற்சி அளித்து வருகிறார்.

பாரதியின் கவிதையில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இதனால், அவரது கவிதைகளுக்கு இசை அமைத்து நாட்டிய நிகழ்ச்சி நடத்தினேன்.

மகாகவி பாரதியாரின் கவிதைகளைக் கொண்டு நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியதைப் பாராட்டி மும்பையில் உள்ள பாரதி கலா மன்றம் "பாரதி நாட்டியமணி' விருதை எனக்கு வழங்கியுள்ளது. இந்த விருதை பாரதி காவலர் டாக்டர் ராமமூர்த்தி வழங்கினார்.

அதே போன்று, இந்திய சிவாலி கலைச் சங்கம் "சிவாலி நிருத்ய சிரோன்மணி' என்ற விருதை அளித்துச் சிறப்பித்தனர்.

ஹிஸ்துஸ்தானி இசை மட்டுமின்றி சாஸ்திரீய சங்கீதத்தில் உள்ள பல இசை நுணுக்கங்களை அறியச் செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.

அதனால்தான் ஆண்டு விழா நடத்தி அதன் மூலம் இளம் தலைமுறையினருக்கும், பெற்றோருக்கும் நாட்டியக் கலை, கர்நாடக சங்கீதம் ஆகியவற்றின் பயன் குறித்து விளக்கி வருகிறேன்.

குழந்தைகளின் ஆளுமையை வளர்க்கும் ஒரு கலையாக நாட்டியக் கலை உள்ளது. வாய்ப்பாட்டு, நாட்டியம் கற்கும்போது பயிற்றுவிக்கப்படும் ஒழுக்க விஷயங்கள் அந்தக் குழந்தைகளின் வாழ்க்கைப் பாதையைச் செழுமைப்படுத்த உதவுகிறது. பொறுமை, கவனம், கற்பனைத் திறன் ஆகியவற்றை வளர்க்கிறது.

தற்போது எனது அமைப்பைப் பதிவு செய்து விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளேன். வாழ்க்கையில் படிப்பு ஒரு பகுதி என்றால் நாட்டியம், இசை என்பது மற்றொரு பகுதி என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார் பவானி அனந்தராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.