நொய்டாவின் பிரபலம்... "திருப்புகழ் மாமி'
நொய்டாவில் "திருப்புகழ் மாமி' என்றால் பிரபலம். அவருடைய சொந்தப் பெயரைத் தெரியாவிட்டாலும் அவரைத் தெரிந்து வைத்திருக்கும் விதத்தில் அவரது இறைப்பணி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதாக உள்ளது. திருப்புகழ் மாமி என்று அ


நொய்டாவில் "திருப்புகழ் மாமி' என்றால் பிரபலம். அவருடைய சொந்தப் பெயரைத் தெரியாவிட்டாலும் அவரைத் தெரிந்து வைத்திருக்கும் விதத்தில் அவரது இறைப்பணி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதாக உள்ளது.
திருப்புகழ் மாமி என்று அறியப்படும் உமா பாலசுப்பிரமணியன் வேறு யாருமில்லை, கி.வா.ஜ. எனும் மூன்றெழுத்தில் தமிழ் இலக்கிய, ஆன்மிக உலகில் மிகவும் பிரபலமான கி.வா.ஜகந்நாதன் அவர்களின் மகள்தான் இவர்.
தமிழ்ப்பணியுடன் இறைப்பணியும் ஆற்றியவர் கி.வா.ஜ. மோகனூர் காந்தமலைக் குன்றில் உள்ள தண்டாயுதபாணி முருகப் பெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அப்பெருமான் மேல் பல பாடல்களைப் புனைந்தவர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து அரிய தமிழ்ப் பணிகள் பல செய்தவர்.
அத்தகைய பெருமைக்குரிய கி.வா.ஜ.வின் மகளான உமா பாலசுப்பிரமணியன், தந்தை வழியில் மகள் என்று ஊரார் பாராட்டும் வகையில் உ.பி. மாநிலம் நொய்டாவில் அருணகிரிநாதரின் திருப்புகழைத் தமிழர்களின் வீடுதோறும் பரப்பி வருகிறார்.
"திருப்புகழ் மாமி'யிடம் அவரது "திருப்புகழ்' பணி குறித்து கேட்டோம்.
""நான் சென்னையில் பிறந்தவள். படித்ததும் சென்னையில்தான். படிக்கும் காலங்களிலேயே கலை, இலக்கியம், ஆன்மிகம் இவற்றில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. தந்தையைப் பார்த்து வளர்ந்தவள். அவரைச் சந்திப்பதற்காக பிரமுகர்கள், இலக்கிய அன்பர்கள், எழுத்தாளர்கள், ஆன்மிகவாதிகள் எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நானும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
1969-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடைபெற்ற பிறகு கணவர் பாலசுப்பிரமணியனுடன் ராஞ்சி (இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது) நகருக்குக் குடிபெயர்ந்தேன். பிறகு 1988-ம் ஆண்டில் புது தில்லி வந்தபோது, சாகேத் பகுதியில் வசித்தோம். அப்போது என் தந்தை கி.வா.ஜ. மறைந்திருந்த காலம். அது என்னை மிகவும் பாதித்திருந்த சம்பவம்.சாகேத் பகுதியில் குரு ஏ.எஸ்.ராகவன் அவர்களிடம் திருப்புகழ் பாடல்களை முறைப்படி பயின்றேன். திருப்புகழ் பயிற்றுவிக்கும் ஆர்வம் என்னுள் ஏற்பட்டிருந்த நேரம் அது. அங்கிருந்து நொய்டா நகருக்கு 2000-ம் ஆண்டில் குடிபெயர்ந்தோம்.
இங்கு, "திருப்புகழ் அன்பர்கள்' அமைப்பை ஏற்படுத்தி திருப்புகழ் பாடல்களைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என விருப்பமான அனைவருக்கும் கற்றுத் தரும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். தொடர்ந்து இன்று வரை அப்பணியில் ஈடுபட்டு வருகிறேன்.கி.பி. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரால் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் மீது பாடப்பெற்ற பக்திப்பாடல் நூல், திருப்புகழ்.
அருணகிரிநாதர் 16 ஆயிரம் பாடல்களைப் பாடியதாகக் கூறப்படுகிறது. அவற்றில் நமக்குக் கிடைத்தவை 1304 பாடல்களே. அவற்றில் 502 பாடல்களுக்குத்தான் தாளம், ராகம் அமைத்து கற்றுத் தரப்படுகிறது.இப்பாடல்களுக்கு என்று ராகம், தாளம் உண்டு. எல்லோரும் ஒரே ராகம், தாளத்தில் பாடல்களைப் பாடும் இறைவழிபாட்டு முறை இது. திருப்புகழ் பாடல்கள் தனிப்பட்ட நபரின் திறமையை வெளிப்படுத்துவதற்கான பாடல்கள் அல்ல. அவை இறைத் தன்மையுடன் பாடப்படும் பாடல்கள்.
இப்பாடல்கள் குரு வழிபாட்டில் ஆரம்பித்து ஓம் தொடங்கி ஓம் மந்திரத்தில் வழிபாடு நிறைவடையும்.
அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் தொடங்கி வரிசையாக ஒவ்வொரு படை வீடாக பாடல்கள் பாடப்படும். பாடலின் உள் அர்த்தத்தை உணர்ந்து திருப்புகழைப் பாடும்போது தியானம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும். இதில், அளப்பரிய வாழ்க்கைத் தத்துவம் உண்டு. தீய செயல்களை நீக்கி நன்மை தரும் செயல்கள், இம்மை- மறுமை குறித்த சூட்சுமமான பல விஷயங்கள் இப்பாடல்களில் பொதிந்துள்ளன. இப்பாடல்களை மனம் உருகிப் பாடினால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத் தடை, பிணிகள் நீங்கும்.
பாடல்களைப் பாடும்போது ஆர்வமும், ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக வகுப்புகளை நடத்தி வருகிறேன்.
திருப்புகழ் படி விழாவை ஆர்.கே. புரம் மலைமந்திரில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறோம். அக்டோபர் 2-ம் தேதி அருணகிரிநாதர் விழாவை நடத்துகிறோம். தவிர, விசாகம், கிருத்திகை, சஷ்டி விழாக்களை நடத்துகிறோம்.
திருப்புகழை தேவாரம், திருவாசகம் போன்று மந்திரம் ஜபிக்கும் நூலாகவும் போற்றிப் பாடும் அன்பர்கள் உண்டு. திருப்புகழில் உள்ள இசைத் தாளங்கள், இசை நூல்கள் தனித்தன்மை பெற்றவை.
""வேதம் வேண்டாம் சகல வித்தை வேண் டாம்கீத/ நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம்- ஆதி/ குருப் புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்/ திருப்புகழைக் கேளீர் தினம்'' எனும் பாடல் திருப்புகழை உணர்ந்து ஓதுவதை வலியுறுத்துவதாகும்.
திருப்புகழை மனம் உருகிப் பாடினால் நினைத்த காரியம் அனுகூலமாகும்.
குறிப்பிட்டுக் காட்ட வேண்டுமானால், திருப்புகழில் வரும் "செகமாயை உற்று' எனும் பாடல் மகப்பேறு கிட்டவும், "விறல் மாரன்' பாடல் திருமணம் நடந்தேறவும், "சரண கமலாலயத்தை' எனும் பாடல் சகல சௌபாக்கியங்கள் பெறவும், பிணிகள் தீர "இருமலு ரோக' எனும் பாடலும் உகந்ததாக இருக்கும் என்பது அன்பர்களின் அனுபவம். இது போன்ற பல விஷயங்கள் திருப்புகழில் மறைந்திருக்கின்றன. திருப்புகழை மனம் உருகிப் பாடுவோருக்கு அது தானாகவே புலப்படும்.
"எனது ஆசையெல்லாம் எல்லாரும் எல்லாம் பெற்று இன்புற்று இருக்க வேண்டும்; ஏழைகள் என்பதே இருக்கக் கூடாது' என்பதுதான்.
இதெல்லாம் சாத்தியமா என்று என்னை யாராவது கேட்டால், கல்லுக்குள் இருக்கும் தேரைக்குக்கூட உணவளிக்கும் இறைவன் இந்த மனிதப் பிறவிக்கு உதவ மாட்டானா என்ன என்பேன்,'' என்று கூறியவாறு புன்முறுவல் பூக்கிறார் உமா பாலசுப்பிரமணியன்.
நொய்டாவில் உள்ள அவ்வை தமிழ்ச் சங்கம் உமா பாலசுப்பிரமணியத்தின் சேவையைப் பாராட்டி அண்மையில் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...