தலைவாசல் ஓர் அணையா ஜோதி!
புது தில்லியின் மையத்தில் அமைந்துள்ள அந்த இடம் கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மாட மாளிகையோ, கூடகோபுரமோ அல்ல. ஆனாலும், தலைநகருக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடம். அத


புது தில்லியின் மையத்தில் அமைந்துள்ள அந்த இடம் கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மாட மாளிகையோ, கூடகோபுரமோ அல்ல. ஆனாலும், தலைநகருக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடம். அதுதான், தில்லி "இந்தியா கேட்'.
42 மீட்டர் உயரத்துடன் கூடிய அந்த கம்பீரமான நுழைவு வாயில் வளைவைப் பார்க்கும்போது "தலைநிமிர்ந்த இந்தியா' என்று ஒவ்வொரு இந்தியனும் உணர்வுப்பூர்வமாக நினைத்துப் பெருமைப்படும் போர் நினைவுச் சின்னம் அது.
தில்லியின் ராஜ்பத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிச் செல்லும் ஜன்பத்தின் கிழக்கு இறுதியில் அமைந்துள்ளது பெருமைக்குரிய "இந்தியா கேட்'.
இந்த நினைவுச் சின்னம் 80 ஆண்டுகளுக்கு முன்பு சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டதாகும்.
போர் வெற்றியை நினைவுகூரும் வளைவான இது, அகில இந்திய போர் நினைவுச் சின்னமாக அழைக்கப்பட்டது.
முதல் உலகப் போரிலும், 1919-ம் ஆண்டு நடைபெற்ற ஆப்கன் போரின்போது வட-மேற்கு எல்லையிலும் தங்களது இன்னுயிரை ஈந்த இந்திய ராணுவ வீரர்கள் ஆயிரக் கணக்கானோரின் பெயர்கள் "இந்தியா கேட்'டில் பொறிக்கப்பட்டுள்ளன.
போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த வளைவின் அடிப்பகுதியில் "அமர் ஜவான் ஜோதி' எனும் அணையா விளக்கு 1971-ம் ஆண்டு முதல் ஒளிர்கிறது. போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உயர் பீடத்தில் துப்பாக்கியும், தலைக்கவசமும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஜோதியின் பக்கவாட்டுப் பகுதியில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் கம்பீரமாக நிற்கின்றனர்.
மாலையில் திருவிழாக் கூட்டம்: இந்த இடம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் மட்டுமன்று. சிறந்த ஒரு பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்கிறது. மாலைவேளைகளில் இங்கு கூடும் மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி.
தில்லியில் சுட்டெரிக்கும் பகல் வேளையிலும் பலர் இந்த கேட் அருகே வந்து நின்றுவிட்டுச் செல்கின்றனர். இங்குள்ள பசுமையான புல்தரையில் தினமும் மாலையில் சிறிதுநேரமாவது அமர்ந்து செல்வோரும் உண்டு.
மாலைநேர அதிசயம்: அந்திவேளை சாயும் நேரத்தில் வானத்தின் வெண்மை-நீலநிறப் பின்னணியில் தங்க நிற வெளிச்சத்தை உமிழும் விளக்குகளால் தகதகவென ஜொலிக்கும் இந்தியா கேட்டைப் பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர்.
பொழுதுபோக்குவதற்காக குழந்தைகளுடன் வருவோர், இந்தியா கேட் அருகே உள்ள புல்தரையில் அமர்ந்து தின்பண்டங்களை வாங்கி உண்டு, மகிழ்ந்து செல்கின்றனர். இங்குள்ள சிறுவர் பூங்கா சிறுவர்களை மகிழ்விக்கும் இடமாக உள்ளது.
இந்திய கிராமிய மணத்தை நினைவூட்டும் அழகழகான குதிரை, யானை பொம்மைகள், பந்துகள் ஆகியவையும் கேட் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன. தவிர, துரித உணவு, நடமாடும் ஐஸ்கிரீம் பார்லர்கள் எல்லாம் இங்கு உண்டு.
அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இந்தியா கேட்டை பார்க்க அதிகம் பேர் வருகின்றனர்.
சுற்றுலா என்றால் புகைப்படம் இல்லாமலா! இந்தியா கேட் காண வரும் வெளியூர்க்காரர்கள் இதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுவதாக புகைப்படக்காரர் ராஜ் தெரிவித்தார்.
""நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வரை இங்கு வந்து செல்கின்றனர். பலர் தாங்கள் வைத்திருக்கும் செல்போன் கேமிரா மூலம் புகைப்படம் எடுக்கின்றனர். சிலர் என்னைப் போன்ற தொழில்முறை புகைப்படக்காரர்களிடம் படம் எடுத்துக் கொள்கின்றனர். படம் எடுத்த 15 நிமிடங்களில் அவற்றை தந்துவிடுகிறோம். ஒரு படத்திற்கு ரூ.30 வாங்குகிறோம்'' என்றார் ராஜ்.
தேசத்தின் தலைவாசலில் உள்ள அணையா ஜோதியின் அருகில் நிற்கும்போது நம் மனதை ஓர் அமைதி தழுவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...