விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரை நூற்றாண்டு கடந்த ஓர் இசைச் சேவை...!

நல்லதொரு இசை செவியை அடைந்துவிட்டால் அது நினைவில் இருந்து அகலவே அகலாது. "ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே கானாமிர்தம் கொண்ட காட்சி மிக விந்தையடா' என்றார் மகாகவி பாரதியார். இசை, மனத்தின் மெல்லிய உணர்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:52 am

வே.சுந்தரேஸ்வரன்

நல்லதொரு இசை செவியை அடைந்துவிட்டால் அது நினைவில் இருந்து அகலவே அகலாது.

"ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே கானாமிர்தம் கொண்ட காட்சி மிக விந்தையடா' என்றார் மகாகவி பாரதியார்.

இசை, மனத்தின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாக விளங்குகிறது. அதிலும், கர்நாடக சங்கீதம் போன்ற மென்மையான இசையைக் கேட்கும்போது மனம் அதில் லயித்துப் போய்விடுவது எல்லோருக்கும் இயல்பான ஒன்று.

கர்நாடக சங்கீதத்தைத் தென்னிந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும், பயிற்றுவிப்பதற்காகவும் தில்லியில் அரை நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சங்கீத சபாக்களில், இன்றைக்கும் உயிர் துடிப்புடன் இயங்கி வருவனவற்றுள் குறிப்பிடத்தக்கது "ஸ்ரீ ஷண்முகானந்த சங்கீத சபா'.

ஆண்டுதோறும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்கு சொந்தமான இந்த சபாவைத் தோற்றுவித்தவர்கள் கே. வெங்கட்ராம சாஸ்திரி, "கட்டளை' வி. ராமச்சந்திர ஐயர், கே. பாலகிருஷ்ணன், எஸ். பட்டாபிராமன் ஆகிய நால்வர். அவர்களில்  மூவர் காலமாகிவிட்ட நிலையில், ஸ்ரீ ஷண்முகானந்த சங்கீத சபாவின் அனுபவங்களைத் தன்னுடைய நினைவுப் பெட்டகத்திலிருந்து நம்முடன் பகிர்ந்து கொண்டார் எஸ். பட்டாபிராமன்.

90 அகவையை எட்டிவிட்ட பட்டாபிராமன், இசையிலும், ஆன்மிகத்திலும் தணியாத ஆர்வம் கொண்டு, மனத்தளவில் இளைஞராகவே இருக்கிறார்.  

"ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தில்லியில் பல்வேறு பணி நிலைகளில் தென்னிந்தியத் தமிழர்கள் கணிசமாகப் பணியாற்றி வந்தனர். அவர்களில் மத்திய நடுத்தர வர்க்கத்தினரும், மற்றவர்களும் ஆண்டுதோறும் ஸ்ரீ கந்த சஷ்டி, ஸ்ரீ ராமநவமி போன்ற உற்சவங்களை எளிய முறையில் கொண்டாடி வந்தனர்.

செல்வந்தர்களின் ஆதரவில் ஆண்டுதோறும் சிறப்புக் கச்சேரிகளுக்கு "கர்நாடக சங்கீத சபா' ஏற்பாடு செய்து வந்தது. அந்த கால கட்டத்தில், தனவந்தர்களின் வீட்டு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சங்கீதம் பயில அதிக வாய்ப்பு இருந்தது.

1944-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்த "ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி' குழுவினர் ஒரு ஸ்தாபனத்தின் ஆதரவில் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்துவது நலம் என்று கருதினர்.

அப்போதுதான், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கீழ்நிலையில் இருந்த குடும்பங்களின்  குழந்தைகளுக்கும் சங்கீதப் பயிற்சி அளிக்கும் வகையில், ஆன்மிக ஸ்தாபனத்துடன் இணைந்து செயல்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

அப்போதைய கர்நாடக சங்கீத சபாவின் தலைவரும் ஐ.சி.எஸ். படித்தவருமான எஸ்.ஒய். கிருஷ்ணஸ்வாமியிடம் அணுகி எங்களது அபிப்ராயத்தைக் கூறினோம். அவரும் எங்களுக்கு ஊக்கமும் ஆசியும் வழங்கினார்.

முருகப் பெருமானுக்கு நடத்திவரும் உற்சவத்தையும், சங்கீதத்தையும் கருத்தில் கொண்டு எங்கள் ஸ்தாபனத்திற்கு "ஸ்ரீ ஷண்முகானந்த சங்கீத சபா' என்று பெயரிட்டோம்.

1949, செப்டம்பர் மாதம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் அப்போதைய மக்களவை உறுப்பினர் திருமலை ராவ் தலைமையில் விஞ்ஞானி டாக்டர் (சர்) கே.எஸ். கிருஷ்ணன் அவர்களால் மந்திர் மார்க், ஹிந்து மஹா சபா அரங்கில் இந்த சபா ஆரம்பிக்கப்பட்டது.

தொடக்கத்தில் சங்கீத பட்டம் பெற்ற இருவரை நியமித்து 12 பெண்களுடன் சங்கீத வகுப்புகள் நடைபெற தொடங்கின. பின்னர், படிப்படியாக வளர்ந்து 5 ஆண்டுகளில் 12 வித்வான்களுடன் 300 குழந்தைகள் சங்கீதம் கற்றுவந்தனர்.

இசைக் கல்லூரி போலவே பாடங்கள் தயாரித்து, தேர்வும் நடத்தப்பட்டது. சங்கீத வித்வான்கள் தேர்வை நடத்தினர். நன்றாகப் பாடும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த இசைப் பள்ளிக்கு சென்னை சங்கீத வித்வத் சபையும் (மியூசிக் அகாதெமி) ஆதரவு அளித்தது.

ஆண்டுதோறும் பிரபல வித்வான்களை அழைத்து வந்து கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் யாவும் நடத்தினோம்.

அப்போது அகில இந்திய வானொலியில் மாதம்தோறும் பிரதி சனிக்கிழமை தேசிய இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதுண்டு. அதில் கர்நாடக இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. அதில் பங்கேற்றவர்கள் எல்லாம் பிரபல வித்வான்கள்.  நாங்கள் நடத்திய கச்சேரிகளில் அவர்களை பங்கேற்கச் செய்தோம்.

இசைக் கலைஞர்கள் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியன், ஆலத்தூர் சகோதரர்கள், மதுரை சோமசுந்தரம், முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர், மஹாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா, திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை (புல்லாங்குழல்), பல்லடம் சஞ்சீவ ராவ் (புல்லாங்குழல்), டி.ஆர். மகாலிங்கம் (புல்லாங்குழல்), தாவாரம் வெங்கடஸ்வாமி நாயுடு (வயலின்), பண்டிட் ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, ராதா ஜெயலட்சுமி, டி.கே. பட்டம்மாள், பாம்பே சகோதரிகள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை (நாகசுரம்) என பல்வேறு இசைக் கலைஞர்களும் பங்கேற்று பெருமை சேர்த்தனர்.

தற்போது, வருடத்திற்கு 2, 3 சீஸன் கச்சேரிகளை ஷண்முகானந்த சங்கீத சபா நடத்தி வருகிறது. 60 ஆண்டுகளுக்கு மேல் சங்கீத சேவை செய்துவரும் இந்த சபா மேலும் மேன்மையுற ஆண்டவன் அருள்புரிய வேண்டும்' என்று பட்டாபிராமன் முடிக்க, அவரது கண்களில் தெரிந்த பெருமிதத்தையும், சபாவின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையும் நம்மால் உணர முடிந்தது.

சபாவின் தற்போதைய செயலர் எஸ். கிருஷ்ணசாமி என்ன கூறுகிறார்?

"வருடந்தோறும் தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். இசைக் கச்சேரிகளுக்கும் ஏற்பாடு செய்கிறோம். நிகழ்ச்சிகளுக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 19) மதுரை மணி ஐயரின் நூற்றாண்டு விழா இசைக் கச்சேரி நடத்துகிறோம்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மாலை 4.15 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மதுரை மணி ஐயரின் பிரதான சீடர் - இசைக் கலைஞர் டி.வி. சங்கரநாராயணனின் குழுவினர் பங்கேற்கின்றனர். "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

  இளம் தலைமுறையினரிடம் இசையை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் மாதத்தில் 2 அல்லது 3 நாள்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம்' என்று கிருஷ்ணசாமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.