தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விரைவில் மொபைல் போனில் டி.டி. நிகழ்ச்சிகள்

உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், கடின உழைப்பு ஒருவரை அடையாளம்

News image
Updated On :9 டிசம்பர் 2012, 5:56 am

அ. சர்ஃப்ராஸ்

உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், கடின உழைப்பு ஒருவரை அடையாளம் காட்டிவிடும். அவ்வாறு அடையாளம் காணப்படுபவர் வி.ஏ.எம். ஹுசைன்.

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும் பிரசார் பாரதி நிறுவனத்தின் உறுப்பினர் (பணியாளர்) பதவியில் உள்ள ஹுசைன், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில் மண் விளக்கில் படித்து, ராணுவத்தில் சேர்ந்து பிரகேடியராக உயர்ந்தவர்.

ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 1987-ம் ஆண்டு கமாண்டேஷன் விருது பெற்றவர். 

தனியார் ஊடகங்களிடையே நிலவும் கடுமையான போட்டிக்கு இடையே தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவை சந்தித்துவரும் சவால்கள் ஏராளம். அது குறித்து, "தினமணி'யுடன் பகிர்ந்து கொள்கிறார் ஹுசைன்.

தினமணி: ராணுவத்தில் சேர்ந்ததற்கான காரணம்...?

ஹுசைன்: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பாய்க்கு பெயர் போன ஊர் பத்தமடை.

எனது தாயார் மாலிக் அலியம்மாள் பாய் நெய்து, என்னையும் சேர்த்து 4 மகன்களை படிக்க வைத்தார். அதுதான் எங்களை வைராக்கியத்துடன் படிக்க தூண்டியது.

பத்தமடை, ராமேஸ்வர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது எனது கிராமத்தில் மின்சாரம் கிடையாது. மண் விளக்கு மூலம் படித்தேன்.

பள்ளியில் தேசிய மாணவர் படையில் இருந்தேன். அப்போது மேஜர் லோகநாதன் என்பவரை சந்தித்த பின்புதான் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியில் வணிகவியல் படித்துவிட்டு, தேர்வு எழுதி பல்லாவரம் பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ) பயிற்சி முடிந்து ராணுவப் பணியில் இணைந்தேன்.

தினமணி: ராணுவத்தில் மறக்க முடியாது நிகழ்வு...?

ஹுசைன்: இந்திய-சீன எல்லைப் பகுதியிலும், கார்கில் போரிலும் பணியாற்றியது மறக்க முடியாதவை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கிரண் செக்டாரில் எங்கள் படை குழுவினருடன் சென்று கொண்டிருந்த போது, எங்களைப் பின் தொடர்ந்து வந்த மூன்று ராணுவ வாகனங்கள் குண்டு வெடிப்பில் சிக்கிக் கொண்டன.

தீவிரவாதிகள் எனக்கு வைத்த வெடிகுண்டு, மழை காரணமாக தாமதமாக வெடித்ததால் நான் உயிர் தப்பினேன்.

தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக உள்ள குப்வாரா பகுதியில் பணியாற்றியதும் மறக்க முடியாதது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கன்சல்வான், சம்சத்வாதி ரிட்ஜ் ஆகிய பகுதியில் எனது தலைமையிலான ராணுவ வீரர்கள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம்.

அங்கிருந்த பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர்  பாடம் நடத்தி வந்தார்.

அந்தப் பள்ளியில் ராணுவத்தினர் பார்வையிட்டு குறைபாடுகளைக் களைந்தோம். இதனால் அப்பகுதி மக்கள் எங்களுடன் நெருங்கிப் பழகினார்கள்.

நாங்கள் அந்தப் பகுதியில் இருந்த வரை எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் தீவிரிவாதத் தாக்குதலுக்கு பலியாகவில்லை. அப்பகுதி மக்களுடன் நாங்கள் கொண்டிருந்த நல்ல உறவும் அணுகுமுறையும்தான் காரணம். அணுகுமுறை சரியாக இருந்தால் எல்லோரும் நண்பர்கள் ஆவார்கள் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

 தினமணி: தூர்தர்ஷன் எப்போது மக்களை திரும்பிப் பார்க்க வைக்கப் போகிறது?

ஹுசைன்: நாட்டில் அனைத்து இடங்களிலும் தூர்தர்ஷன் கால் பதித்துள்ளது. மக்கள் பார்க்கும் தரமான நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் தயாரித்து வருகிறது.

வர்த்தக ரீதியில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுவதில்லை. தேசிய ஒருமைப்பாடு, சமுக நீதி, வேளாண்மை, ஊரக சீரமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் செய்யப்படுகின்றன.

அவற்றை அதிகம் பேர் பார்ப்பதில்லை என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆய்வு நிறுவனங்கள் கூறும் பார்வையாளர்கள் எண்ணிக்கை என்பது நகரங்களில் மட்டும் கணக்கிடப்படுகிறது.

நகரங்களுக்கு வெளியே தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். நாட்டில் பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கு அரசு ஊடகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழகத்தில் "ஐஆர் 8' அரிசியை "ரேடியா அரிசி' என்று பலர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி: பார்வையாளர்களை கவர அரசு தொலைக்காட்சியிடம் புதிய திட்டம் உள்ளதா?

ஹுசைன்: திறமையான இளைஞர்களை சேர்க்க திட்டமிட்டு வருகிறோம். இது தொடர்பாக தேர்வாணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. இதனால், புதுமையான நிகழ்ச்சிகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்.

தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இணையாக செய்திகளை அளிக்க உள்ளோம். தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை யூ டியூப், மொபைலில் பார்க்கும் வசதி அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.

தினமணி: பொதிகை தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

ஹுசைன்: "தனியார் தொலைக்காட்சிகளுக்கு இணையாக பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லை' என்று பரவலாக கூறப்படுவதை ஒரு வகையில் ஒப்புக் கொள்கிறோம். முதல் முறையாக பார்வையாளர்கள் மதிப்பீட்டுக் குழு, நிகழ்ச்சி ஆலோசனைக் குழு என்று இரு குழுக்களை அமைத்துள்ளோம்.

இக்குழுக்களில் தமிழ் ஆர்வலர்களைச் சேர்ப்பதற்கு தேர்வு செய்து வருகிறோம். குழு அமைக்கப்பட்டவுடன் பொதிகை நிகழ்ச்சிகளில் நிறைய மாற்றங்கள் வரும். தரமான நிகழ்ச்சிகளை தயாரிக்க நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறோம்.

தினமணி: அகில இந்திய வானொலி குறித்து என்னென்ன திட்டங்கள் உள்ளன?

ஹுசைன்: நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் வானொலி நிலையங்களில் கொடைக்கானல், திருச்சி ஆகியவை உள்ளன. இந்நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களை இடம்பெறச் செய்வது அவசியம்.

அகில இந்திய வானொலியை டிஜிட்டல் மயமாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். "டிஜிட்டல் ரேடியோ' ஒலிபரப்புக்காக அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்பாண்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் அரசு வானொலியை தனியார் பண்பலை (எஃப்எம்) போல தெளிவாக கேட்கலாம்.

தினமணி: ராணுவத்தில் பணியாற்றியதற்கும், பிரசார் பாரதியில் பணியாற்றுவதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்..?

ஹுசைன்: ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றியபோது நான் யாருக்கும் பதில் கூற வேண்டியதில்லை. இங்கு உறுப்பினர் என்ற முறையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது சுவாரஸ்யம் நிறைந்த கட்டாயமான ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.