குடியரசு தின அணிவகுப்பில் கரகாட்டம்!
நேர்த்தியான, பலவண்ணச் சீருடைகளின் கம்பீரத் தோற்றத்துடன் ஜவான்களின் அணிவகுப்பும், முப்படைகளின் அதிநவீனப் போர்க் கருவிகளின் பிரமிப்பூட்டும் காட்சிகளும், கலாசார நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து கண்களுக்கு விர


நேர்த்தியான, பலவண்ணச் சீருடைகளின் கம்பீரத் தோற்றத்துடன் ஜவான்களின் அணிவகுப்பும், முப்படைகளின் அதிநவீனப் போர்க் கருவிகளின் பிரமிப்பூட்டும் காட்சிகளும், கலாசார நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து கண்களுக்கு விருந்து படைக்கும் குடியரசு தின அணிவகுப்பு ஜனவரி 26-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
நாட்டின் 63-வது குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த ஒன்று. நாட்டின் கலாசாரப் பெருமைகளையும், ராணுவ பலத்தையும் பறைசாற்றும் பெருமைக்குரிய நிகழ்வு.
நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்துறை உயரதிகாரிகள், வெளிநாட்டவர் பலர் பங்கேற்கும் இவ்விழாவில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் கிராமியக் கலையான கரகாட்ட நிகழ்ச்சி இடம் பெறப் போகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 160 பேர் கரகாட்டத்தை நடத்திக் காண்பிக்க உள்ளனர்.
இதற்காக ஜனவரி 9-ம் தேதி தொடங்கி 15 தினங்களாக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு கிராமியக் கலைகள் மேம்பாட்டு மையத்தின் இயக்குநரும், இந்த கலைக் குழுவின் நிகழ்ச்சி வடிவமைப்பாளருமான முனைவர் டி. சோமசுந்தரம் கூறியது:
""தமிழகத்தின் கரகாட்டம் சிலப்பதிகாரக் காவியக் காலத்திய தொடர்புடையது. அந்தக் காவியத்தின் பாத்திரமான மாதவி ஆடும் 11 ஆட்டங்களில் குடக்கூத்து ஆட்டமும் ஒன்று. அதுதான் தற்போது கரகாட்டக் கலையாகும்.
இறைவன் திருமால் தனது பேரன் அனிருத்திற்காக ஆடிய ஆட்டமாகவும் கருதப்படுகிறது. 108 திருப்பதிகளில் தமிழகத்தின் அரிமேயவிண்ணகரத்தில் உள்ள ஸ்ரீ குடமாடும் கூத்தன் பெருமாள் கோயில் கரகாட்டத்தை நினைவுகூர்வதாகும். சக்தி கரகம், ஆடு கரகம் என்று கரக ஆட்டம் இரு பெயர்களில் விளிக்கப்படுகிறது.
மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தெற்குப் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிப் பள்ளிகளைச் சேர்ந்த 8, 9, 11-ம் வகுப்புகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவியர் இப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 120 மாணவியரும், 40 மாணவர்களும் உள்ளனர்.
உதவி நிகழ்ச்சி வடிவமைப்பாளர் "கலைமாமணி' திருச்சி இளங்கோவனும் மாணவர்களுக்குக் கரகாட்டப் பயிற்சி அளித்து வருகிறார்.
தமிழர்களின் கலாசாரப் பெருமை மிக்க இந்த ஆட்டத்தைக் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் நிகழ்த்துவதற்கு வாய்ப்புக் கிடைத்திருப்பது பெருமை.
இரண்டரை நிமிடங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், நையாண்டி மேளத்திற்கான அடவு, சபை வணக்கம், போர் அடவுகள், பூ தூவுதல், தலையில் கரகத்தைத் தாங்கியவாறு தரையில் கைக்குட்டையை எடுத்தல், பிரமிடு தோற்றம் உருவாக்குதல் போன்றவற்றை மாணவ, மாணவியர் நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.
இதற்காக நவம்பர் மாதம் தொடங்கி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். கரகாட்டத்தில் மாணவியருக்கு ரவிக்கை, சேலை, சடையில் குஞ்சம், ஜிமிக்கி, பூ அலங்கரிப்பு, பின் பகுதியில் கொசுவம் என முழுக்க முழுக்க தமிழக கிராமத்து மண்ணின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படுகிறது.
தற்போது ஒத்திகை பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் தங்கள்
திறமையை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் மாணவர்கள் காத்திருக்கின்றனர்'' என்றார் இளங்கோவன்.
இது குறித்து தென்னக பண்பாட்டு மையத்தின் நிர்வாக அலுவலர் கில்பர்ட் கூறியது:
""தென் மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்த மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தெற்கு மண்டலத்தில் கரகாட்டத்தை நிபுணர் குழுவினர் இந்த ஆண்டு தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இரு நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள், 14 பயிற்சியாளர்கள், 9 ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட குழுவும் வந்துள்ளது. ஜனவரி 10-ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு தெற்கு மண்டலம் சார்பில் கர்நாடக மாநிலத்திலிருந்து கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு தமிழகத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 1992-ம் ஆண்டுதான் தமிழகம் சார்பில் பங்களிப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறந்த அணிக்கான பரிசை தமிழகம் வெல்லும் என்ற நம்புகிறோம் என்றார் அவர்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் ஜே. பாரத், ஆர். பிரவீண்குமார், பி.விஜயலட்சுமி, கே. கிருத்திகா ஆகியோரிடம் கேட்டபோது ""குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளதை நினைக்கும்போது பெருமையாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. வாழ்வில் கிடைத்த பொன்னான வாய்ப்பாகவும் நினைக்கிறோம்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...