பார்வையாளர்களை கலைஞர்கள் ஆக்கிய விழா...!
தில்லியில் ரம்மியான மாலை வேளை அது. மங்கலான வெளிச்சம் மிகுந்த கமானி அரங்கில் உற்சாக கீத ஒலி காற்றில் மிதந்து நம் காதில் பாய்ந்து கொண்டிருந்தது. என்னதான் நடக்கிறது என்று ஆர்வத்துடன் உள்ளே சென்று பார்த்


தில்லியில் ரம்மியான மாலை வேளை அது. மங்கலான வெளிச்சம் மிகுந்த கமானி அரங்கில் உற்சாக கீத ஒலி காற்றில் மிதந்து நம் காதில் பாய்ந்து கொண்டிருந்தது.
என்னதான் நடக்கிறது என்று ஆர்வத்துடன் உள்ளே சென்று பார்த்த போது, ஆப்பிரிக்கக் கலைஞர்கள் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் எழுப்பிய உற்சாக ஒலிதான் அது. அவர்களுடன் பார்வையாளர்களும் சேர்ந்து உற்சாகக் குரல் எழுப்பியவாறு இருந்தனர்.
மனித நாகரிகத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் ஆப்பிரிக்கக் கண்டம் பல்வேறு கலாசாரப் பாரம்பரியத்தையும், கலைகளையும் தன்னகத்தே கொண்டது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டமாக உள்ள ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா, சீசெல்ஸ், கானா, செனகல், சூடான், மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைக் குழுவினர் பங்கேற்ற ஆப்பிரிக்க நடன, இசைத் திருவிழாதான் கமானி ஆடிட்டோரியத்தில் இந்த வாரம் திங்கள், செவ்வாய் இரு தினங்கள் நடைபெற்றது.
கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சில் (ஐ.சி.சிஆர்.) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட அந்த நடன, இசை நிகழ்ச்சி ரசிகர்களையும் கலைஞர்களாக மாறச் செய்தது என்றால் அது நிதர்சனம்.
ஆப்பிரிக்கக் கலைஞர்களின் நடன, இசையில் தங்களை மறந்து ரசிகர்கள் பலரும் அவர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஜாம்பியா, சீசெல்ஸ், கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைக் குழுவினர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. வட ஆப்பிரிக்காவின் சூடான், மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல், மாலி மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சீசெல்ஸ் நாடுகளின் நடன, இசைக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
முதலில் செனகல் நாட்டுக் கலைக் குழுவைச் சேர்ந்த நடன, இசைக் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். உடலை வில்போல் வளைத்து அவர்கள் ஆடியது சாகசம் நிகழ்த்துவதுபோல் பார்வையாளர்களை பிரமிக்கச் செய்தது.
ஆண் கலைஞர்களும், பெண் கலைஞர்களும் தரையிலிருந்து மேலே குதித்தும், கை, கால்களை உயர்த்தியும் வீராவேச நடனத்தை வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய செனகல் நாட்டுப்புற உடைகளை அணிந்தும் பெண் கலைஞர்கள் ஆட்டத் திறமையை வெளிப்படுத்தினர். ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதுபோல் அவர்களது நடனம் அமைந்திருந்தது.
கலைஞர்கள் "ஊ.. ஆ...' போன்ற ஒற்றை எழுத்து ஓசைகளை எழுப்பி ஆடியது கலை நிகழ்ச்சிக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டியது.
இசை பெரிதா, நடனம் பெரிதா என்று கேட்கும் அளவுக்கு இசைக் கலைஞர்கள் பல்வேறு கொட்டு முரசு, மத்தளக் கருவிகளை அசுர வேகத்தில் இசைக்க, அதற்கு ஏற்ப நடனக் கலைஞர்களும் தங்களது ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டினர்.
கலைஞர்களுக்கு உற்சாகமூட்ட சிறியவர்களும், பெரியவர்களும் கைதட்டி அவ்வப்போது தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். கூடையை வைத்தும், விசிறியைப் பிடித்தும் ஆடிய நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அடுத்ததாக வந்த சூடான் நாட்டுக் கலைக் குழுவினர், முஸ்லிம் பெருமக்களின் நடனக் கலையை வெளிப்படுத்தினர். பெண்களும் மெல்லிய நடனத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ஈர்த்தனர்.
அவர்கள் அந்நாட்டு மொழியில் பாடி ஆடியபோது, கருத்து புரியாவிட்டாலும் பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. வளைந்த கைத்தடியைப் பிடித்தவாறு பலவித நடன முறைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்களே கலைஞர்களாக மாறியது போல் நடனமாடி மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.
இறுதியாக வந்த மாலி நாட்டுக் கலைஞர்களும் பாடல்கள் பாடியும், நடனமிட்டும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர். மொத்தத்தில் ஆப்பிரிக்க திருவிழா நிகழ்ச்சி பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய கலை நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.
"ஆப்பிரிக்காவின் துடிப்புடன் கூடிய செயல்மிகுந்த நடன, இசையை இந்தியர்களுக்கு வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய, ஆப்பிரிக்க மக்களிடையேயான உறவை வலுப்படுத்தவும், ஆப்பிரக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றத்துக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் துணை புரியும்' என்றார் இசை, நடன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பரதக் கலைஞர் பத்மஸ்ரீ கீதா சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...