தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜனநாயகக் கோவிலுக்கு வயது 60!

நாடாளுமன்றத்தின் அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இன்றைய இளைய தலைமுறையினரில் பலருக்கு தேசத்தின் வரலாறு குறித்தும், நாடாளுமன்றத்தின்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:15 am

அ. சர்ஃப்ராஸ்

நாடாளுமன்றத்தின் அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இன்றைய இளைய தலைமுறையினரில் பலருக்கு தேசத்தின் வரலாறு குறித்தும், நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் தெரியவில்லை என்பது மூத்த குடிமக்களின் பொதுவான கவலையாக வெளிப்படுகிறது.

நாடாளுமன்றம் உருவானது எப்படி, அதன் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது, அதில் சிறப்பாக மக்கள் பணியாற்றிய நாடாளுமன்றவாதிகள் குறித்து, இளைஞர்கள் தெரிந்து கொள்வது என்பது, இன்றைய நிலையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், மேம்படுத்தவும் உதவும் என்பதில் ஐயமில்லை.

ஆம். சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது அன்றைய தலைமுறையினர் என்றால், அதைக் காப்பாற்ற வேண்டியது இன்றைய தலைமுறையினரின் கடமையல்லவா...

நாடாளுமன்றத்தில் முதல் கூட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் ஆகஸ்ட் 14, 1947 இரவு 11 மணிக்கு அரசியல் சாசன மண்டபத்தில் (கான்ஸ்டிட்யூஷன் ஹால்) "வந்தே மாதரம்' என்ற கோஷத்துடன் தொடங்கியது.

ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு "இந்திய மக்களுக்குச் சேவையாற்றுவோம்' என்று நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகப் பின்னர் பொறுப்பேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் பண்டிட் ஜவாஹர்லால் நேரு உள்ளிட்டத் தலைவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நாட்டின் முதல் பொதுத் தேர்தல் 1952-ம் ஆண்டு நடைபெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் அந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கியது.

முதல் மக்களவையில் உறுப்பினர்

இன்று மாநிலங்களவை உறுப்பினர்!

1952-ம் ஆண்டு கூடிய முதல் மக்களவைக் கூட்டத்தொடரில் மணிப்பூர் தொகுதியில் இருந்து சோஷலிச கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ரிஷாங்க் கெய்சிங் நாடாளுமன்ற உறுப்பினரானார். தற்போது 92 வயதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

தள்ளாத வயதிலும் இவர் நாடாளுமன்றத்துக்கு ஆர்வத்துடன் வருகிறார். சுமார் 83 சதவீதம் வருகைப் பதிவு செய்துள்ளார். மூன்று முறை மணிப்பூர் மாநில முதல்வராகவும் கெய்சிங் இருந்துள்ளார்.

ரிஷாங்க் கெய்சிங் முதலாவது மக்களவையில் இடம் பெற்ற உறுப்பினர் என்பது இன்றுள்ள பல உறுப்பினர்கள் அறியாத விஷயம்.

"அன்றைய மக்களவை "கோயில்' போல் திகழ்ந்தது. ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வ விவாதங்கள், சரியானத் திட்டமிடலுடன் உறுப்பினர்கள் ஆற்றும் உரைகள் போன்றவற்றை அனைத்து உறுப்பினர்களும் உன்னிப்பாகக் கவனிப்பர்.

அமளியில் ஈடுபடுவது, கோஷமிடுவது, மையப் பகுதிக்கு வந்து இடையூறு விளைவிப்பது போன்றவை எதுவும் நடைபெறாது. மக்களவைத் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதற்கு அனைவரும் கட்டுப்படுவர். அந்த நெறிகளை இப்போது பார்க்க முடிவதில்லை.

இது வருத்தத்தைத் தருகிறது. வாழும் காலம் வரை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்று கெய்சிங் கூறினார்.

இவரைப் போல் உள்ள மற்றொரு உறுப்பினர் ரேஷம் லால் ஜாங்டே. அவருக்கு வயது 88. காங்கிரஸ் கட்சி சார்பில் முதலாவது, இரண்டாவது மக்களவையில் அவர் உறுப்பினராக இருந்தார். பின்னர் மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார்.

1972-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் சேர்ந்தார். ஒன்பதாவது மக்களவையில் அவர் உறுப்பினராக இருந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்ப்பூரில் இரண்டு அறைகள் கொண்டு வீட்டில் தனது மகன் ஹேம் சந்திராயுடன் வசித்து வருகிறார். வாக்களிக்கும் மக்களின் நலனில் அரசியல்வாதிகள் அக்கறை காட்டுவதில்லை என்பதே தனது கவலை என்கிறார் இவர்.

தற்போதைய உறுப்பினர்களின் சிறப்பு

நாடாளுமன்றம் தொடங்கியபோது உயர்நிலைக் கல்வி கூட இல்லாமல் உறுப்பினர்கள் ஆனவர்கள் மூன்று சதவீதத்தினர். இன்று 23 சதவீத உறுப்பினர்கள் உயர்நிலைக்கல்வி கற்றவர்கள்.

1958ம் ஆண்டில் 58 சதவீத உறுப்பினர்கள் பட்டப் படிப்பு படித்தவர்கள். இன்று 79 சதவீதத்தினர் பட்டப் படிப்பு முடித்தவர்கள்.

முதலாவது மக்களவையில் 70 வயதைக் கடந்த உறுப்பினர்கள் யாரும் இல்லை. இன்று உறுப்பினர்களில் ஏழு சதவீதத்தினர் 70 வயதைக் கடந்தவர்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 70 வயதைக் கடந்த பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லை.

முதலாவது மக்களவையில் ஐந்து சதவீத பெண் உறுப்பினர்கள் இருந்தனர். இன்று 11 சதவீதம் பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.

1950-ம் ஆண்டில் மக்களவை 127 நாள்களும் மாநிலங்களவை 93 நாள்களும் நடைபெற்றன. 2009-ம் ஆண்டில் 73 நாள்கள் மட்டுமே இரு அவைகளும் நடைபெற்றன.

முதலாவது மக்களவையில் சராசரியாக ஆண்டுக்கு 72 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

1976-ம் ஆண்டில் அதிகபட்சமாக 118 மசோதாக்களும் 2004-ம் ஆண்டில் குறைந்தபட்சமாக 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தனிநபர் மசோதா

1970-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு தனி நபர் மசோதா கூட நிறைவேற்றப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் அமைச்சர்களல்லாத எம்.பி.க்கள் மசோதாவைக் கொண்டு வந்தால் அது "தனி நபர் மசோதா' என்று அழைக்கப்படும். அந்த வகையில் நாடாளுமன்றம் தொடங்கியது முதல் இதுவரை 14 தனி நபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 1956-ம் ஆண்டில் ஆறு மசோதாக்கள்

நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்ற அருங்காட்சியகம்

மக்களவைத் தலைவராக சோம்நாத் சாட்டர்ஜி இருந்த போது, நாடாளுமன்ற கட்டமைப்பை விவரிக்கும் வகையில் நாடாளுமன்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதைக் காண வரும் பொது மக்களின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாயகர்கள்

அண்ணாதுரை (1962-67) ; கு. காமராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூரில் 1952-54 வரையும் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் 1967-75 வரையும்) ; ஈ.வெ.கி. சம்பத் (1957}62 வரையில் நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர்) ; இரா. செழியன் (பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1962-67, கும்பகோணம் மக்களவை தொகுதியில் 1967-77) ; வைகோ (மாநிலங்களவையில் மூன்று முறையும் மக்களவையில் இருமுறையும் உறுப்பினராக இருந்துள்ளார்) ; க. அன்பழகன் (1967-71) ; ஆர். வெங்கடராமன் (1977, 1980-ம் ஆண்டுகளில் தென் சென்னை தொகுதியிலிருந்து உறுப்பினராக இருந்தார்) உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களாவர்.

தமிழகத்தைச் சேர்ந்த அனந்தசயனம் ஐயங்கார் மக்களவையின் முதல் துணைத்தலைவராவார். டி.டி.கே., மோகன் குமாரமங்கலம், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாரத ரத்னா சி. சுப்பிரமணியம், பூவராகன், மறைந்த செங்கல்வராயன், மறைந்த நாஞ்சில் மனோகரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

தமிழகத்தைச் சேர்ந்த முரசொலி மாறன் 36 ஆண்டுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1967, 1971 ஆகிய ஆண்டுகளில் மக்களவையிலும், 1977-95 வரை மாநிலங்களவையிலும் ; 1996ம் ஆண்டில் மக்களவைக்கு மூன்றாவது முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ல் பன்னிரண்டாவது மக்களவை, 1999ல் பதின்மூன்றாவது மக்களவையிலும் அவர் உறுப்பினராக இருந்தார்.

15-வது மக்களவையில் தமிழகம்

எம். தம்பிதுரை (அதிமுக): 1984-ம் ஆண்டில் 8-வது மக்களவைக்கு வந்த 34 வயதான உறுப்பினர் தம்பிதுரை. அடுத்த ஆண்டே மக்களவைத் துணை தலைவர் பொறுப்பையும் வகித்தார்.

"கேள்வி நேரத்தின் போது 20 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். ஆனால் தற்போது ஒரு மணி நேரத்தில் 3-4 கேள்விகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

முன்பெல்லாம் அந்தந்த மாநிலத்தார் அவர்களின் தாய்மொழியில் நாடாளுமன்றத்தில் பேசுவர். இந்த நடைமுறை தற்போது காணப்படுவதில்லை.

எனக்கு சிறிய வயதில் மக்களைவைத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டதற்கு எனது கட்சியின் அப்போதைய மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் நான் மக்களவையை நடத்தும் விதத்தைத் தற்போதைய தமிழக முதல்வரும் அப்போதைய மாநிலங்களைவை உறுப்பினரான ஜெயலலிதா உறுப்பினர் மாடத்தில் இருந்து பார்வையிட்டு என்னை பாராட்டினார்.

போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் அவையில் பரபரப்பான விவாதம் நடைபெற்ற போது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பேச முற்பட, அவையை கட்டுப்படுத்தும் நோக்கில் "அமருங்கள்' என்று கூறினேன். அவரும் அதற்கு கட்டுப்பட்டார். அதை மறக்க முடியாது' என்றார் தம்பிதுரை.

என்.எஸ்.வி. சித்தன், (காங்கிரஸ் கொறடா): சிறு சிறு விவகாரங்களுக்கு எல்லாம் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். நாடாளுமன்றம் அதிக நாள்கள் நடைபெற வேண்டும் என்றார் சித்தன்.

திருச்சி சிவா (திமுக மாநிலங்களவைத் தலைவர்): இன்றைய நாடாளுமன்றத்தில் அதிக இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றாலும் மக்கள் தங்களைக் கண்காணிக்கிறார்கள் என்று பொறுப்புடன் செயல்படுகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுகள் நேரு காலத்திலும் இருந்தன. தற்போது ஊடகங்களின் வெளிச்சம் அதிகமாக உள்ளதால் அவைக்குள் நடைபெறும் நிகழ்வுகள் மிகைப்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்றம் அடிக்கடி ஒத்திவைக்கப்படுவது ஆரோக்கிய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று திருச்சி சிவா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.