வெயிலால் வாடும் பூ வியாபாரம்
இறைவனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தாலும் சரி, சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, மலர்களுக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. ஆனால், வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களும் வேனிற்காலம் வந்தால் வாட


இறைவனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தாலும் சரி, சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, மலர்களுக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு.
ஆனால், வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களும் வேனிற்காலம் வந்தால் வாடிப் போவது போல், தற்போது பூக்கள் வரத்துக் குறைவாலும், விலை அதிகரிப்பாலும் பூ கட்டும் தொழிலும் வாடி இருப்பதாகக் கூறுகின்றனர் பூ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர்.
"வெயில் அதிகமாக உள்ளதால் பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. விற்பனையும் மந்தமாக இருக்கிறது. முக்கியமான விசேஷங்களும் ஏதும் இல்லை. இதனால் பூ மட்டுமல்ல இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்களும் வாடித்தான் இருக்கிறோம். ஜூன், ஜூலை வரை மந்தநிலை நிலவும். வெயில் குறைந்தால்தான் பூ உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும். பூ வரத்தும் நன்றாக இருக்கும்.
தற்போது போர்காட், தன்கூர், பானிபட், சோனாபட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூ வரத்து உள்ளது' என்கிறார் மயூர் விஹார் ஃபேஸ் 1-ல் "முத்துமாரியம்மன் ஃபிளவர் ஷோ' நடத்திவரும் கோவிந்தராஜன்.
"வெயில் கடுமையாக இருப்பதால் பூக்கள் வாடாமல் இருக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்கிறோம். குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் வைப்பதற்காக ஈரத் துணியைப் போர்த்தி வைக்கிறோம்' என்றார் பூக்கடைக்காரர் ராமமூர்த்தி.
மார்ச் மாதம் முதல் மல்லிகை வரத்து அதிகமாகவும், குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் குறைவாகவும் இருக்கும். அதற்கேற்ப அதன் விலையும் அதிகரித்துவிடும்.
தற்போது கோடைக்காலம் என்பதால் தில்லிக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து மல்லிகைப் பூ கொண்டு வரப்படுகிறது. அது தற்போது கிலோ ரூ. 340-க்கு விற்கப்படுகிறது. கடைகளில் ஒரு முழம் மல்லிகை ரூ. 22-க்கு விற்கப்படுகிறது.
தில்லியில் மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி (கேந்தா) பூக்கள் ஆகியவற்றின் விற்பனையகங்கள் அதிகம் உள்ளன.
மலைமந்திர், கரோல் பாக், முனீர்க்கா, மயூர் விஹார் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் பூக்கடை நடத்தி வருகின்றனர்.
திலக் நகர், மெஹ்ரௌலி உள்ளிட்ட பிற பகுதிகளில் வட இந்தியர்கள் அதிகமாக பூக்கடை நடத்தி வருகின்றனர்.
"மார்ச் 28-ம் தேதி முதல் நவம்பர் வரை தில்லியில் மல்லிகை வரத்து இருக்கும். நவராத்திரி காலங்களில் கிலோ ரூ. 800 முதல் ரூ. 1,000 வரை விலை இருக்கும்.
குளிர்காலங்களின்போது மதுரை மல்லிகை, விமானம் மூலம் எடுத்து வரப்படுவதால் கிலோ ரூ. 650 ஆக இருந்தாலும் விமானத்தில் எடுத்துவரும் செலவு உள்ளிட்ட இதர செலவுகள் சேர்த்து கிலோ ரூ. 1,150 வரை அதிகரிக்கும். இதனால், குளிர்காலத்தின்போது அதிக பட்சமாக ரூ. 40 வரை மல்லிகைப்பூ ஒரு முழம் விற்கப்படும்.
"மதுரை மல்லிகையை குண்டு மல்லி என்று கூறுவர். அந்த மல்லிகை நீண்ட நேரம் வாடமல் இருப்பதுடன், நல்ல மணமும் கூடியதாக இருக்கும்.
நவம்பர் முதல் மார்ச் 10-ம் தேதி வரை மதுரை மல்லிதான் இங்கு விற்கப்படுகிறது.
அதன் பிறகு அக்டோபர் வரை, மத்தியப் பிரதேசம் இந்தூர் பகுதியில் இருந்து 3 கிலோ பேக்கில் காட்டு மல்லி, விற்பனைக்கு வரும்.
சிம்லாவில் இருந்து மஞ்சள் சாமந்திப் பூ (கேந்தா) அதிகம் வருகிறது.
ரோஜாப்பூ மாலை வழக்கமாக ரூ. 200 வரை விற்கப்படுகிறது. சீசன் காலத்தில் ரூ. 400 வரை செல்லும்.
தமிழர்கள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடர்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் அதிகமாக மல்லிகைப் பூவை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
வரலட்சுமி நோன்புக்குப் பிறகு பூ வியாபாரம் சூடு பிடிக்கும்.
விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய காலங்களில் பூ விற்பனை நன்றாக இருக்கும்' என்று மேலும் கூறினார் "முத்துமாரியம்மன் ஃபிளவர் ஷோ' நடத்திவரும் கோவிந்தராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...