தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜெகத்ரட்சகன் இலாகா மீண்டும் மாற்றம்

திமுகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் பொறுப்புக்கு வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :3 நவம்பர் 2012, 6:46 am

அ. சர்ஃப்ராஸ்

திமுகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் பொறுப்புக்கு வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி மூலம் பிரதமருக்கு கொடுத்த நெருக்குதலால்தான் அமைச்சரவை மாற்றம் நடைபெற்ற ஐந்து நாள்களிலேயே இந்த இலாகா மாற்றம் அரங்கேறியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2009-ம் ஆண்டு முதல் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக ஜெகத்ரட்சன் பதவி வகித்து வந்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2004-2009ஆம் ஆண்டு வரையிலான முதலாவது ஆட்சியிலும் 2009-ஆம் ஆண்டு முதல் இப்போது நடைபெறும் இரண்டாவது ஆட்சியிலும் மத்திய இணை அமைச்சர் பதவியில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் அலுவல் பொறுப்புகள் இல்லை என்ற பரவலான கருத்து நிலவுகிறது.

கூட்டணிக் கட்சிகளை மகிழ்விக்க வழங்கப்படும் "இணை அமைச்சர்' பொறுப்பு என்பது "கௌரவம்' அளிக்கும் பொறுப்பு போலவே கருதப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளிலும் இணை அமைச்சர் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அதிகாரிகள் நிலையில் போதிய மதிப்பு கொடுப்பதில்லை என்ற கவலையும் அவர்களிடையே உள்ளது.

அந்த வகையில் திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகனுக்கு தகவல் ஒலிபரப்புத் துறை ஒதுக்கப்பட்டபோதும் அத்துறையின் கேபினட் அமைச்சராக இருந்த அம்பிகா சோனி தன்வசம் அனைத்து அதிகாரங்களையும் வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

துறை தொடர்புடைய பல முடிவுகளை அவரே தன்னிச்சையாக எடுத்து வந்ததால் தமக்கு முக்கியத்துவம் இல்லை என்ற வருத்தத்தை ஜெகத்ரட்சகன் பலமுறை கருணாநிதியிடம் கூறி வந்ததாகத் தெரிகிறது.

இந்த நேரத்தில்தான் நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் ஜெகத்ரட்சகனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது ஜெகத்ரட்சகனுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டது. அவருக்கு மரபுசாரா எரிசக்தித்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அமைச்சரவை மாற்றம் செய்யும்போது கூட்டணித் தலைவரான கருணாநிதியிடம் காலியாகவுள்ள கேபினட் அமைச்சர், இணை அமைச்சர் பதவிக்கு திமுக சார்பில் யாரையாவது பரிந்துரைக்கும்படி காங்கிரஸ் மேலிடம் கோருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அதே நடைமுறையின்படி இம்முறையும் கடந்த வாரம் கருணாநிதியை பிரதமரின் தூதுவராக மத்திய இணை அமைச்சர் வே. நாராயணசாமி சந்தித்துப் பேசினார். ஆனால், திமுகவுக்கு அமைச்சரவை மாற்றத்தில் எந்தப் பதவியும் வேண்டாம் என கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள ஜெகத்ரட்சகனுக்கு மட்டும் வேறு நல்ல பதவி வழங்கப்படும் என்று திமுக தலைமைக்கு காங்கிரஸ் மேலிடம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் அமைச்சரவை மாற்றத்தின்போது ஜெகத்ரட்சகனுக்கு மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

2009ஆம் ஆண்டு முதல் மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை கேபினட் அமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா பொறுப்பு வகித்து வருகிறார். அவரது அமைச்சகத்துக்கு ஆரம்ப நாள் முதல் இதுவரை இணை அமைச்சர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட பிறகும் ஒதுக்கப்பட்ட அமைச்சகத்தில் ஜெகத்ரட்சகன் தமது பொறுப்பை ஏற்கவில்லை. புதிதாக உருவாக்கப்படும் இணை அமைச்சர் பதவிக்கு தம்மை பிரதமர் நியமித்து விட்டார்; எனக்கு தில்லியில் அலுவலகமோ ஊழியர்களோ இல்லாத நிலையில் பெயரளவுக்கு இணை அமைச்சர் பதவி தேவையா?'' என்ற அளவுக்கு தனது கவலையை அவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கூறி வருத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகே அவரது தூதுவராக பிரதமரைக் கடந்த புதன்கிழமை கனிமொழி சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது. அந்த வகையில் கருணாநிதி கொடுத்த நெருக்குதலால்தான் அமைச்சரவையில் மீண்டும் ஒரு மாற்றத்தை பிரதமர் வெள்ளிக்கிழமை ஏற்படுத்தியதாக திமுக வட்டாரம் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.