பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு! வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்
பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்த பெருமைக்குரியவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.


பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்த பெருமைக்குரியவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.
1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்த இவர், நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சி ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை வியந்து பார்க்க வைத்தவர்.
இந்திய வேளாண் உற்பத்தி பொருள்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். அப்போது, இவருக்கு உறுதுணையாக இருந்தவர், அன்றைய மத்திய அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம்.
இந்திய மண்ணில் விதைத்து, அறுவடை செய்து புரட்சிபுரிந்துவிட்டு நாடாளுமன்றத்திலும் முத்திரை பதித்த எம்.எஸ். சுவாமிநாதன் எந்த ஆடம்பரமும் இல்லாத எளிமையான மனிதர். தனது வாழ்க்கைப் பயணத்தை தினமணி யிடம் பகிர்ந்து கொள்கிறார்.
வேளாண் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
எனது தந்தை எம்.கே. சாம்பசிவம், கும்பகோணத்தில் புகழ்பெற்ற மருத்துவர். கும்பகோணத்தில் யானைக்கால் நோய் வருவதற்குக் காரணமான கொசுக்களை பொதுமக்கள், மாணவர்களின் பங்களிப்புடன் கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி ஓரே ஆண்டில் ஒழித்தார்.
அதனால், கொசு ஒழித்த சாம்பசிவம் என்று அவரை அழைத்தவர்கள் உண்டு. அவரிடமிருந்துதான் கல்வி மூலம் மக்களை ஒன்று திரட்டும் செயல்பாட்டையும் தன்னம்பிக்கையையும் கற்றுக் கொண்டேன்.
நான் மருத்துவம் படித்து எனது தந்தை கட்டிய மருத்துவமனையை நிர்வகிக்க வேண்டும் என்று எனது குடும்பத்தார் விரும்பினர்.
1942-ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்கத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சம் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதனால், வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
1947-ஆம் ஆண்டு கோயம்பத்தூரில் பி.எஸ்ஸி. வேளாண் படிப்பை முடித்துவிட்டு தில்லி பூசா நிறுவனத்தில் புதிய மரபணு பயிற்கள் குறித்து முதுநிலை படிப்பை மேற்கொண்டேன்.
அதன் பின்னர் வேளாண் துறையில் எதிர்காலம் இல்லை என்று உறவினர்கள் வற்புறுத்தி என்னை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வைத்தனர். 1948-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்.ஸýக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், அந்த பணிக்குச் செல்லவில்லை.
ஹாலந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படித்தேன். அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் நிரந்தரப் பணி கிடைத்தது.
எனினும், நாட்டுக்குச் சேவையாற்ற 1954-ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். ஐ.பி.எஸ். பணியில் சேர மீண்டும் அழைப்பு வந்தது. நிராகரித்துவிட்டேன்.
நான்கு மாதங்களுக்குப் பிறகும் எனக்கு வேளாண் துறையில் அரசுப் பணி கிடைக்காத காரணத்தால், விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தினரே எனக்கு மீண்டும் வேலைவாய்ப்பைத் தருவதாக கூறினர்.
ஆனால் நான் அதை ஏற்கவில்லை. பின்னர் இன்றைய ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில், வேளாண் துறையில் அரசு பணி கிடைத்தது.
பசுமைப் புரட்சி ஏற்பட காரணம் என்ன?
1960-ஆண்டுகளில் இந்தியாவுக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டது. பிகாரில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க அமெரிக்காவில் இருந்து ஒரு கோடி டன் கோதுமையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இறக்குமதி செய்தார்.
அப்படிச் செய்யவில்லையென்றால் 1942-ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்க பஞ்சத்தின்போது இருந்ததைவிட பிகாரில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பர்.
அந்த வேளையில், ""இந்தியாவுக்கு உணவு உற்பத்தி செய்ய முடியாது; ஒரு கப்பல் நிறைய உணவு தானியங்கள் வந்தாலும் அவர்களது பசியைப் பூர்த்தி செய்ய இயலாது; ஆடுகளைப்போல் பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்'' என்றெல்லாம் நம்மை வெளிநாட்டினர் ஏளனமாக விமர்சனம் செய்தனர்.
ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட "நாரி' எனப்படும் குட்டை ரக கோதுமைப் பயிர்களை, 1963-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்து இந்தியாவில் அறிமுகம் செய்தேன். அதனால் விவசாயிகளுக்கு 200 சதவீத லாபம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1964-ஆம் ஆண்டு வேளாண் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற சி. சுப்பிரமணியம், கோதுமை இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க நம் நாட்டிலேயே கோதுமை உற்பத்தி செய்ய எண்ணினார். இது குறித்து, பல ஆய்வு திட்டங்களை செய்தோம்.
தில்லியில் கன்ஜன்வாலா பகுதியில் உள்ள ஜோன்டி கிராமத்துக்கு பிரதமர் இந்திரா காந்தியை அழைத்துச் சென்று குட்டை ரக கோதுமை உற்பத்தியைக் காண்பித்தோம்.
அதன் பிறகுதான் 1968-ஆம் ஆண்டு கோதுமைப் புரட்சியை, இந்திரா காந்தி அறிவித்தார்.
நெல் புரட்சி எப்படி ஏற்பட்டது?
1950-ஆம் ஆண்டு புதிய நெற்பயிர்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சீனர்கள் குட்டை ரக நெற்பயிற்களை உருவாக்கினர். அது தைவானுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அது ஐ.ஆர். 8 என்று விவசாயிகள் மத்தியில் பிரபலமானது. அதிக லாபத்தையும் தந்தது.
பசுமைப் புரட்சி ஏற்படுவதற்கு முக்கிய பங்கு யாருடையது?
இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கு இந்திரா காந்தியின் பங்கு மிக முக்கியமானது. உணவு பொருள்களின் சேமிப்பு இல்லை என்றால் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்.
இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்படவில்லை என்றால் பொக்ரான் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தி இருக்க முடியாது. இந்தியாவின் பசுமை புரட்சியினால் ஏராளமான பயன்கள் ஏற்பட்டுள்ளன.
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
பருவ மழை, சந்தை ஆகிய இரண்டும் விவசாயிகளுக்கு முக்கியம். பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரும் உணவு தானியங்களுக்கான பணத்தை விவசாயிகள் உடனடியாக பெறுகின்றனர். இதன் காரணமாகத்தான் அந்த மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது. சந்தையை பலப்படுத்தினால் விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்வது நடைபெறாது.
தமிழகத்தின் வேளாண் உற்பத்தி பற்றி உங்கள் கருத்து...?
தமிழக விவசாயிகள் சிறப்பாக உற்பத்தி செய்துவருகிறார்கள். பஞ்சாபுக்கு இணையாக தமிழகமும் உற்பத்தி செய்து வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர்தான் தட்டுப்பாடு.
1990-ஆம் ஆண்டு சதுப்பு நிலக் காடுகள் (மாங்குரோவ்) அமைக்கப்பட்டன. தமிழகத்தில் அதை அகற்றிவிட்டு இறால் பண்ணைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது தமிழக திட்டக்குழுவில் இருந்த நான், அதை ஏற்கவில்லை. சுனாமி ஏற்பட்ட பிறகுதான் சதுப்புநிலக் காடுகளின் மகிமையை அனைவரும் தெரிந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் உங்கள் கருத்துகள் ஏற்று கொள்ளப்படுகின்றனவா?
உணவு உற்பத்திக்கு முக்கியத்துக்கு அளித்த மத்திய அரசு அதை சேமித்து வைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை மாநிலங்களவையில் வலியுறுத்தினேன். உணவு தானியங்களை சேமித்து வைக்க அரசுதான் செலவிட வேண்டும். இதில் தனியார் பங்களிப்பை அரசு எதிர்பார்க்கக் கூடாது. மாநிலங்களவையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலவற்றை ஏற்று அரசு இப்போது செயல்படுத்தி வருகிறது.
மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மரபணு விதைகள் தொடர்பாக ஆய்வு செய்ய சுயேச்சையான மரபணு கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்க வேண்டும். அதில் பொதுமக்கள், அரசியல், ஊடகம் ஆகிய பல்வேறு பிரிவினரின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.
இந்திய வேளாண் துறையில் உங்கள் கனவு நிறைவேறிவிட்டதா?
விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும். சீனாவைப் பொருத்தவரை அவர்களின் வேளாண் உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்திவிட்டதால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியாது. ஆனால் இந்தியாவில் வேளாண் உற்பத்தி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் வேளாண் உற்பத்தி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வேளாண் உற்பத்தி ஏற்படாது என்று கூறியவர்களுக்கு பசுமைப் புரட்சி ஏற்படுத்தி காண்பித்துவிட்டோம்.
பட்டினியில்லாத இந்தியாதான் என் கனவு! தற்போது மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டம் அதை நிறைவேற்றும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கு
இந்திரா காந்தியின் பங்கு மிக முக்கியமானது.
உணவு பொருள்களின் சேமிப்பு
இல்லை என்றால் சுதந்திரமான
வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது
என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...