தில்லி உயிரியல் பூங்காவில் 'சிம்பன்ஸி' ரீட்டாவுக்கு பிறந்த நாள் விழா: இந்தியாவின் அதிக வயதான பெண் மனிதக் குரங்கு

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவரும்சிம்பன்ஸி (மனிதக் குரங்கு) ரீட்டாவின் 58-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவரும்சிம்பன்ஸி (மனிதக் குரங்கு) ரீட்டாவின் 58-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தில்லி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் சிம்பன்ஸி ரீட்டாவின் எடை 110 கிலோ. இதனால், அதற்கு கட்டுப்பாட்டு உணவு முறையே கடை பிடிக்கப்படுகிறது. தினமும் பழம், காய்கறி என சுமாராக 2 கிலோ உணவு பிரிக்கப்பட்டு மூன்று வேளை வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரீட்டாவின் 58ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட தேசிய உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி ரீட்டாவின் பிறந்த நாள் விழா உயிரியல் பூங்காவில் மிகச் சிறப்பான வகையில் கொண்டாப்பட்டது. விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், பார்வையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் பூங்கா இயக்குநர் ரேணு சிங் கேக் வெட்டி கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
முன்னதாக சிம்பன்ஸி ரீட்டாவுக்கு இனிப்புகள், பழங்கள், விளையாடுவதற்கு பந்து ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. பந்தை உணவுப் பொருள் என நினைத்துக் கொண்ட ரீட்டா, அதை கிழித்தெறிந்தது. பின்னர் குளிருக்கான கம்பளி போர்வையும் அதற்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியையொட்டி, தில்லி ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 4-இல் உள்ள ரம்ஜாஸ் பள்ளி மாணவ, மாணவிகள், பூங்கா ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வாழ்க்கை குறிப்பு: இந்தியாவிலியே வயது முதிர்ந்த பெண் மனிதக் குரங்காக சிம்பன்ஸி ரீட்டா உள்ளது. இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் உயிரியல் பூங்காவில் 1960, டிசம்பர் 15-ஆம் தேதி பிறந்தது. விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 1964-ஆம் ஆண்டு தில்லி உயிரியல் பூங்காவுக்கு ரீட்டா கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. பின்னர் லண்டன் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மேக்ஸ் என்ற ஆண் மனிதக் குரங்கு இதனுடன் ஜோடிசேர்க்கப்பட்டது.
இந்த ஜோடி நான்கு குட்டிகளை ஈன்றது. ஆனால், அவை உயிர் பிழைக்கவில்லை. 1985, ஏப்ரலில் சிம்பென்ஸி ரீட்டா, இன விருத்திக்காக சண்டீகர் மாநிலத்தில் உள்ள சத்பீர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பபட்டது. பின்னர், 2006, நவம்பரில்மீண்டும் தில்லி தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. இது அன்று முதல் இன்று வரை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com