/

மீனவர் நலன் காக்க தனி அமைச்சகம்: மக்களவையில் பாமக வலியுறுத்தல்

மீனவர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் மீன் வளத்திற்கான தனி அமைச்சகத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பாமக வியாழக்கிழமை கோரிக்கை வைத்து. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:12 pm

DIN

மீனவர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் மீன் வளத்திற்கான தனி அமைச்சகத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பாமக வியாழக்கிழமை கோரிக்கை வைத்து. 
இதுதொடர்பாக மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் நேரத்தில் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த கோரிக்கை:  ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளம், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இப்புயலில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 4, 505 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. 
லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பாக்கு, நெல், வாழை, தென்னை மரங்கள்அழிந்துவிட்டன. தொடக்கத்தில் 3 ஆயிரம் மீனவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால், அந்தச் சமயத்தில் மீட்பு பணிகள் வெறும் 16 கடல் மைல்கள் தொலைவில்தான் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மீனவர்கள் 100 கடல் மைல் தொலைவில் சென்றிருந்தனர். இது சம்பந்தப்பட்ட துறையினரின் மெத்தனத்தையே காட்டுவதாக உள்ளது. புயல் பாதித்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும், 257 மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருப்பிடம் குறித்த தகவலும் தெரியவில்லை. ஆனால், 12 மீனவர்கள் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு மீனவர் காணாமல் போனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகே அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு நிவாரணம் அளிக்கப்படுவதாக மீனவர் சமூகத்தினர் கூறுகின்றனர்.
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு காணாமல்போன 257 மீனவர்களையும் இறந்ததாக அறிவித்து அவர்களது குடும்பத்திற்கு நிவாரணமும், வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று, இந்தப் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு நிவாரண நிதியாக ரூ. 9,312 கோரியிருந்த நிலையில், மத்திய அரசு ரூ.144 கோடியை அளித்துள்ளது. தற்போது, அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. அப்பணியை விரைவுபடுத்த வேண்டும்.
மேலும், கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மீன் வளத்திற்கான தனி அமைச்சகத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.