அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரின் நீதிமன்றக் காவல் நவம்பர் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் செளத்ரி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, சுகேஷ் சந்திர சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு வழக்குரைஞர் சஞ்சய் ஷெராவத், "வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜுனா, நரேஷ், லலித் குமார் ஆகியோருக்கு எதிரான துணை குற்றப்பத்திரிக்கை தயாராகி வருகிறது. எனவே, துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, நீதிபதி பூனம் செளத்ரி, "வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏன் காலதாமதமாகிறது? எதனால் காலதாமதமாகிறது? ஒருவருக்கு எதிராக மட்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை ஏன் தாக்கல் செய்யவில்லை?' என கடிந்து கொண்டார்.
இதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர், "குற்றப்பத்திரிகையில் ஆவணங்கள், ஆதாரங்கள் தொடர்பான விவரங்கள் சேர்க்க காலமாகிறது' என்றார்.
இதற்கு சுகேஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தீபா முருகேசன் ஆட்சேபம் தெரிவித்ததுடன், விசாரணை அதிகாரி ஆஜராக நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி, தாமதமாவதற்கான காரணங்கள் குறித்து நவம்பர் 9-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார். சுகேஷின் நீதிமன்றக் காவல் வரும் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின் போது விசாரணை அதிகாரி ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்து, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.