துப்பாக்கியால் சுட்ட பிறகும் ஏடிஎம் கொள்ளையை முறியடித்த காவலாளி!

கொள்ளையர்களால் துப்பாக்கியால் சுட்டு  குண்டடிபட்ட பிறகும், 40 வயதான காவலாளி தலீப் திவாரி ஏடிஎம்  கொள்ளைச் சம்பவத்தைக் கம்பீரத்துடன் தடுத்துள்ளார்.
Updated on
1 min read

கொள்ளையர்களால் துப்பாக்கியால் சுட்டு  குண்டடிபட்ட பிறகும், 40 வயதான காவலாளி தலீப் திவாரி ஏடிஎம்  கொள்ளைச் சம்பவத்தைக் கம்பீரத்துடன் தடுத்துள்ளார்.
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தச் சம்பவத்தை காண்போர் காவலாளியின் வீரத்தை பாராட்டி வருகின்றனர். தலீப் திவாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நலமுடன் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் மேலும் கூறியதாவது:
வெளிப்புற தில்லியின் பகுதியான கன்சாவாலாவில் உள்ள ஏடிஎம்மில் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் பணம் நிரப்பும் வேன் வந்தது. அதில் இருந்த காவலாளி தலீப் திவாரி, ஏடிஎம்மிற்கு வெளியே நிற்க, அதிகாரிகள் ஏடிஎம் உள்ளே சென்று பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆனால், தலீப் திவாரி மட்டும், ஏடிஎம் பாதுகாப்புக்கு நின்றார். அவரை நோக்கி வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். தலீப் திவாரி கொள்ளையர்களைத் தடுத்தபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில், தலீப் திவாரியின் வலது காலில் தோட்டா பாய்ந்தது. இருப்பீனும், சற்றும் தளராத தலீப் திவாரி கொள்ளையர்களுடன் போராடி அவர்கள் ஏடிஎம்மிற்குள் புகுவதைத் தடுத்தார். 
தலீப் திவாரியைத் தாக்கியும் கொள்ளையர்களால் ஏடிஎம்மிற்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து, ஏடிஎம்மிற்குள் இருந்த அதிகாரிகள் வெளியே வந்ததைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 
சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் குழு அமைத்து தேடி வருகின்றனர். இந்தக் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெறும்போது ஏடிஎம்மில் நிரப்புவதற்காக ரூ. 15 லட்சம் ரொக்கம் வேனில் எடுத்துவரப்பட்டது. இதை தெரிந்துக் கொண்டே கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com