மயூர்விஹார் கணபதி கோயிலில் நான்கு நாள் சிவராத்திரி விழா

மயூர் விஹார் கணபதி கோயிலில் நான்கு நாள் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
Updated on
2 min read

மயூர் விஹார் கணபதி கோயிலில் நான்கு நாள் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நாளான புதன்கிழமை இரவில் சிவராத்திரி பூஜைகள் விடிய விடிய நடைபெற உள்ளது.
மயூர் விஹார் ஃபேஸ் -2-இல் ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியின்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகா சிவராத்தி விழா பிப்ரவரி 14-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, உடல் நலம், உலக நலத்திற்கான மிருத்யுஞ்ஜெய ஜபம், ஹோமம் இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
தென் இந்தியாவைச் சேர்ந்த ஏழுக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் ஹோமம், ஜபத்தில் பங்கேற்று 81 ஆயிரம் தடவை மிருத்யுஞ்ஜெய மந்திரங்களை உச்சரிக்கும் வேள்வில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மூன்று தினங்கள் இந்த ஜபம் நடைபெற உள்ளது. சிவராத்திரி நாளான புதன்கிழமை மகா மிருத்யுஞ்ஜெய ஹோமம் நிறைவுபெறுகிறது. 
இதுகுறித்து காருண்ய மகா கோயில் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ராகவன் கிருஷ்ணன் கூறியதாவது:
இந்த மிருத்யுஞ்ஜெய ஜபம் என்பது மிகவும் சிறப்புக்குரியது. குறிப்பாக, மிருத்யுஞ்ஜெய ஜபத்தை 81 ஆயிரம் ஆவிருதி செய்வது அதிலும் சிறப்பானதாகும். மனிதனின் ஜாதகத்தில் 8-ஆம் இடம் உடல்நலத்துடன் தொடர்புடையது. இதனால், உடல் நலத்துடன் தொடர்புடைய 8-ஆம் எண்ணைக் குறிக்கும் வகையில் 81ஆயிரம் ஆவிருதி ஜபிக்கப்படும். மரண பயமின்றி நலமுடன் வாழ மிருத்யுஞ்ஜெய மந்திரம் ஜபிக்கப்படுகிறது. நாளொன்று சுமார் 9 மணி நேரம் என மூன்று நாள்கள் தொடர்ந்து 81 ஆயிரம் முறை இந்த மந்திரம் ஜபிக்கப்பட உள்ளது. அதேபோன்று, 8,100 ஆவிருதி ஹோமத்தின்போது ஜபிக்கப்படும். இந்த ஜபத்தின்போது மந்திர உச்சாடனத்தை காதால் கேட்பவர்களுக்கும், ஹோமத்தை கண்ணால் பார்ப்பவர்களுக்கும் உடல், மன ஆரோக்கியம் அளிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், சிவராத்திரி அன்று ஹோமம் நடைபெறுவது மிகவும் விசேஷம். அன்றைய தினத்தில் பார்வதி- பரமேஸ்வரன் திருமணம் நடைபெறுவதால், அந்த நாளில் இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. 
சிவராத்திரி தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி கோயிலில் நான்கு கால பூஜைகள் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நடைபெறும். பிப்ரவரி 15-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு இந்த பூஜைகள் நிறைவுபெறும். இந்த நான்கு கால பூஜைகளின்போது 11 வேத விற்பனர்கள் மஹன்யாஸ ருத்ர ஜபம் செய்வர். சிவனுக்கு பல்வேறு அலங்காரங்கள் நடைபெறும். 
இந்த ஆண்டு நிகழ்வின்போது, வழக்கமாக தென்னிந்திய கோயில்களில் அமைக்கப்படுவது போல, காருண்ய மகா கணபதி கோயிலின் ராஜகோபுரம் எல்இடி விளக்குகள் மூலம் நிரந்தரமாக இரவில் மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பிப்ரவரி 18-ஆம் தேதி கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவருக்கு சிறப்பு ஜபமும், ஹோமும் நடத்தப்படும். ஆண்டுத் தேர்வில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் சிறப்பாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. ஆகவே, சிவராத்திரி, ஹயக்ரீவ ஹோமங்களில் சுவாமிகளின் அருளைப் பெற பக்தர்கள் திரளமாக கலந்துகொள்ள வேண்டும் என்றார் ராகவன் கிருஷ்ணன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com