/

பாஜக ஏஜெண்ட் போல செயல்படுகிறார் அனில் பய்ஜால்: ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.  

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:32 pm

DIN

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.  
இது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
திங்கள்கிழமை நள்ளிரவு தலைமைச் செயலாளர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் அளித்த ஆதாரமற்ற புகாரின் பேரில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானதுல்லா கான், பிரகாஷ் ஜர்வால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஆனால், தில்லி தலைமைச் செயலகத்தில் அமைச்சர் இம்ரான் ஹுசேனையும், அவரது உதவியாளர் சஹீல் அரோராவையும் தாக்கியவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். 
அமைச்சர் இம்ரான் ஹுசேன் தாக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி பதிவுகள் உள்ளன. அவரை கத்ரி, சந்தீப் சுகாக், சஹீல், சோனு ஆகியோர் தாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறை பாரபட்சமாக நடந்து கொள்கிறது. துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்பட்டு, தில்லி அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார். 
துணை முதல்வர் இல்லம் அருகே பாஜகவினர் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜகவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த ஆம்
 ஆத்மிக்கு அனுமதி இல்லை. ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அமைச்சர் ராஜேந்தர் பால் கெளதமையும், எம்எல்ஏ அஜய் தத்தையும் போலீஸார்ர் தடுத்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.