பிஎன்பி ஊழல் விவகாரம்: மத்திய நிதியமைச்சர் பதவியிலிருந்துஜேட்லி ராஜிநாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நிகழ்ந்துள்ள ரூ.11,400 கோடி ஊழல் விவகாரத்தில், தார்மீக அடிப்படையில் மத்திய நிதியமைச்சர்


பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நிகழ்ந்துள்ள ரூ.11,400 கோடி ஊழல் விவகாரத்தில், தார்மீக அடிப்படையில் மத்திய நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜேட்லி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், புணேயில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிருத்விராஜ் சவாண் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தனது ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வரும் முன்னர், நீரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறி விட்டார். நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நீரவ் மோடியின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மத்திய அரசு உதவி செய்துள்ளது. லலித் மோடி, விஜய் மல்லையா போன்று தற்போது நீரவ் மோடியும், மத்திய அரசின் ஆதரவுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
பிஎன்பி ஊழல் குறித்து கடந்த 4 நாள்களில் ஒரு வார்த்தை கூட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசவில்லை. அதேநேரத்தில், வங்கித் துறையுடன் சிறிதும் தொடர்பில்லாத மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஒட்டுமொத்த விவகாரமும், மிகவும் தீவிர பிரச்னையாகும். இந்த ஊழலுக்குப் பிறகு, ஒட்டுமொத்த வங்கி அமைப்பின் மீதும் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, இந்த விவகாரத்துக்கு தார்மீக பொறுப்பேற்று, மத்திய நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜேட்லி ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார் பிருத்விராஜ் சவாண்.
முன்னதாக, நீரவ் மோடி விவகாரத்தில் எந்தவித கருத்தும் அளிக்காமல் இருந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி முதன்முறையாக செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியபோது, எந்த எல்லைக்கு சென்றாலும், குற்றவாளிகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி அளவுக்கு வைர வியாபாரி நீரவ் மோடி மோசடி செய்து விட்டதாக செய்திகள் அண்மையில் வெளியானது. இதுதொடர்பாக அந்த வங்கி நிர்வாகம் அளித்த புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. எனினும், இந்த ஊழல் விவகாரம் வெளியே தெரிய வரும் முன்னரே, நீரவ் மோடி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது அவர், அமெரிக்காவில் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...