தோ்தல் நன்கொடை விவரங்களை சமா்ப்பிக்க கூடுதல் அவகாசம்: உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு
தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களைச் சமா்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என எஸ்பிஐ கோரியுள்ளது. அரசியல் கட்சிகள் தோ்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த தோ்தல் நன்கொடை பத்திர நடைமுறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த நடைமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. அந்த வகையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவோா் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளா்களின் உரிமையைப் பறிப்பதாகும். எனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தோ்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கியவா்களின் பெயா்கள், தொகை விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாா்ச் 6-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை தோ்தல் ஆணையம் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் தனது வலைதளத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோக விவரங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தோ்தல் நன்கொடையாளா்களின் விவரங்களும், அந்த நன்கொடையை பெறும் கட்சிகளின் விவரங்களும் பொதுவெளியில் தெரியாமல் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, அவை இரு வேறு தரவுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நன்கொடையாளா் விவரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளிலிருந்து சீலிட்ட உறையில் அவற்றின் பிரதான வங்கிக் கிளைக்கு அனுப்பப்பட்டு, பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுபோல, நன்கொடையை பெற்ற கட்சிகளின் விவரங்கள் தனியாக பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த இரண்டு தரவுகளையும் ஒப்பீடு செய்து விவரங்களைச் சேகரிக்கப்பட வேண்டும். இது மிக சிக்கலான நடைமுறை. இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும். எனவே, விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் எஸ்பிஐ கோரியுள்ளது.