தேசியத் தலைநகர் தில்லியில் காற்று மாசு கடுமையான பிரிவில் நீடிப்பதால், முக்கிய இடங்களில் மூன்று நாள்களுக்கு தொழிற்சாலைகளை மூடவும், கட்டுமானச் செயல்பாடுகளுக்கு தடை விதித்தும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், காற்றின் தரமும் கடுமையான பிரிவில் நீடித்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு தலைநகரானது கடுமையான காற்று மாசுவை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று நாள்களாக காற்று மாசு கடுமையான பிரிவில் தொடர்ந்து நீடித்தது. காற்றில் உள்ள மாஹசுபடுத்திகள் பரவலுக்கான விரும்பத்தகாத காரணிகள் தொடர்ந்து இருந்து வருவதாலும், காற்றின் வேகம் மற்றும் இதர வானிலை காரணிகளாலும் இந்நிலை தொடர்கிறது.
தற்காலிகத் தடை: இதனால், வாஜிர்பூர், முன்ட்கா, நரேலா, பவானா, சாஹிபாபாத், ஃபரீதாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வரும் புதன்கிழமை வரை மூன்று நாள்களுக்கு தொடர்ந்து மூடப்பட வேண்டும் என தில்லி தலைமைச் செயலர் விஜய் குமார் தேவுக்கு இபிசிஏ தலைவர் புரே லால் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தில்லி, ஃபரீதாபாத், குருகிராம், காஜியாபாத், நொய்டா ஆகிய இடங்களிலும் புதன்கிழமை வரை அனைத்துக் கட்டுமானச் செயல்பாடுகளுக்கும் இபிசிஏ தடை விதித்துள்ளது.
இது குறித்து தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவினர் கூறியதாவது: இபிசிஏவின் இந்தத் தடை திங்கள்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதை உடனடியாக அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியவை கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சிறப்புக் குழுக்களை பணியில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து போலீஸாருக்கு இபிசிஏ உத்தரவிட்டுள்ளது. அதிக வாகனங்கள் செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் இன்றி இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று, கிழக்கு மற்றும் மேற்கு வட்ட விரைவுச் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதை உறுதிப்படுத்தவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதத் தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இபிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பது உள்பட அனைத்து தள ரீதியான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அக்குழுவினர் தெரிவித்தனர்.
தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தல்: இது தொடர்பாக இபிசிஏ தலைவர் புரே லால், தில்லி அரசின் தலைமைச் செயலர் விஜய் குமார் தேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாசுபடுத்திகளை அனுமதிக்கும் காற்றோட்ட குறியீடு மிகவும் மோசமான அளவில் உள்ளது. இந்த நிலை அடுத்த இரு தினங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில தினங்களுக்கு எதிர்பார்க்கப்படும் வானிலை சூழல் அடிப்படையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பணிக் குழு அளித்திருந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
449 புள்ளிகள் பதிவு: தில்லியின் காற்றின் தரம் திங்கள்கிழமை 449 ஆக பதிவாகி இருந்தது. இது கடுமையான பிரிவில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இது தொடர்பாக அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:
தலைநகரில் 32 இடங்களில் காற்றின் ஒட்டுமொத்த தரம் கடும் பிரிவில் உள்ளது. ஐந்து இடங்களில் மிகவும் மோசம் எனும் பிரிவில் இருந்தது. தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகளில் நொய்டாவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 464 புள்ளிகள் எனும் அளவில் கடுமையான பிரிவில் இருந்தது. மேலும், ஃபரீதாபாத், காஜியாபாத் ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் கடும் பிரிவில் நீடித்தது. ஒட்டுமொத்த பி.எம். 2.5 நுண்துகள் அளவு 410 ஆகவும், பி.எம். 10 நுண்துகள் அளவு 585 ஆகவும் இருந்தது. தில்லியின் காற்றின் தரம் சனிக்கிழமை கடுமையான பிரிவை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரம் 450 ஆக நிகழாண்டில் இரண்டாவது தடவையாக அதிக அளவில் இருந்தது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய வெப்பமண்டல கல்வி நிறுவனம் (ஐஐடிஎம்) தகவலின்படி, "காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை மேம்படக் கூடும். ஆனால், காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடிக்கும். காற்று வேகம், காற்றோட்டக் குறியீடு ஆகியவை மாசுபடுத்திகள் பரவலுக்கான விரும்பத்தகாத சூழலாக உள்ளது. காற்றோட்ட குறியீடு என்பது மாசுபடுத்திகளை பரவச் செய்யும் காற்றின் வேகமாகும். காற்றின் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டருக்கு குறைவாக இருந்தால் மாசுபடுத்திகள் பரவலுக்கான விரும்பத்தகாத சூழலாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவுகள் என்னென்ன?
* முக்கிய இடங்களில் தொழிற்சாலைகளின் செயல்பாட்டுக்கு 3 நாள்கள் தடை.
* தில்லி, என்சிஆர் பகுதிகளில் கட்டுமான நடவடிக்கைகளுக் கும் தடை.
* சாலைகளில் வாகன நெரிசல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* கழிவுகள் எரிக்கப்படாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







