திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி முறையை அழித்துவிடும்: ஆம் ஆத்மி

மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள

Updated On :9 ஜூலை 2018, 12:11 am

மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அது கூட்டாட்சி முறையை அழித்துவிடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய, பிராந்திய அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்கும் கூட்டம், சட்ட ஆணையம் சார்பில் தில்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவனில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூத்த தலைவர் ஆஷிஷ் கேதான் தலைமையிலான குழு பங்கேற்றது.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் அது நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையையும்,  கூட்டாட்சி முறையையும் அழித்துவிடும். மேலும், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பையும் சிதைத்துவிடும். இது தொடர்பான விரிவான அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்ட ஆணையம் சார்பில்  சனிக்கிழமை நடைபெற்ற  கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், அஇஅதிமுக, கோவா பார்வர்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்றன. அப்போது,  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முன்மொழிவுக்கு அக்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
சமாஜவாதி, டிஆர்எஸ் ஆதரவு: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆதரவு தெரிவித்துள்ளன. சமாஜ்வாதி கட்சியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கிறது. இதுபோன்ற தேர்தல் நடைமுறையை 2019-ஆம் ஆண்டே செயல்படுத்த வேண்டும். மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பிற கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரையோ அல்லது ஆளுநரையோ அணுகலாம். இவ்வாறு அமையும் கூட்டணி அரசு குறிப்பிட்ட காலம் வரை ஆட்சியில் நீடிக்கும் என்பதற்கான உறுதிமொழிக் கடிதத்தை கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமிருந்து குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ பெறலாம். தேர்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சி ஒருவேளை 3 ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தால், புதிய அரசு அமையாது என்ற சூழலில்,  எஞ்சியுள்ள 2 ஆண்டுகளுக்கு மட்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்றார் அவர்.
இதேபோல, கூட்டத்தில் பங்கேற்ற  தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த பி. வினோத் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை ஆதரிப்போம் என எங்கள் கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் மத்திய அரசும், மாநில அரசுகளும் எவ்வித கால விரையமும் இல்லாமல் 5 ஆண்டுகள் முறையாக இயங்க முடியும். 
மேலும், கோடிக்கணக்கான ரூபாயும், நேரமும், செலவினங்களும் மிச்சமாகும். எவ்வித இடையூறுகளும் இல்லாமல் பிரதமரும், முதல்வர்களும் 5 ஆண்டுகள் வரை செயல்பட முடியும்' 
என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.