நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பயணிகளைக் கவரும் வகையில் புதிய வடிவில் ரயில் பெட்டிகள்!

சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில், புதிய வடிவமைப்புடன் கூடிய தொடர் கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட ரயில் பெட்டிகள்

News image
Updated On :8 மே 2018, 6:57 pm

வே.சுந்தரேஸ்வரன்

சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில், புதிய வடிவமைப்புடன் கூடிய தொடர் கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட ரயில் பெட்டிகள் பயணிகளைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்வோர் இயற்கைக் காட்சிகளை பார்த்து ரசிக்கும் வகையில் இப்பெட்டிகள் இருக்கும்.
அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் மிகப் பெரிய துறையான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் சிற்றூர் முதல் பெருநகரங்கள் வரையிலும் ரயில் சேவையை அளித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் பல்வேறு இடங்களுக்கு ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், பயணிகளின் தேவையை உணர்ந்து பல்வேறு வசதிகளையும் ரயில்வே துறை வழங்கி வருகிறது. 
இந்நிலையில், பயணிகளைக் கவரும் வகையிலும், இயற்கை காட்சிகளைப் பயணிகள் பார்க்கும் வகையிலும் குளிர்சாதனப் பெட்டிகளில் தற்போது அகலமான கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜதானி, சதாப்தி போன்ற அதி விரைவு ரயில்களிலும், வேறு சில குறிப்பிட்ட ரயில்களிலும் இந்த அகலமான கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இவற்றுக்கு இடையே ஆங்காங்கே இடைவெளியாக செங்குத்துத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வெளித் தோற்றத்தில் கண்ணாடிகள் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருப்பது போன்று இருக்கும். இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ளது போல கண்கவர் வடிவமைப்பிலான புதிய ரயில் பெட்டிகளை உள்நாட்டில் வடிவமைத்து செயல்பாட்டில் விடுவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
1,100 எம்எம் நீளமும், 680 எம்எம் உயரமும் கொண்ட இந்த புதிய வடிவமைப்பு "எல்ஏசிசிஎன்' ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஆவடியில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையின் (ஐசிஎஃப்) மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.வி. வெங்கடேசனுடன் தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது: 
ஐசிஎப் தொழிற்சாலையில் குளிர்சாதன (ஏசி) வசதி செய்யப்பட்ட மூன்றடுக்கு படுக்கை வசதி ரயில் பெட்டிகளில் வழக்கமாக தனித்தனி ஜன்னல் கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கும். இரு ஜன்னல்களுக்கு இடையே தடுப்பும் இருக்கும். தற்போது, புதிய வடிவமைப்பில், நீண்ட தொடர் கண்ணாடி வடிவைப்புடன் ஜன்னல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இரு ரயில் பெட்டியின் கண்ணாடிகளுக்கு இடையே உள்ள தூண் பகுதியில் ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தப்படும்.
இதனால், ரயில் பெட்டியை வெளியில் இருந்து பார்க்கும் போது அழகான தோற்றத்துடன் காணப்படும். மேலும், உள்ளிருந்து வெளியில் இயற்கை காட்சிகளை பயணிகள் வழக்கம் போல தங்களது இருக்கையில் அமர்ந்தவாறு பார்த்தபடி பயணத்தை மேற்கொள்வர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற தொடர் ஜன்னல் கண்ணாடி வவைப்புடன்கூடிய அமைப்பை அனைத்து குளிர்சாதன ரயில் பெட்டிகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்த ஐசிஎப் திட்டமிட்டுள்ளது.
இந்த கூடுதல் மாற்றப்பட்ட வடிவமைப்பை மேற்கொள்வதற்கு அதிகச் செலவும் ஏற்படுவதில்லை. வழக்கமாக மூன்றாம் வகுப்பு எல்எச்பி குளிர்சாதனப் பெட்டியைத் தயாரிக்க ரூ. 2 கோடி செலவாகும். இந்தப் புதிய வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டியைத் தயாரிக்க கூடுதலாக ஒன்றரை லட்சம் மட்டுமே செலவாகும். அதேவேளையில், ரயில் பெட்டியின் தோற்றம் மேலும் பொலிவுரும்.
சோதனைக்கு தயார்: தற்போது இந்த புதிய வடிவமைப்பிலான ரயில் பெட்டி தயார் நிலையில் உள்ளது. இது சோதனை ஓட்டத்திற்கு விடப்பட உள்ளது. வெற்றிகரமாக இயக்கப்பட்டதற்கான சோதனை அறிக்கை வந்த பிறகு, அனைத்து குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி ரயில் பெட்டிகளும் இந்தப் புதிய வடிமைப்புக்கு மாற்றப்படும். இரண்டடுக்கு படுக்கை ரயில் பெட்டிகளிலும் இந்த வசதியைக் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 2018-19-இல் 112 விதங்களில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் முற்றிலும் வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முதல் முறையாக ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

"தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள்'
தில்லியில் உள்ள ரயில்வே அமைச்சக ஊடக, தொடர்புப் பிரிவு இயக்குநர் ரஜத் தத் பாஜ்பாய் கூறுகையில், "தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமான மின்மயப் பணிகள், தண்டவாளம் புதுப்பிப்பு பணிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையும் தொடர் ஜன்னல் கண்ணாடி வடிவமைப்புடன்கூடிய குளிர்சாதன வசதியுடைய மூன்றடுக்கு படுக்கை ரயில் பெட்டி ஒன்றை தயாரித்துள்ளது. கூடுதல் கண்ணாடிகளுடன் கூடிய இந்த புதிய வகை ரயில் பெட்டி வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரியும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.