சிசிடிவி திட்டத்தை முடக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டுமெனக் கோரி தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் இல்லம் நோக்கி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் அமைச்சர்கள், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பங்கேற்ற பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னர், அவரது அலுவலகம் அருகே தர்னாவில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகரில் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என 2015-இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, தில்லியில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பிறகு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இத்திட்டத்தின்படி, தில்லியில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தலா 2 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை அமைக்க தில்லி அரசு திட்டத்தை தயார் செய்துள்ளது. கண்காணிப்புக் கேமராக்களின் கட்டுப்பாட்டு மையத்தை தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், பாஜக தலைமையிலான மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் இத்திட்டத்தை துணை ஆளுநர் முடக்கி வைத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் இல்லம் நோக்கி அமைச்சர்கள், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறவுள்ளதாக கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஞாயிற்றுக்கிழமை துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் கடிதம் எழுதியுள்ளார். அதில், தில்லி அரசின் சிசிடிவி திட்டத்தை துணைநிலை ஆளுநர் தாமதம் செய்து வருவதாக வேண்டுமென்றே பொதுமக்களையும், ஊடகத்தினரையும் தவறாக திசைதிருப்புவது துரதிருஷ்டவசமானதாகும். திட்டத்திற்கான பணிகளை அளிப்பது தொடர்பாக எந்த முன்மொழிவும் துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கு வரவில்லை. இதற்கான அமைச்சரவைக் குறிப்பு பொதுப் பணித் துறையால் இன்னும் அளிக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. இதனால், இந்த விவகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வசம்தான் நிலுவையில் உள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து கேஜரிவால் எழுதிய கடிதத்தில், மகளிர் பாதுகாப்பு விவகாரத்தை துணைநிலை ஆளுநர் அரசியல் செய்வது ஏன்? என்பதை அறிய விரும்புவதாக கூறியிருந்தார்.
பேரணி: இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தலைமையில் திங்கள்கிழமை மாலை துணைநிலை ஆளுநர் இல்லம் நோக்கி திட்டமிட்டப்படி பேரணி புறப்பட்டது.
முதல்வர் கேஜரிவால் இல்லம் அமைந்துள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 மணிக்கு புறப்பட்ட இப்பேரணியில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பொதுப் பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூர பேரணியின் போது பாஜகவுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் எதிராக கேஜரிவால், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர்.
தர்னா: பேரணியையொட்டி, துணைநிலை ஆளுநர் அலுவலகம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மேலும், அனில் பய்ஜாலை சந்திக்க கேஜரிவால், அமைச்சர்கள் மட்டுமே செல்லலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த அலுவலகம் அருகே முதல்வர் கேஜரிவால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது கேஜரிவால் பேசுகையில், துணைநிலை ஆளுநர் என்னையும், அமைச்சர்களையும் மட்டுமே சந்திக்க விரும்புகிறார். அவர் எம்எல்ஏக்களையும் சந்திக்க வேண்டும்' என்றார். தர்னாவின் போது மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான ரகுபதி ராகவ ராஜாராம்' எனும் பாடலை அக்கட்சியினர் பாடினர். தர்னாவின் காரணமாக அப்பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
தில்லி அரசு மீது கபில் மிஷ்ரா குற்றச்சாட்டு
புது தில்லி, மே 14: தலைநகர் தில்லியில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் தொடர்பான எந்தக் கோப்பும் துணை நிலை ஆளுநரின் பார்வைக்கு தில்லி அரசு அனுப்பவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஷ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடர்பான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்தக் கோப்பு குறித்து துணை நிலை ஆளுநர் முடிவு எடுக்காமல் உள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் இல்லம் நோக்கி கேஜரிவால் தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேரணியையும் நடத்தியுள்ளனர்.
ஆனால், உண்மை என்னவென்றால், இந்த விவகாரம் தொடர்பாக எந்தக் கோப்பும் துணை நிலை ஆளுநருக்கு தில்லி அரசால் அனுப்பப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சி கூறுவது போல, அந்தக் கோப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தால், அது குறித்து பகிரங்கமாக ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வெளியிட்டிருக்கலாமே. இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் மீது ஆம் ஆத்மி கட்சி பழி சுமத்துவது எந்தவகையிலும் நியாயமில்லை என்றார் அவர்.
சிசிடிவி கேமரா திட்டத்தை முடக்கவே குழு - கேஜரிவால் இப்பேரணி தொடங்குவதற்கு முன், முதல்வர் கேஜரிவால் பாஜகவை கடுமையாகத் தாக்கிப் பேசினார். சிசிடிவி கேமரா திட்டத்தை செயல்படுத்த பாஜக விரும்பவில்லை. இதனால்தான் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் மூலம் திட்டத்தை அக்கட்சி முடக்கி வருகிறது' என்று குற்றம்சாட்டினார்.
சிசிடிவி கேமராக்களை நிறுவுவது, கண்காணிப்பது ஆகியவை தொடர்பாக ஒரு பொதுவான திட்டத்தை தயாரிக்க துணைநிலை ஆளுநர் அமைத்துள்ள குழு குறித்து செய்தியாளர்களிடம் கேஜரிவால் கூறுகையில், தில்லி துணைநிலை ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள குழு மிகவும் ஆபத்தானது. சிசிடிவி திட்டத்தை முடக்குவதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

