சுற்றுலா விழா: பார்வையாளர்களைக் கவர்ந்த தமிழக அரங்கு! 

தில்லியில் நடைபெற்று வரும் இந்திய சுற்றுலா விழாவில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை
Updated on
1 min read

தில்லியில் நடைபெற்று வரும் இந்திய சுற்றுலா விழாவில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை அரங்கு, பூம்புகார் அரங்கு, கோ - ஆப்டெக்ஸ் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த சுற்றுலா விழா வியாழக்கிழமை (செப்டம்பர் (27) நிறைவடைகிறது.
மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில், இந்திய சுற்றுலா விழா தில்லி ராஜபாதை சாலையோர பூங்காவில் கடந்த16-ஆம் தேதி தொடங்கியது. விழாவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார். இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இதில் 50 கைத்தறி அரங்குகள், 15 மாநில சுற்றுலா அரங்குகள், 50 உணவு அரங்குகள் இடம் பெற்றுள்ளன. மேலும், 60-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர்.
இதில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அரங்கு, பூம்புகார் கைவினைப்பொருள்கள் அரங்கு, கோ-ஆப்டெக்ஸ் அரங்கு, தமிழக உணவு அரங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. 
தமிழக சுற்றுலாத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழகத்தில் உள்ள முக்கியச் சுற்றுலா தலங்களான ராமேசுவரம், மதுரை, கன்னியாகுமரி, குற்றாலம் நீர்வீழ்ச்சி, பிச்சாவரம் காடுகள் என தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் படமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் அதன் இணை இயக்குநர் குணசேகரன் தலைமையில் கிராமிய நடனக் கலைஞர்கள் பரதநாட்டியம், தேவராட்டம், மயிலாட்டம், நய்யாண்டி மேளம்,பொய்க்கால் குதிரை என கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். தொடர்ந்து 11 நாள்களாக நடைபெற்று வரும் இவ்விழா வியாழக்கிழமை நிறைவடைகிறது. 

சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலம்: தமிழகம் முதலிடம்
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சக புள்ளி விவர அறிக்கையின்படி, நான்கு ஆண்டுகளாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவரும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் திகழ்கிறது என்று தமிழ்நாடு சுற்றுலா அலுவலர் ஆ. ராமன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், ஊட்டி மலை ரயில், தஞ்சாவூர் பெரிய கோயில் உள்ளிட்டவற்றின் படங்கள் தகவல்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள், தங்குமிடங்கள், உணவகங்கள் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய கையேடு அரங்கில் வைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளில் பலர் தமிழக உணவு அரங்கில் உணவு வகைகளை உண்டு மகிழ்கின்றனர்' என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com