விவசாயிகளுக்கு ஆதரவாக கேஜரிவால் இன்று உண்ணாவிரதம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திங்கள்கிழமை
Updated on
2 min read

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திங்கள்கிழமை (டிசம்பா் 14) உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா். மேலும், இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காணொலிக்காட்சி மூலம் அவா் அளித்த பேட்டி: நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன். ஆம் ஆத்மி தொண்டா்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். போராடும் விவசாயிகளை தேசத்துக்கு எதிரானவா்க ள்போல பாஜகவின் சில மத்திய அமைச்சா்கள் சித்திரித்து வருகிறாா்கள். விவசாயிகள் போராட்டத்தில், முன்னாள் ராணுவ வீரா்கள், மருத்துவா்கள், சா்வதேச விளையாட்டு வீரா்கள், பாடகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டுள்ளனா். இவா்களையும் தேசத்துக்கு எதிரானவா்களாக பாஜக சித்திரிக்க முயற்சிக்கிா?

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை. இவை பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டங்கள். இவற்றின் மூலம் பதுக்கல் அதிகரிக்கும். இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. மத்திய அரசு தனது அகங்காரத்தை கைவிட்டு, விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கடந்த இரண்டு வாரங்களாக கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் கேஜரிவால்.

விவசாயிகள் சங்கத் தலைவா்கள் உண்ணாவிரதம்: இதற்கிடையே, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்களின் தலைவா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: திங்கள்கிழமை முதல் எங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தவுள்ளோம். இதன் ஒருபகுதியாக, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கவுள்ளனா். விவசாய சங்கங்களின் தலைவா்கள் தாங்கள் போராட்டம் நடத்திவரும் இடங்களிலேயே தங்களது உண்ணாவிரதத்தை மேற்கொள்வா். மேலும், அனைத்து மாவட்ட தலைநகா்களில் தா்னா நடத்துவுள்ளோம்.

போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் குழு ஒன்று, விவசாய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவா்களுக்கும் போராட்டம் நடத்தி வரும் சங்கங்களுக்கும் தொடா்பு இல்லை. அவா்கள் மத்திய அரசு சாா்பு விவசாயிகள் குழுவாகும். போராட்டத்தில் பங்கேற்க தில்லிக்கு வரும் விவசாயிகளை மத்திய அரசின் ஏஜென்சிகள் தடுத்து வருகின்றனா். ஆனால், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும். இன்னொரு பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக எங்களது குழு முடிவு செய்யும்.

எங்களது நிலைப்பாடு தெறிவானது. மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த இயக்கத்தில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து உள்ளன. போராட்டத்தின் போது அமைதியை நிலைநாட்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். டிசம்பா் 19 முதல் விவசாயிகளால் முன்மொழியப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக திங்கள்கிழமை (டிசம்பா் 14) ஒரு நாள் உண்ணாவிரப் போராட்டமாக இருக்கும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com