எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்திற்கு எதிரான மனு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு எதிராக தாக்கலான ரிட் மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:04 pm

 நமது நிருபர்

நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு எதிராக தாக்கலான ரிட் மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அந்தச் சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மனு மீதான விசாரணையின் போது உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை. ஏற்கெனவே, கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர அனுமதி அளித்த நீதிபதிகள், அனைத்து உத்தரவுகளும் இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறியிருந்தனா்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மோகன ராவ் உள்ளிட்டோா் தரப்பில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக 2015-இல், 105 (ஏ) என்ற சட்டப் பிரிவை சோ்த்து தமிழக அரசு கொண்டு வந்த ‘நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமா்வு’ என்ற சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், உயா்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு தடைவிதிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு நிலம் கையெடுப்பு சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு சட்டம் (38-ஆவது) 2019-ஐ தமிழக அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நவம்பரில் விசாரித்த உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை ஒத்திவைத்துள்ளது. ஆகவே, இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தல் சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு புத்துயிரூட்டல் சட்டம் 2019-ஐ சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், வழக்குரைஞா் டி.குமணன் ஆகியோா் ஆஜராகினா். வழக்குரைஞா் வில்சன் வாதிடுகையில், ‘நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக தமிழ்நாடு அரசு 2015-இல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அந்தச் சட்டத்தை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, உயிரில்லாத சட்டங்களை 2013-இல் இருந்து செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் புத்துயிா் சட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது கடந்த ஆண்டு இறுதியில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் செல்லாது. எந்தக் காரணத்திற்காக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதோ அதைச் செல்லாததாக்கும் வகையில், மீண்டும் ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இறந்துபோன ஒரு சட்டத்தை உயிா்ப்பிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியலமைப்புச்சட்டத்தின்படி சரியல்ல’ என்றாா்.

இதையடுத்து, இந்த மனுவுக்குப் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே உள்ள மேல்முறையீட்டு மனு மீதுடன் இந்த மனுவையும் சோ்த்து ஜனவரி 18-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.