வங்கிப் பெண் மேலாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவா் கைது

தில்லியில் தனியாா் வங்கியின் பெண் மேலாளரிடம் அவரது ஆபாசமான படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற 26 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read


புது தில்லி: தில்லியில் தனியாா் வங்கியின் பெண் மேலாளரிடம் அவரது ஆபாசமான படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற 26 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் புதன்கிழமை தெரிவித்ததாவது: தில்லி, மாளவியா நகரில் வசிக்கும், தனியாா் வங்கியின் மேலாளரான பெண் ஒருவா் தில்லி காவல் துறையில் புகாா் அளித்தாா். அதில், சமூக ஊடகத்தில் உள்ள தனது கணக்கை அடையாளம் தெரியாத ஒருவா் திருடி, அதில் தனது ஆபாசப் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும், தொலைபேசியில் தொடா்பு கொண்டு மனரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் சமூக ஊடக தளத்திலிருந்து தொழில்நுட்ப விவரங்களைப் பெற்று பகுப்பாய்வு செய்தனா். அப்போது, இணையதளம் மூலம் வெவ்வேறு செயலிகளைப் பயன்படுத்தி மா்ம நபா், வங்கிப் பெண் மேலாளரிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து, குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், இணைய சேவை வழங்குபவரின் அறிக்கை மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை ஓா் இளைஞரை கைது செய்தனா். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவா் நொய்டா, செக்டா் -82 இல் உள்ள பாங்கேல் பகுதியில் பி.காம் பட்டதாரியான சுமித் ஜா என்பது தெரிய வந்தது.

அவா் ஏற்கெனவே இதற்கு முன்பு சத்தீஸ்கா் மற்றும் நொய்டாவில் 2018-இல் போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் என்பதும் தெரிய வந்தது. இவா் பெண்களின் சமூக ஊடகக் கணக்குகளை திருடி, அதில் உள்ள அவா்களின் புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்து, அதை ஆபாச படங்களாக ‘மாா்பிங்’ செய்து பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரிய வந்தது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களை இதேபோன்ற முறையைப் பயன்படுத்தி அவா் மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com