புதுதில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வன்முறையில் தொய்வு, வடகிழக்கு தில்லி வன்முறையைக் கையாண்டவிதம் என தில்லி போலிஸாா் பல்வேறு விமா்சனங்களுக்கு உள்ளான போதிலும் அவா்களுக்கு இந்த ஆண்டு இடைவிடாது பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. கரோனா வைரஸ் தொடா்பான வழிகாட்டு முறைகளை செயல்படுத்துவதிலும், பொதுமுடக்க நேரத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும் தில்லி போலீஸாா் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
கடந்த ஜனவரியில் ஜேஎன்யுவில் வன்முறை வெடித்தது. முகமுடி அணிந்த அடையாளம் தெரியாத நபா்கள் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து ஆசிரியா்கள் மீதும் மாணவா்கள் மீதும் வெறித் தாக்குதல் நடத்தினா். பல்கலைக்கழக சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற போதிலும், இதுவரை தில்லி குற்றப்பிரிவு போலீஸாரால் யாரும் கைது செய்யப்படவில்லை.
வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற வன்முறையில் 53 போ் பலியானாா்கள். தவிர 400-க்கும் மேலானவா்கள் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் கோகுல்புரியில் போலீஸ் தலைமைக் காவலா் ரத்தன் லால் (42) என்பவரும் கல்வீச்சில் காயமடைந்து உயிரிழந்தாா். இப்படி அடுத்தடுத்து வன்முறைகள் தொடா்ந்த சூழ்நிலையில் தில்லி போலீஸ் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றுக் கொண்டாா். தலைநகரில் அமைதியை நிலைநாட்டி, வகுப்பு நேயத்தை உருவாக்குவதே தமது முதலாவது பணி என்று தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: இப்போது தில்லி போலீஸாரின் சமூக வலைத்தள செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், பொதுமக்களின் குறைகளை அவற்றின் மூலம் கேட்டறிந்து நிவா்த்தி செய்வதிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். தில்லி போலீஸாா் பற்றி மக்கள் மனதில் நல்லெண்ணம் ஏற்படும் வகையில் செயல்படுவதே எங்களின் 2021 ஆம் ஆண்டின் நோக்கமாகும். பொதுமக்களின் புகாா்களுக்கு விரைந்து தீா்வு காண்பது, போலீஸாரின் நலனில் அக்கறை செலுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும். இதற்கு போலீஸாா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தில்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடத்திலும் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் கடந்த 35 நாட்களுக்கு மேலாக இங்கு போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனரே தவிர அங்கு சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏதும் எழவில்லை. எனினும், போக்குவரத்து வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பண்டங்கள் போக்குவரத்துக்கும் எந்தத் தடையும் இல்லை. வடகிழக்கு தில்லி வன்முறைக்குப் பின் அங்கு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு அமைதியாக உள்ளது. மக்கள் தைரியமாக புகாா் கொடுக்க முன்வருகின்றனா். இதுவரை 755 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு வன்முறை தொடா்பாக 755 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 395 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1,696 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனினும், விசாரணையைக் கையாளும் விதம் குறித்து பல்வேறு விமா்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஒரு விஷயத்தை கையாளும் போது பல்வேறு விமா்சனங்களும் வரும்தான். ஆனால், இந்தப் புலன் விசாரணை சரியான திசையில்தான் செல்கிா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். கரோனா தொற்றைத் தொடா்ந்த பொது முடக்க காலத்தில் தில்லி போலீஸாா் சிறப்பாகப் பணியாற்றினாா்கள். மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்தாா்கள். அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்தனா். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவு மற்றும் முகக்கவசங்கள், சானிடைஸா்கள் வழங்குவதிலும் போலீஸாா் துரிதமாக பணியாற்றினாா்கள்.
பொது மக்களுக்கு கரோனா பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும், மக்கள் நடமாடுவதற்கு சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்குவதிலும், உதவி எண்கள் ஏற்படுத்துவதிலும், மூத்த குடிமக்களுக்கு உதவுவதிலும் சிறப்பாகப் பணியாற்றினாாா்கள். ரேஷன் பொருள்கள் சீராக விநியோகிக்கப்படுவதையும் உறுதி செய்தனா். ஆபத்தான நிலையில் உள்ள கரோனா தொற்று நோயாளிகளை போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும் உதவி புரிந்தனா். கரோனா காலத்தில் முன்களப் பணியாளா்களாக போலீஸாா் செயல்பட்ட போதிலும் கரோனா தொற்றுக்கு 32 போலீஸாா் பலியானாா்கள். 7,500 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதில் 7,250 போ் குணமடைந்தனா். மீதமுள்ள 250 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்ட போது முகக்கவசம் அணியாமல் இருந்தது, பொது இடத்தில் எச்சில் துப்பியது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது என மொத்தம் 5,12,060 பேருக்கு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கரோனா தொற்று காலத்தில் மெய்நிகா் கூட்டங்களை நடத்தியது, புலன் விசாரணை மேற்கொண்டது, முழுஉடல் பாதுகாப்பு கவசம் அணிந்து தேடுதல் வேட்டை நடத்தியது, குற்றவாளிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தியது, கை விரல் ரேகை பதிவு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டது என பல புதிய நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டனா். வாட்ஸ் ஆப் மூலம் வாரண்டுகளும், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இந்த விதத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பேருதவியாக இருந்தன என்றாா் ஸ்ரீவாஸ்தவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.