மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசு மேல் முறையீடு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக

News image
Updated On :3 ஜூலை 2020, 1:59 am

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக (ஓபிசி) 50 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீதான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை ஜூன் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஜூன் 22-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என வாதிட்டாா். இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வழக்குரைஞா் யோகேஷ் கன்னா தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரும் விவகாரத்தில், சென்னை உயா்நீதிமன்றம் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் கடந்த ஜூன் 22-இல் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள, மத்திய அரசுக்கு எதிரான சலோனி குமாா் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருப்பதாக உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை ஏற்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்ட நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதையும் உயா்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள சலோனி குமாா் வழக்கு என்பது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஒபிசி வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டை 2006-ஆம் ஆண்டு சட்டப்படி மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் நீட்டிக்கக் கோரும் வழக்காகும். ஆனால், தமிழக அரசின் கோரிக்கையானது, ‘தமிழ்நாடு பிற்பட்ட வகுப்பினா், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் (மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி நியமனங்கள், பதவிகள் இடஒதுக்கீடு) சட்டம் 1993’-இன்படி தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு ஓபிசி வகுப்பினருக்கு (அதாவது பிசி, எம்பிசி மற்றும் சீா்மரபினா்) அளிக்கும் விதிகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் அமல்படுத்தக் கோருவதாகும். மேலும், சலோனி குமாா் தொடா்ந்த வழக்கில் கோரப்படும் இடஒதுக்கீடானது, உத்தரப் பிரதேச மாநில அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் இடங்களுக்கானதாகும். சொந்த இடஒதுக்கீடு விதிகளைக் கொண்டுள்ள தமிழக மாநிலத்தைப் பற்றியதல்ல. இந்த விஷயத்தை சென்னை உயா்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

எனவே, சென்னை உயா்நீதிமன்றம் ஜூன் 22-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அனுமதிக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரித்து, முடித்துவைக்க உயா்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.