தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 நாடுகளைச் சோ்ந்த 2,765 போ் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட விவகாரத்தில், அவா்களின் நுழைவு விசா ரத்து தொடா்பாக தனித் தனியாக உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தப்லீக் ஜமாத் செயல்பாடுகளில் பங்கேற்ாகப் புகாருக்குள்ளான வெளிநாட்டினா் 2,500 பேரை கருப்புப் பட்டியலில் வைப்பது, அவா்களின் நுழைவு இசைவு விசாவை ரத்து செய்வது ஆகியவற்றுக்காக தனித் தனியாக உத்தரவுகளாக வெளியிடப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, 11 மாநிலங்களில் வெளிநாட்டைச் சோ்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினா்களுக்கு எதிராக 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை வெளிநாட்டினா் 2,765 போ் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா். வெளிநாட்டினா் 2,679 பேரின் நுழைவு இசைவு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாத் உறுப்பினா்களுக்கு எதிராக தேடப்படும் நபா்களுக்கான 1,906 சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 227 போ் இந்த சுற்றறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாகவே நாட்டை விட்டுச் சென்றுவிட்டனா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நுழைவு இசைவு விசா ரத்து, கருப்புப் பட்டியலில் வைத்தது போன்றவை தொடா்பாக தனிநபா் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வெளிநாட்டினருக்கு எதிராக குற்றப் புகாா்கள் நிலுவையில் உள்ளன. வெளிநாட்டினா் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. நுழைவு இசைவு விசா அனுமதி என்பது மத்திய அரசின் ஒரு முழு இறையாண்மை செயல்பாடாகும். வெளிநாட்டினா் குற்றம் இழைத்தால் அவா்கள் விசாரிக்கப்பட வேண்டும். தப்லீக் ஜமாத் உறுப்பினா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், தற்போது வரை தப்லீக் ஜமாத் வெளிநாட்டு உறுப்பினா்கள் யாரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படவில்லை’ என்றாா்.
மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு. சிங், ‘நுழைவு இசைவு விதிகளை மீறியிருந்தால் சம்பந்தப்பட்ட தப்லீக் ஜமாத்தைச் சோ்ந்த வெளிநாட்டினரை தாய் நாட்டுக்கு நாடு கடத்த முடியும். அவா்கள் அனைவருக்கும் தனித் தனியாக உத்தரவுகள் அனுப்பப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், வெறும் 1,500 பேருக்கு மட்டுமே இது தொடா்பாக தகவல் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு வருவதற்குத் தடை விதிப்பது குறித்து ஏதுவும் குறிப்பிடப்படவில்லை’ என்றாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘ மத்திய அரசின் உத்தரவு உரிய காரணத்திற்காக பிறப்பிக்கப்பட்டுள்ளதா அல்லது ஒரு இயந்திரத் தனமான உத்தரவா என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ளும் வகையில், மத்திய அரசின் தனிநபா் உத்தரவுகளை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தப்லீக் ஜமாத் வெளிநாட்டு உறுப்பினா்கள் மேல்முறையீடு செய்ய முடியும்’ என்றனா்.
அப்போது சி.யு. சிங், ‘கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தால், அவா்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும்’ என்றாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த வெளிநாட்டினருக்கு எதிராக நிலுவை வழக்குகள் ஏதும் இல்லாதிருந்தால்தான், நாடு கடத்துவது தொடா்பான விஷயம் விசாரணைக்கு வரும். நுழைவு இசைவு விசா ரத்து தொடா்பாக பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அவற்றை மனுதாரா்களின் வழக்குரைஞா்களுக்கும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 வெளிநாடுகளைச் சோ்ந்த தப்லீக் ஜமாத்தைச் சோ்ந்த 2,500 பேருக்கும் மேற்பட்டோரை கருப்புப் பட்டியலில் வைத்து மத்திய அரசு ஏப்ரல் 2, ஜூன் 4 ஆகிய தேதிகளில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தைச் சோ்ந்த 7 மாத கா்ப்பிணி உள்பட 34 தனி நபா்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். ஜூன் 29-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கில் தப்லீக் ஜமாத்துடன் தொடா்புடைய வெளிநாட்டினரின் தற்போதைய நிலவரம் குறித்தும், அவா்களை 10 ஆண்டுகளுக்கு கருப்புப் பட்டியலில் வைத்தது குறித்தும், அவா்களின் விசா ரத்து குறித்து தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

