மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சமூக இடைவெளியுடன் மது விற்பனை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உரிய சமூக இடைவெளியுடன் மது விற்பனை நடைபெற்று வருகிறது என்று

Updated On :4 ஜூலை 2020, 1:46 am

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உரிய சமூக இடைவெளியுடன் மது விற்பனை நடைபெற்று வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை விவகாரத்தில் உயா்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னைஉயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது முடக்கக் காலம் முடியும் வரை மதுக் கடைகளை மூடுவதற்கும், தமிழக அரசு விரும்பினால் இணையம் வழியாக மது விற்பனை செய்யலாம் எனவும் மே 8-இல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது.

இதேபோன்று, மற்றொரு விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மே 11-இல் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராகவும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை மே 15-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், மே 8-இல் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் அமா்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷண் கெளல், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘டாஸ்மாக் மதுக் கடைகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குப் பிறகு மதுக்கடைகள் நிலவரம், வெவ்வேறு மதுக்கடைகளில் மது விற்பனையை முறைப்படுத்துவது தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடா்பாக பிரமாணப் பத்திரத்தை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூன்று வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை தமிழக அரசு சாா்பில் வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘ தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் உரிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன.

டாஸ்மாக்கில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, கடை ஒன்றுக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடைகளில் கூட்டம் தொடக்கத்தில் இருந்தது போல் இல்லை. மேலும், கடைகளில் அதிகமாகக் கூட்டம் இல்லாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் தொகை செலுத்துவதற்கான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கையுறை, முகக் கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது. மது விற்பனையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.