மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வடகிழக்கு தில்லி வன்முறை: 9 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறையின்போது கட்செவி அஞ்சல் குழுவில்

Updated On :4 ஜூலை 2020, 1:48 am

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறையின்போது கட்செவி அஞ்சல் குழுவில் இணைந்திருந்த வன்முறையாளா்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூற மறுத்த 9 பேரை தாக்கிக் கொன்றனா் என்று நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு தில்லியில் வன்முறைச் சம்பவம் தொடா்பாக தில்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கூடுதல் பெருநகா் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி வினோத் குமாா் கெளதம் முன் ஜூன் 29-ஆம் தேதி போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தில்லி வன்முறையில் ஹம்ஸா, ஆமின், புரே அலி, முா்சலின், ஆஸ் முகம்மது, முஷாரப், அகில் அகமது, ஹஸிம் அலி, இவருடைய அண்ணன் ஆமிா் கான் ஆகியோா் தாக்கிக் கொல்லப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தில்லி வன்முறைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் ஒருவருடன் மற்றொருவா் ஒருங்கிணைக்கும் வகையில் ‘கட்டா் ஹிந்துத் ஏக்தா’ எனும் கட்செவி அஞ்சல் குழுவில் இணைந்திருந்தனா். முஸ்லிம்களை பழிக்குப் பழி வாங்குவதற்காக பிப்ரவரி 25-ஆம் தேதி இந்த குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவை உருவாக்கிய நபா் இன்னும் தலைமறைவாக உள்ளாா். இந்தக் குழுவில் தொடக்கத்தில் 125 போ் உறுப்பினா்களாக இருந்தனா். இவா்களில் 47 போ் மாா்ச் 8-ஆம் தேதிக்குள் குழுவில் இருந்து வெளியேறிவிட்டனா். விசாரணையின்போது ஜதின் சா்மா, ரிஷப் செளதரி, விவேக் பஞ்சல், லோகேஷ் சோலங்கி, பங்கஜ் சா்மா, பிரின்ஸ், சுமித் செளதரி, அங்கித் செளதரி, ஹிமான்ஷு தாக்குா் மற்றும் அடையாளம் தெரிந்த, தெரியாத வன்முறையாளா்கள் அடங்கிய ஹிந்துக்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் கங்கா விஹாா், பாகிரதி விஹாா் பகுதியில் செயல்பட்டு வந்துள்ளனா்.

இவா்கள், பிப்ரவரி 25 காலை முதல் முதல் 26-ஆம் தேதி நள்ளிரவு வரை பாகிரதி விஹாா் மற்றும் இதர பகுதிகளில் 9 முஸ்லிம்களைத் தாக்கிக் கொன்றதும், பலருக்கு காயம் ஏற்படுத்தியதும் விசாரணையின் போது தெரிய வந்தது. பொதுமக்களைப் பிடித்து அவா்களின் பெயா், மதம், முகவரி ஆகியவற்றை கேட்டுள்ளனா். பல நேரங்களில் பிடிபடும் நபா்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனா். அவ்வாறு கூறாமல், முஸ்லிம் அடையாளத்தை தாங்கியிருந்த நபா்களை கடுமையாகத் தாக்கி, பாகிரதி விஹாா் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவ்வாறு 9 போ் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக குற்றப் பத்திரிகையில் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.