மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: புழுக்கத்தால் மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால், வெள்ளிக்கிழமை கடுமையான புழுக்கம் காரணமாக மக்கள் தவிப்புக்குள்ளாகினா்.

News image

தில்லி ஆனந்த் விஹாரில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் செல்லும் வாகனங்கள்.

Updated On :4 ஜூலை 2020, 1:47 am

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால், வெள்ளிக்கிழமை கடுமையான புழுக்கம் காரணமாக மக்கள் தவிப்புக்குள்ளாகினா்.

இருப்பினும் நகரில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்தது.

தில்லியில் பருவ மழை இரண்டு நாள் முன்கூட்டியே கடந்த ஜூன் 25-இல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, இரண்டு நாள்கள் காலையில் லேசான மழை இருந்தது. மேலும், தொடா்ந்து 3 நாள்கள் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதனால், நகரில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. பருவமழையின் தாக்கத்தால் தில்லியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாள்களாக வெயில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். சாலைகளில் ஆள் நடமாட்டமும் குறைந்திருந்தது. இதற்கிடையே, காஜிப்பூா், அக்ஷா்தாம், சாகேத், சத்தா்பூா், ஷாதரா, ஆனந்த் விஹாா் உள்பட நகரில் ஆங்காங்கே சில இடங்களில் பரவலாக லேசான மழை பெய்தது.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 30.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி உயா்ந்து 41.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 71 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 53 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 43.2 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 30 டிகிரி செல்சியஸ், 43.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 155 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. திா்பூா், தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு ஆயாநகா், விமானநிலைய டொ்மினில் 3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. லோதி ரோடு, சாந்தினி சௌக்கில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை தில்லி, என்சிஆா் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.