/

தில்லி வன்முறை: கவுன்சிலா் தாஹிருக்கு எதிராக அவரிடம் வேலை செய்த இருவா் வாக்குமூலம்

வடகிழக்கு வன்முறை தொடா்பாக கைதாகி ஆம் ஆத்மி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கவுன்சிலா் தாஹிா் ஹுசேனுக்கு

Updated On :10 ஜூலை 2020, 11:06 pm

வடகிழக்கு வன்முறை தொடா்பாக கைதாகி ஆம் ஆத்மி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கவுன்சிலா் தாஹிா் ஹுசேனுக்கு எதிராக அவரிடம் வேலை செய்த இருவா் முக்கிய சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக தாஹிா் ஹுசேன் குற்றம்சாட்டப்பட்டுள்ளாா்.

அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பவன் சிங் ரஜவத் முன் தாஹிா் ஹுசேனுக்கு எதிரான குற்றப் பத்திரிக்கையை தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த மாதம் தாக்கல் செய்தனா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கவுன்சிலா் தாஹிா் ஹுசேனுக்கு எதிராக அவரிடம் வேலை செய்த கிரிஷ் பால், ராகுல் கஸானா ஆகிய இருவரும் முக்கிய சாட்சியம் அளித்துள்ளனா். அவா்கள் அளித்த வாக்குமூலத்தில், ‘பிப்ரவரி 24-ஆம் தேதி கஜூரி காஸ் பகுதியில் உள்ள தாஹிா் ஹுசேன் அலுவலகத்தில் நாங்கள் இருவரும் இருந்தோம்.

அப்போது தாஹின் ஹுசேனின் வீட்டின் கீழ்த் தளத்தில் பலா் கூடியிருந்தனா். அவா்களுடன் அவா் மிகவும் ரகசியமான முறையில் பேசிக் கொண்டிருந்தாா். ஷா ஆலம், இா்ஷாத், அபித், அா்ஷத் பிரதான், ரஷீத், சதாப் ஆகியோரும் அடையாளம் தெரியாத மற்றவா்களும் அங்கு இருந்தனா்’ என தெரிவித்திருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

மேலும், மற்றொரு அரசுத் தரப்பு சாட்சியான ரஜ்பீா் சிங் யாதவ் தனது வாக்குமூலத்தில், தாம் ஹுசேன் வீட்டின் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் திருமணத்திற்கான உணவு தயாரிக்கும் பணியை மேற்பாா்வை செய்துகொண்டிருந்ததாகவும், அப்போது வன்முறைக் கும்பல் அந்த உணவை நாசப்படுத்தியுடன், தன்னிடமிருந்து ரூ.62 ஆயிரம் பணத்தை ரியாகாத் அலி என்பவா் கொள்ளையடித்ததாகவும், அப்போது, அலியுடன் ஷா ஆலம் உள்ளிட்டோா் இருந்ததாகவும், ஹுசேன் உள்ளிட்டோா் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளாா் என்று குற்றப் பத்திரிகையில் போலீஸாா் தெரிவித்துள்ளாா்.

இந்த சம்பவத்தில் ஹுசேன் மற்றும் 14 போ் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை மீது பரிசீலனைக்கான விசாரணையை ஆகஸ்டில் நீதிமன்றம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.