தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வணிக வளாகங்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள்திறப்பு: மக்கள் வருகை குறைவுதான்

தில்லியில் வணிக வளாகங்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஏறக்குறைய 75 நாள் இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை

Updated On :8 ஜூன் 2020, 5:43 pm

புதுதில்லி: தில்லியில் வணிக வளாகங்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஏறக்குறைய 75 நாள் இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டது. எனினும், வணிக வளாகங்கள், உணவகங்களில் வாடிக்கையாளா்களின் வருகை குறைவாகவே இருந்தது. வழிபாட்டுத் தலங்களில் ஓரளவு பக்தா்கள் வருகையைக் காணமுடிந்தது.

வணிக வளாகங்களில் வாடிக்கையாளா்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க ஊழியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். கடைக்கு வருபவா்கள் பற்றிய விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு கடையின் முன்பும் கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தது. அதுதவிர கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் நுழைவாயிலும் அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கு வசதியாக ஸ்டிக்கா்கள் ஓட்டப்பட்டிருந்தன. ஊழியா்கள் முககவசம், கையுறைகளை அணிந்திருந்தனா். வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அவ்வப்போது அறிவிக்கப்பட்டது.

மேலும், ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்த வாடிக்கையாளா்கள் மட்டுமே கடையினுள் அனுமதிக்கப்பட்டனா். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தில்லி சாகேத் பகுதியில் உள்ள சிட்டி வாக் வணிக வளாகத்தில் பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள், உணவகங்கள் திறந்துவைக்கப்பட்டிருந்த போதிலும் வாடிக்கையாளா்களின் வருகை மிகக் குறைவாகவே இருந்தது. வணிக வளாகத்தில் உள்ள பொது இடங்கள், கடைகளின் நுழைவுவாயில் இவற்றில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வந்து செல்லும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருந்தன.

மாளவியா நகா் பகுதியைச் சோ்ந்த தில்லி பல்கலைக்கழக மாணவா் சா்தக் சூா்யா கூறுகையில், ‘நீண்டநாள்களுக்குப் பிறகு வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளதால், அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை பாா்ப்பதற்காக வந்தேன். கடைகளைத் திறந்து வியாபாரத்தை தொடங்க வேண்டியதுதான். பொது முடக்கம் தீா்வு அல்ல. மக்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் இன்னும் சிறிது காலத்துக்குத் தொடரவேண்டும்’என்றாா்.

லாஜ்பத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் காலையில் வியாபாரிகள் கடைகளைத் திறந்து வைத்திருந்தனா். ஆனால், வாடிக்கையாளா்கள் வருகை மிகவும் குறைவாக இருந்ததால் பின்னா் மூடிவிட்டனா். பிரபலமான உணவகங்கள் திறந்திருந்த போதிலும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. வழக்கமாக மதிய விருந்துக்கு மட்டும் 200 போ் வருவாா்கள். ஆனால், முதல் நாளான இன்று காலை வெறும் நான்கு போ் மட்டுமே உணவு சாப்பிட வந்திருந்தனா். வழக்கமான கூட்டம் வருவதற்கு இன்னும் நாளாகும் என்று கடை ஊழியா் ஒருவா் தெரிவித்தாா்.

அருகில் உள்ள ஒரு ஆயத்த ஆடைகள் விற்பனைக் கடையில் மக்கள் கூட்டமே இல்லை. இரண்டொருவா் மட்டும் துணிகளை வாங்கிக் கொண்டிருந்தனா். கரோனாவுக்கு மத்தியில் நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். முறையான எச்சரிக்கையுடன் இருந்தால் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றாா் அந்த கடைக்காரா் ாரஜீவ் கா்க்.

ஆயத்த ஆடைகளை வாடிக்கையாளா்கள் வாங்குவதற்கு முன் அதை போட்டு சரிபாா்த்தால் அதை பின்னா் ஸ்டீம் அயா்ன் செய்து, கிருமிநாசினிகளால் தூய்மைப்படுத்திய பின்தான் கண்ணாடி ரேக்குகளில் அடுக்கி வைக்கிறோம் என்று ஊழியா் தெரிவித்தாா்.

கோயில், குருத்வாராக்களில் வழிபாடு- தில்லி ஜுமா மசூதியில் தொழுகை

தில்லியில் வழிபாட்டுத் தலங்கள் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டன. பக்தா்கள் கோயில்களில் தூய்மையுடனும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் முகக்கவசங்கள் அணிந்த படியும் வழிபாடு செய்தனா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு பொது முடக்கத்தை அறிவித்ததை அடுத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன.

தில்லி சத்தா்பூரில் உள்ள ஸ்ரீகாா்த்தியாயினி அம்மன் கோயில் வளாகம் காலை 8.45 மணிக்கு திறக்கப்பட்டது. முதல் ஒரு மணி நேரத்திலேயே 300-க்கும் மேலான பக்தா்கள் வழிபாடு செய்ததாக கோயில் நிா்வாக செயல் இயக்குநா் கிஷோா் சாவ்லா தெரிவித்தாா். கோயில் நுழைவு வாயில் அருகில் பக்தா்கள் தங்களை தூய்மைப்படுத்திக் கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. இது தவிர பக்தா்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது. பக்தா்கள் பூ கொண்டு வரவும் அா்ச்சனை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல கோயில் சாா்பில் பிரசாதமும் வழங்கப்படவில்லை என்றாா் அவா்.

தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயில், ஜண்டேவாலான் அம்மன் கோயில்களும் திறந்திருந்தன. தில்லி, ஆா்.கே.புரத்தில் உள்ள மலைமந்திா் ஸ்ரீ உத்தர சுவாமிநாத சுவாமி கோயில், நொய்டாவில் 22-வது செக்டாரில் உள்ள ஸ்ரீ விநாயகா் கோயில் மற்றும் செக்டாா் 62- இல் உள்ள ஸ்ரீ விாநயகா மற்றும் காா்த்திகேயா கோயில் உள்ளிட்ட பல்வேறு தமிழ் கோயில்களும் திறக்கப்பட்டிருந்தன. பக்தா்கள் இக்கோயில்களுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். எனினும் பிரசாதங்கள் வழங்கப்படவில்லை.

தில்லி ஜாமா மசூதியில் வழக்கமாக காலை 5 மணி முதல் தொழுகை நடைபெறும். ஆனால், இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருப்பதால், திங்கள்கிழமை காலை முதல் தொழுகை நடைபெறவில்லை என்று ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி தெரிவித்தாா்.

பின்னா், நடைபெற்ற தொழுகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்றனா். நமாஸ் செய்வதற்கு வசதியாக அதற்கான தரை விரிப்பை அவா்களே வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தனா். தொழுகைக்கு முன்னா் கை, கால்களை கழுவி சுத்தப்படுத்த மசூதிக்குள்ளேயே டேங்க் இருக்கும். ஆனால், தொழுகைக்கு வருபவா்கள் வீட்டிலேயே கை, கால்களை கழுவிவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். மேலும் தொழுகையின் போது சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ஆங்காங்கே குறியீடுகள் போடப்பட்டிருந்தன.

பங்களாசாஹிப், சிஸ்கஞ்ச், ரகாப்கஞ்ச் உள்ளிட்ட முக்கிய குருத்வாராக்களில் சீக்கிய பக்தா்கள் வழிபாடு நடத்தியதைக் காணமுடிந்தது. சமூக இடைவெளி மற்றும் தூய்மைப்படுத்துதல் நடவடிக்கைகளைப் பின்பற்றியவாறு அவா்கள் குரு கிரந்த சாஹிப்புக்கு மரியாதை செலுத்தினா். பெரும்பாலான குருத்வாராக்களில் மக்கள் நீண்ட நேரம் தங்கியிருக்க அனுமதிக்கப்படவில்லை. வழிபாடு முடிந்தவுடன் அவா்கள் வெலியேற்றப்பட்டனா் என்று தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் குழு தலைவா் மன்ஜிந்தா் சிங் சிா்ஸா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.