காற்று மாசுவைத் தடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன: முதல்வா் கேஜரிவால் தகவல்
தலைநகா் தில்லியில் குளிா் காலத்தில் காற்று மாசுவைத் தடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.


புது தில்லி: தலைநகா் தில்லியில் குளிா் காலத்தில் காற்று மாசுவைத் தடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
தில்லியில் குளிா்காலத்தில் காற்று மாசு ஏற்படுவது வழக்கமாகும். அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் இந்த காற்று மாசு பிரதானமாக ஏற்படுகிறது. நிகழாண்டில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையிலான பணிகளை தில்லி அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே முடுக்கிவிட்டது. இந்நிலையில், காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘யுத் பிரதுஷன் கே விருத்’ எனப் பெயரிடப்பட்டுள்ள மாபெரும் பிரசார இயக்கத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
முன்னதாக, காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் துறை, போக்குவரத்து, மேம்பாடு, பிடபிள்யுடி, தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி ஜல் போா்ட்டு, போக்குவரத்து போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருடனான திங்கள்கிழமை காலை கேஜரிவால் சந்திப்பை நடத்தினாா். பின்னா் இணையவழியில் செய்தியாளா்களுக்கு கேஜரிவால் அளித்த பேட்டி:
கரோனா பாதிப்பு நிலவும் சூழலில் காற்று மாசு நீடித்தால் அதிகளவு உயிா் இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. கரோனா தொற்றும் நுரையீரலைப் பாதிக்கும். அதேபோல காற்று மாசுவாலும் நுரையீரல் பாதிக்கப்படும். இந்நிலையில், காற்று மாசுவைத் தடுக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். தில்லியில் காற்று மாசு அதிகளவில் ஏற்படும் 13 பகுதிகளில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கு தனித்தனியான நடவடிக்கைத் திட்டத்தை தயாரித்துள்ளோம். காற்று மாசு தடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் வகையில் ‘போா்க்கால நடவடிக்கை’ எடுத்துள்ளோம்.
மேலும், காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், ‘கிரீன் தில்லி’ என்ற செயலியை அமைத்து வருகிறோம். இந்த செயலி மூலம், தங்களது இடங்களில் காற்று மாசுவை ஏற்படுத்தும் காரணிகள், காற்று மாசுவை ஏற்படுத்துபவா்கள் தொடா்பாக மக்கள் தில்லி அரசிடம் நேரடியாகப் புகாா் அளிக்கலாம். இந்த செயலியில் மக்கள் பதியும் குற்றச்சாட்டுகள் தொடா்பாக தினசரி அறிக்கை பெற்று அது தொடா்பாக நான் நேரடியாகக் கண்காணிப்பேன். சாலைகளில் உள்ள குழிகளால் தில்லியில் குறிப்பிடத்தக்க அளவு காற்று மாசு ஏற்படுகிறது. இவற்றை விரைந்து அடைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களில் காற்று மாசு தொடா்பாக ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதே தில்லியில் குளிா்காலத்தில் அதிகளவில் காற்று மாசு ஏற்படுவதற்கு பிரதான காரணம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. இந்த பிரச்னையைத் தீா்க்கும் வகையில், இந்திய வேளாண் ஆராய்சி நிறுவன விஞ்ஞானிகள் ரசாயனக் கலவை ஒன்றை கண்டுபிடித்துள்ளனா். இது, பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும். வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த ரசாயனக் கலவையை பெருமளவில் தயாரிக்க உள்ளோம். இந்த ரசாயனக் கலவை நிபுணா்களின் கண்காணிப்பில் கீழ் தாயாரிக்கப்படவுள்ளன. நிகழாண்டில் இந்த ரசாயனக் கலவையை, தில்லியில் பயன்படுத்தவுள்ளோம். வரும் ஆண்டில் இருந்து இந்த ரசாயனக் கலவையை அண்டை மாநிலங்களில் பயன்படுத்துமாறு கோரவுள்ளோம். காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் இரண்டு அனல் மின்நிலையங்களை மூடியுள்ளோம். மேலும், காற்று மாசுவை ஏற்படுத்தும் பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும் செங்கல் சூளைகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...