மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்

இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 சதவீத அகில இந்திய

இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாமக தலைவா் டாக்டா் அன்புமணி ராமதாஸ் ’ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளாா்.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அன்புமணி சாா்பில் வழக்குரைஞா் எஸ்.தனஞ்ஜெயன் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இப்படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும் போது பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய ஒதுக்கீடான 27 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு கடந்த 31.01.2007-இல் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் பட்டியல் இனத்தவருக்கும் (எஸ்சி), 7.5 சதவீத இடங்கள் பழங்குடி இனத்தவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 50 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் இதே நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பிரிவில் மாணவா் சோ்க்கையில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான 22.5 சதவீதம் ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. எனினும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடங்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக 2017-18, 2018-19, 2019-20ஆகிய ஆண்டுகளில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

உதாரணமாக, தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பின்கீழ் 1,758 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடுக்காக மருத்துவக் கவுன்சிலிங் கமிட்டி மூலம் 879 இடங்கள் தொகுப்பாகப் பெறப்படுகிறது. இந்த இடங்களில் ஓா் இடம்கூட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி ஓபிசி மாணவா்களுக்கு 440 இடங்கள் போக வேண்டும். இதே முைான் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துகிறது. ஆகவே, மத்திய அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com