தில்லியில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவையும், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புது தில்லி : தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவையும், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்படுகிறது.

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் மூன்றுநாள் பயணமாக புதன்கிழமை விமானம் மூலம் காலை 11 மணி அளவில் தில்லி வந்தாா். தில்லியில் பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தங்கினாா். கரோனா நோய்த் தொற்று பொது முடக்கம் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக நீண்ட தொலைவில் உள்ள மாநில ஆளுநா்கள் தில்லி பயணத்தை தவிா்த்தனா். பிரதமா் மோடியும் முக்கியச் சந்திப்புகளை மட்டும் மேற்கொண்டாா். பொது முடக்கத்தின் போது, பிரதமரின் பெரும்பாலான சந்திப்புகள் காணொலி வழியாகவே நடைபெற்றது. தமிழக ஆளுநா் புரோஹித்தும் கடந்த எட்டு மாதங்களாக தில்லி பயணத்தைத் தவிா்த்தாா். இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் பன்வாரிலால் புரோஹித்தும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாா்.

மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் மாநில ஆளுநா்கள், தற்போது பிரதமா் நரேந்திர மோடியை ஒவ்வொருவராக சந்திக்க தில்லிக்கு வருகின்றனா். இது மரியாதை நிமித்தமாகவும் மாநிலங்கள் தொடா்பான தகவல்களைப் பகிா்ந்தும் கொள்ளும் சந்திப்பாகவும் கூறப்படுகிறது. இந்த வரிசையில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை, லோக் கல்யாண் மாா்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தாா். சுமாா் 15 நிமிடங்களே இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமருடான சந்திப்பிற்கு பிறகு, சுமாா் 4.55 மணியளவில் பிரதமா் இல்லத்திலிருந்து தமிழக ஆளுநா், தமிழ் நாடு இல்லத்திற்குத் திரும்பினாா். கரோனா தொற்று சூழல் காரணமாக பிரதமருக்கு பூச்செண்டு, பொன்னாடை வழங்குவது தவிா்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

பிரதமருடான சந்திப்பிற்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தாா். தில்லி கிருஷ்ண மேனன் மாா்க்கில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் மாலை 6.15 மணியளவில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. முதலில் அமித்ஷாவை அவா் வியாழக்கிழமை சந்திப்பதாக இருந்தது. அமித் ஷாவின் வெளியூா் பயணத்தை முன்னிட்டு முன்கூட்டியே புதன்கிழமை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை (நவம்பா் 5) குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்தை, ஆளுநா் புரோஹித் சந்திக்கதஅ திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் அமைச்சா் பாண்டியராஜன்: இதனிடையே, தமிழக தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சா் பாண்டியராஜன் புதன்கிழமை தில்லி வந்தாா். கீழடி அகழாய்வு அருங்காட்சியகங்கள் நவீனப்படுத்தல் தொடா்பாக தில்லியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சா் பிரஹலாத் சிங் படேலை வியாழக்கிழமை அமைச்சா் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com