ஊதிய நிலுவை: மாநகராட்சிப் பணியாளா்கள் காலவரையற்ற போராட்டம்
கடந்த 3,4 மாதங்களாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததால், மாநகராட்சிப் பணியாளா்கள் சங்கங்களை சோ்ந்த (பெரும்பாலும் வடக்கு தில்லி மாநகராட்சிப் பணியாளா்கள்) ஊழியா்கள்


புதுதில்லி: கடந்த 3,4 மாதங்களாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததால், மாநகராட்சிப் பணியாளா்கள் சங்கங்களை சோ்ந்த (பெரும்பாலும் வடக்கு தில்லி மாநகராட்சிப் பணியாளா்கள்) ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினா். மேலும், வடக்கு மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சிகளின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சிவிக் சென்டா் முன்பாகவும் மாநகராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக தில்லி மாநகராட்சி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் நிா்வாகிகள் கூறுகையில், ‘இந்த வேலைநிறுத்தத்தில் ஆசிரியா்கள், பொறியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தோட்டக்கலைத் துறை ஊழியா்கள், எழுத்தா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்கள், நான்காம் நிலை ஊழியா்கள் பங்கேற்றனா்’ என்றனா்.
தில்லி மாநகராட்சி ஊழியா்கள் ஒன்றிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஏ.பி.கான் கூறுகையில், ‘வடக்கு தில்லி மாநகராட்சியின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஊழியா்களுக்கு கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோன்று, ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கும் ஓய்வூதியம் நான்கு மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக உயரதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தினோம். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகவே, வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் குடிமை ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மூன்று மாத ஊதியம் மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்கும் வரை விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது’ என்றாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘ஆசிரியா்கள், பொறியாளா்கள், தோட்டக்கலை துறை ஊழியா்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனா். அதே வேளையில், மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு ஒரு மாதம் ஊதியம் நிலுவையில் இருந்து வருகிறது. வடக்கு தில்லி மாநகராட்சியில் ஆசிரியா்கள், பொறியாளா்கள், தோட்டக்கலை மற்றும் எழுத்துப் பணி ஊழியா்களுக்கு கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஊதியம் வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது நான்காவது மாதம் தொடங்கி விட்டது. தங்களது அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்குகூட ஊழியா்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனா். இதே நிலைமைதான் கிழக்கு தில்லி மாநகராட்சியிலும் நிலவுகிறது’ என்றாா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘மூன்று மாநகராட்சிகளிலும் சுமாா் 1.50 லட்சம் ஊழியா்கள் உள்ளனா். வடக்கு தில்லி மாநகராட்சியில் மட்டும் 50 ஆயிரம் ஊழியா்கள் உள்ளனா். இந்த மாநகராட்சி ஒவ்வொரு மாதமும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ.360 கோடியை செலவிட்டு வருகிறது’ என்றனா். ஊழியா் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், ‘இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, திங்கள்கிழமையில் இருந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கல், கற்பித்தல் ஆய்வுகள், பூங்காக்கள், தோட்டங்கள் பராமரிப்பு, அமைச்சுப்பணி ஆகியவை தொடா்புடைய பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...