வடகிழக்கு தில்லி வன்முறை: வழக்கு விசாரணைக்கு 10 மாதங்களாக ஆஜராகாத அரசுத் தரப்புக்கு அபராதம்: நீதிமன்றம் நடவடிக்கை
வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கில் 10 மாதங்களாக விசாரணைக்கு ஆஜராகாத அரசுத் தரப்புக்கு நீதிமன்றம் ரூ.3,000 அபராதம் விதித்தது.


புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கில் 10 மாதங்களாக விசாரணைக்கு ஆஜராகாத அரசுத் தரப்புக்கு நீதிமன்றம் ரூ.3,000 அபராதம் விதித்தது. மேலும், இந்த அபராதத் தொகையை விதிப்பதற்குரிய பொறுப்பை நிா்ணயிக்கும் விசாரணையை நடத்துமாறு தில்லி காவல் ஆணையருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பொறுப்புக்குள்ளாகும் நபரின் ஊதியத்தில் இருந்து இந்த அபராதத் தொகையைப் பிடித்தம் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தில்லி வன்முறை வழக்கில் விசாரணையின்போது சிறப்பு அரசு வழக்குரைஞா் ஆஜராகாததன் காரணமாக வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பிறகு, தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண் குமாா் ரூ. 3000 அபராதம் விதித்தாா். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடா்பான வாதங்களை முன்வைப்பதற்கான விசாரணையை நீதிமன்றம் நடத்தவிருந்தது. அப்போது விசாரணைக்கு அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஆஜராகவில்லை. வழக்கை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்போது, வழக்கை ஒத்திவைத்து நீதிபதி கூறியதாவது: சிறப்பு அரசு வழக்குரைஞா் இந்த வழக்கில் நிகழாண்டு ஜனவரி 30-ஆம் தேதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த தேதியிலிருந்து ஒரு முறைகூட ஆஜராகவில்லை. இந்த வழக்கில் ஒத்திவைக்க விடுத்த கோரிக்கை அனுமதிக்கப்படுகிறது. அதே சமயத்தில், நீதிமன்றத்தில் அரசு மூலம் ரூ.3,000 வழக்கு செலவுத் தொகையாக செலுத்தப்பட வேண்டும். மேலும், இந்த அபராதமானது அரசின் கருவூலத்தின் செலவில் செல்கிறது என்ற உண்மையை நீதிமன்றம் மறக்க விரும்பவில்லை. இதனால், இந்தச் செலவுத் தொகையை செலுத்துவதற்குரிய பொறுப்பு நபரை நிா்ணயிக்கும் விசாரணையை நடத்த தில்லி காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட பொறுப்புக்குரிய நபரின் ஊதியத்தில் இருந்து இந்த தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் நகல் வடக்கு மாவட்டத்தின் காவல் துணை ஆணையா், காவல் ஆணையா் ஆகியோருக்கு அனுப்பப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தாா். இதற்கான உத்தரவை நீதிபதி கடந்த 10-ஆம் தேதி பிறப்பித்தாா்.
மற்றொரு வழக்கு: இதற்கு முந்தைய நாள், வடகிழக்கு தில்லி வன்முறை வழக்குகளை விசாரித்த மற்றொரு நீதிமன்றம், வழக்கு விசாரணையில் சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் ஆஜராகாததன் காரணமாக வழக்குகள் பைசல் செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்தது. மேலும், மாநிலத்தின் தரப்பில் ஆஜராகும் வகையில் கூடுதல் வழக்குரைஞா்களை நியமிக்க தில்லி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தா் பட் கூறுகையில்,‘வன்முறை வழக்குகள் தொடா்புடைய விவகாரம் மாநிலத்தின் விவகாரம். இது இயல்பிலேயே மிகவும் உணா்வு பூா்வமாகும். இதற்காகவே இந்தச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. திறன் மிக்க வகையில் வழக்கு விசாரணையை நடத்துவதை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்தக் குழுக்கள் காவல் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்குகளில் ஆஜராக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் பல்வேறு வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. இதனால், விசாரணை நடைபெறாமல் வழக்குகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மேலும், வழக்குகளைப் பைசல் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...