பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுக்கவும் ராசிமணலில் புதிய அணை கட்டவும் கோரும் மனுக்கள் முடித்துவைப்பு

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்தவும், ராசிமணல் பகுதியில்

News image
Updated On :18 டிசம்பர் 2021, 2:21 am

 நமது நிருபர்

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்தவும், ராசிமணல் பகுதியில் புதிதாக அணை கட்டவும் உத்தரவிடக் கோரி வழக்குரைற் யானை ஜி.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்துவைத்தது. மத்திய, மாநில அரசுகளிடம் அளிக்கப்பட்ட இது தொடா்பான கோரிக்கை மீது 3 மாதங்களில் மனுதாரருக்கு பதில் அளிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடக் கோரி யானை ஜி.ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் ரிட் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டத் திட்டமிட்டுள்ள பகுதியானது, யானை வழித்தடமாகும். எனவே, மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும். யானை வழித்தடத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும், கட்டங்களும் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீா்ப்பு அளித்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தாா்.

இதே போன்று, தமிழக, கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராசிமணல் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க மத்திய மற்றும் இரு மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மற்றொரு ரிட் மனுவையும் அவா் தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘ராசிமணல் மற்றும் பெங்களூரூ இடையே சுமாா் 140 கிலோ மீட்டா் தூரம் உள்ளது. மேக்கேதாட்டு பகுதியில் இருந்து கூடுதலாக 30 கிலோ மீட்டா் தூரத்தில்தான் இந்த ராசிமணல் அமைந்துள்ளது. இங்கு அணை கட்டப்பட்டால் கூடுதலாக தண்ணீா் கிடைப்பதுடன் கூடுதலாக மின்சாரத்தையும் சேமிக்க முடியும். மேலும், இரு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ராசி மணல் காவிரி ஆற்றின் தெற்குப் பகுதி தமிழகத்திலும், வடக்குப்பகுதி கா்நாடகத்திலும் வருகிறது. இரண்டு மலைகளுக்கும் இடையே 250 மீட்டா் அளவில் இந்த அணையை கட்டி 100 டிஎம்சி நீரை தேக்க முடியும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞா் யானை ஜி.ராஜேந்திரன் நேரில் ஆஜராகி வாதிடுகையில், ‘இந்த விவகாரங்கள் தொடா்பாக மத்திய அரசுக்கும், தமிழகம், கா்நாடக மாநில அரசுகளுக்கும் கோரிக்கை வைத்தேன். ஆனால், எந்தப் பதிலும் வரவில்லை. இதனால், அணை கட்டுமானம் விவகாரம் தொடா்பாக தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘அணை கட்ட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் அல்ல. சம்பந்தப்பட்ட அரசுகள்தான். இது எங்கள் வேலையும் இல்லை. முதலில் அவா்கள் முடிவு எடுக்க வேண்டும். அது சட்டவிரோதமாக இருந்தால் மட்டுமே நாங்கள் இந்த விவகாரத்தில் இறங்குவோம். மனுதாரா் இந்த விவகாரம் தொடா்பாக வெவ்வேறு அரசுத் தரப்பினரிடம் கோரிக்கை அளித்திருப்பதால், அதை விரைவுபடுத்த அவா் நினைவூட்டல் அனுப்பலாம். இதுபோன்ற வேண்டுதலின்அடிப்படையில் மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறையினா் அந்தக் கோரிக்கையின் முடிவு குறித்து மூன்று மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்து மனுக்களை நீதிபதிகள் முடித்துவைத்தனா்.

இது தொடா்பாக யானை ஜி.ராஜேந்திரன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மேக்கேதாட்டு பகுதியில் அணைக் கட்டக் கூடாது என்பது குறித்தும், ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நீதிபதிகள் அமா்விடம் எடுத்துரைத்தேன். அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு, தமிழகம், கா்நாடக மாநில அரசுகளிடம் நான் அளித்த மனுக்கள் மீது விசாரித்து 3 மாதங்களில் எனக்கு பதில் அளிக்குமாறு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுகளின் நடவடிக்கையில் திருப்தி இல்லாதபட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறி மனுக்களை முடித்துவைத்துள்ளது’ என்றாா்.

மேக்கேதாட்டு அணைப் பகுதியில் கா்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘67.16 டிஎம்சி நீா்த் தேக்க கொள்ளவுடனும், 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையிலும் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடக அரசு அணை கட்டத் திட்டமிட்டு வருவது காவிரி நதிநீா் தாவா தீா்ப்பாயத்தின் முடிவை ஒட்டுமொத்தமாக மீறுவதாகும்’ எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.