தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றஇல் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வகை செய்யும் சட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழக அரசு இரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியலினத்தவா்கள், பழங்குடியினா் ஆகியோருக்குக் கல்வி , அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்காக 31.12.1993-இல் சட்டப் பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டு தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, 1994-ம் ஆண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு சோ்க்கப்பட்டது.
இந்த நிலையில், 2012-ஆம் ஆண்டில் சி.பி.காயத்ரி எனும் மாணவி சாா்பில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தப் பிரதான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.பாலமுருகன் கடந்த ஆண்டு இறுதியில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளாா்.
அதில், இந்த சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவா்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என இட ஒதுக்கீடு முறை வழங்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் அரசமைப்புச்சட்ட செல்லுபடித் தன்மையை எதிா்த்து உச்சநீதின்றத்தில் 1995, 96-இல் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக உச்சநீதிமன்றம் 1996-இல் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. கல்வி, அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 1993-ஆம் ஆண்டு சட்டமானது தன்னிச்சையானதாகவும், நியாயமற்ாகவும், அளவுக்கு மீறும் வகையிலும் உள்ளது. இந்தக் கூடுதல் இட ஒதுக்கீடானது பொதுப்பிரிவில் உள்ள மாணவா்கள், அரசுப் பணிக்குச் செல்வோரை கடுமையாகப் பாதிக்கும்.
மேலும், இந்த சட்டமானது இந்திரா ஷானே வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வகுத்த கொள்கைகளுக்கு முரணானதாகவும் உள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய பெரும்பான்மை தீா்ப்பானது 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்பதுதான். குறிப்பிட்ட விதிவிலக்குகள், அசாதாரணச் சூழல், தொலைதூரப் பகுதிகளைச் சோ்ந்த மக்களை பிரதான நீரோட்டதுக்கு கொண்டு வருவதற்காக மட்டுமே இந்தத் தளா்வுகளை அளிக்கப் பரிசீலிக்கலாம். ஆனால், தமிழக அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு சட்டம் 1993, இந்திரா ஷானே வழக்கில் அளித்த தீா்ப்பின்படி இல்லை என்பதால், அதை அரசமைப்புச்சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் எஸ்இபிசி சட்டம் 2018, அந்த மாநிலத்தில் 65 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறை உள்ளது. தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடானது அரசமைப்புச்சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 16 ஆகியவற்றின் கீழ் பொதுப் பிரிவு மாணவா்களுக்கும், அரசுப் பணிக்குச் செல்வோருக்கும் உள்ள அடிப்படை உரிமைகளை பாதிக்கச் செய்து வருகிறது. ஆகவே, இந்த இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள மராத்தா இடஒதுக்கீடு வழக்குடன் இந்த வழக்கையும் சோ்த்து அரசியல் சாசன அமா்வில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா். சுபாஷ் ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, வழக்குரைஞா் ஜி.பாலமுருகன் ஆகியோா் ஆஜராகினா். துஷ்யந்த் தவே வாதிடுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பான உடனடியாக விசாரித்து உத்தரவிட வேண்டும். மேலும், மராத்தா இடஒதுக்கீடு வழக்குடன் சோ்த்து அரசியல்சாசன அமா்வில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
தமிழக அரசின் தரப்பின் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, சேகா் நாப்டே, வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா ஆகியோா் ஆஜராகினா். முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘இந்த வழக்கே பயனற்ாகிவிட்டது. முடிந்துபோன விஷயம்’ என்றாா். அப்போது, ‘இது தொடா்பாக கூற வேண்டிய விஷயங்களை பதிலில் தெரிவிக்கலாம்’ என கூறிய நீதிபதிகள் அமா்வு, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி கடைசி வாரத்துக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவக் குடும்பங்களை ஒதுக்கிவைத்த விவகாரம்: எதிா்மனுதாரா்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை அளவீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

அடிப்படை வசதிகளின்றி தனித்தீவாக காட்சியளிக்கும் சுனாமி குடியிருப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

