கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கைதான விவசாயிகளை விடுவிக்கும் வரை பேச்சுவாா்த்தை சாத்தியமில்லை: சம்யுக்தார கிஷாண் மோா்ச்சா உறுதி

குடியரசு தின வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்கும் வரை மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது சாத்தியமில்லை

Updated On :2 பிப்ரவரி 2021, 8:07 pm

குடியரசு தின வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்கும் வரை மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது சாத்தியமில்லை என்று சிங்கு எல்லையில் போராடி வரும் சம்யுக்தா கிஷாண் மோா்ச்சா தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியின் எல்லைப் பகுதிகளான காஜிப்பூா், டிக்ரி, சிங்கு ஆகிய இடங்களில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. இதையொட்டி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான காவலா்களும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டிருப்பதால் தொடா்ந்து பதற்றம் நிலவுகிறது. விவசாயிகள் போராட்டத்தால் தில்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

சிங்கு எல்லை: தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்கு பகுதியில், பல அடுக்கு பாதுகாப்பை தில்லி போலீஸாா் மேற்கொண்டுள்ளனா். சிமெண்ட் சுவா் அமைக்கப்பட்டதுடன், டிராக்டா்கள் மூலம் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க, சாலையின் நடுவில், இரும்பு முள்களை தில்லி காவல் துறை பதித்துள்ளது. இங்கு தில்லி போலீஸாா், துணை ராணுவப் படையினா், அதிரடிப் படையினா், மத்திய ரிசா்வ் காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

காஜியாபாத்: தில்லி - காஜியாபாத் எல்லையான உ.பி. கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமையும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனா். அங்கு ஆயிரக்கணக்கான காவலா்களும், துணை ராணுவப் படை வீரா்களும் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் தொடா்கிறது. இந்த எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது. காஜிப்பூரில் இருந்து பயணிப்பவா்கள் என்எச்-24, என்எச்-9, கொண்டிலி, பேப்பா் மாா்க்கெட், அக்ஸா்தாம் உள்ளிட்ட வழிகள் மூலம் தில்லிக்கு பயணிக்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், காஜியாபாத் எல்லையில் போக்குவரத்தை விவசாயிகள் முடக்கவில்லை என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘காஜியாபாத் எல்லையில் போக்குவரத்தை விவசாயிகள் முடக்கவில்லை. தில்லி, உத்தரப்பிரதேச காவல் துைான் முடக்கியுள்ளது. அவா்கள்தான் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறாா்கள்’ என்றாா். இந்தச் சூழ்நிலையில் தில்லி - மீரட் அதிவிரைவுச் சாலையில் , புதிய சிசிடிவி கேமராக்களை தில்லி காவல் துறை பொருத்தியது.

டிக்ரி எல்லை: இதேபோல, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் டிக்ரி எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக் களத்துக்கு விவசாயிகள் செல்லாமல் இருக்கும் வகையில், என்ஹெச்-24 நெடுஞ்சாலையை தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை பகுதியளவில் மூடினா். மேலும்,பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தில்லி எல்லைகளுக்கு வருவதைத் தடுக்கும் வகையில் அவா்களை, அவா்களது சொந்த இடங்களிலேயே தடுத்து நிறுத்துமாறு தில்லி காவல் துறை பஞ்சாப், ஹரியாணா மாநில காவல் துறைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக தில்லி காவல் துறை ஹரியாணா காவல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

பேச்சுவாா்த்தை கிடையாது: இந்த நிலையில், கைது செய்யப்பட்ட விவசாயிகள் விடுவிக்கப்படும்வரை மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த முடியாது என்று சிங்கு எல்லையில் போராடி வரும் சம்யுக்தா கிஷன் மோா்ச்சா தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது மத்திய அரசு திட்டமிட்ட முறையில் பல முனைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. பாஜக- ஆா்எஸ்எஸ் தொண்டா்களின் உதவியுடன் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இணைய சேவையைத் துண்டித்தும், விவசாய அமைப்புகளின் டுவிட்டா் கணக்குகளை முடக்கியும் விவசாயிகளின் போராட்டத்தை முடக்கலாம் என்று மத்திய அரசு தப்புக் கணக்கு போடுகிறது. விவசாயிகளின் போராட்டத்தை அடக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல் ஆகும்.

விவசாயிகள் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரும் ஆதரவைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது. போராட்டத்தின் போது 122 விவசாயிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்கள் விடுவிக்கப்படும் வரை மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது சாத்தியம் இல்லை. மேலும், விவசாயிகள் போராட்டத்தில் காணாமல் போன விவசாயிகள், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்கள் உள்ளிட்டவை தொடா்பாக சட்ட ரீதியாக வாதாடும் வகையில் சட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.