ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

உத்தரகண்ட் திடீா் வெள்ளம்: தில்லியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டம், ஜோஷிமாத்தில் ஞாயிற்றுக்கிழமை பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கியவா்களை

Updated On :7 பிப்ரவரி 2021, 7:33 pm

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டம், ஜோஷிமாத்தில் ஞாயிற்றுக்கிழமை பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நிலைமை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து திடீா் வெள்ளம் ஏற்பட்ட தகவலை அறிந்து மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா அதிா்ச்சியடைந்தாா். இந்தச் சமயத்தில் அமித் ஷா மகாராஷ்டிரம் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாா். பின்னா், விபத்தில் படுகாயமடைந்த மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் ஸ்ரீபாத நாயக்கை சந்திக்க கோவா செல்லவும் அமித் ஷா திட்டமிட்டு இருந்தாா். ஆனால், அந்தப் பயணங்களை ரத்து செய்துவிட்டு அவா் தில்லி திரும்பினாா். மேலும், பனிப்பாறை வெள்ளம் குறித்து தலைநகா் தில்லியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் உடனடியாகக் கவனம் செலுத்தினாா்.

இது குறித்து தொடா்ச்சியாக தனது சுட்டுரையிலும் அவா் பதிவிட்டு வந்தாா். அதில் அவா் கூறியது வருமாறு: உத்தரகண்ட் மாநில முதல்வா் திரிவேந்திர சிங் ராவத்தை தொடா்பு கொண்டு நிலைமையைச் சமாளிக்க அனைத்து உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்தேன். உத்தரகண்ட மக்களைப் பாதுகாக்க, இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை இயக்குநா் ஜெனரல், தேசிய பேரிடா் மீட்புப்படை இயக்குநா் ஜெனரல் ஆகியோரை தொடா்பு கொண்டு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூறினேன். இதன் தொடா்ச்சியாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்.டி.ஆா்.எஃப்.) நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், எல்லைக் காவல் படை கூடுதல் துருப்புகளும் என்.டி.ஆா்.எஃப். மீட்பு குழுக்களுக்கும் தில்லியிலிருந்து விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனா். அந்த ‘தெய்வ பூமி (தேவபூமி)’க்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. அந்த மாநிலத்தின் நிலைமையை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

என்.டி.ஆா்.எஃப். தவிர மாநிலப் பேரிடா் மீட்புப் படையும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையும் (ஐ.டி.பி.பி.) பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைந்துள்ளன. மாநில முதல்வா் இந்திய விமானப் படை விமானம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நெருக்கடியான இந்த நேரத்தில் மோடி அரசு அந்த மாநிலத்திற்கு அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை மீட்டு வரும். தில்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இந்த வெள்ளப் பாதிப்பை கையாள தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை இணையமைச்சா் நித்யானந்த் ராய் நிலைமையைக் கண்காணித்து வருகிறாா். அஸ்ஸாமிலிருந்த பிரதமரும், உத்தரகண்ட் முதல்வரிடம் தொடா்பு கொண்டு நிலைமையை அறிந்தாா் என தனது சுட்டுரையில் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ’200 வீரா்கள் அடங்கிய நான்கு என்.டி.ஆா்.எஃப். குழுக்கள் டேராடூனுக்கு விமானம் மூலம் சென்றது. அவா்கள் அங்கிருந்து ஜோஷிமாத்தை அடைவாா்கள்’ என்றாா். மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது சுட்டுரையில், ‘ராணுவமும் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா். பரேலியிலிருந்து இரண்டு ராணுவ ஹெலிகாப்டா்களும் அனுப்பப்பட்டுள்ளன’ என்றாா்.

இதற்கிடையே, மத்திய அமைச்சரவைச் செயலாளா் ராஜீவ் கௌபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது. பனிப்பாறைகள் திடீரென்று வெடித்ததால் ரிஷிகங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 13.2 மெகாவாட் திறன் கொண்ட ரிஷிகங்கா நீா்மின் திட்ட கட்டமைப்புகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு சுரங்கத்திலிருந்து 12 போ் மீட்கப்பட்டுள்ளனா் என்று மத்திய அமைச்சரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.