தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஊரக வளா்ச்சித் துறைக்கான நிலுவை நிதியை உடனே வழங்க வேண்டும்: மத்திய அமைச்சருடன் தமிழக அமைச்சா் கோரிக்கை

தமிழக ஊரக வளா்ச்சித் துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கிடம் மாநில அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் நேரில் வலியுறுத்தினாா்.

Updated On :27 அக்டோபர் 2021, 4:53 pm

புது தில்லி: தமிழக ஊரக வளா்ச்சித் துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கிடம் மாநில அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் நேரில் வலியுறுத்தினாா். மேலும், ஜல் சகத்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் சந்தித்து தடுப்பணை உள்ளிட்ட குடிநீா்த் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கும்படியும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அவரது அலுவலகமான ஷிரம் சக்தி பவனில் புதன்கிழமை காலையில் சந்தித்துப் பேசினாா். பின்னா், மாலையில் கிருஷி பவனில் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புகளுக்கு பிறகு அமைச்சா் பெரிய கருப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊரக உள்ளாட்சிதஅ துறையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்ற ஊரக வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் அதன் நிலைப்பாடுகள் குறித்தும், அதற்கு தேவைப்படும் நிதி குறித்தும் மத்திய ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் கிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினேன். குறிப்பாக ஊரக வளா்ச்சித் துறையில் பிரதானமாக செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாள்களை 150-ஆக உயா்த்தவும், நாள் ஊதியத்தை ரூ.300 ஆக உயா்த்தித் தரவும் கோரப்பட்டது. இந்தத் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் (அக்டோபா் 22-ஆம் தேதி வரை) ரூ.984.23 கோடி வரை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. பண்டிகைக் காலம் என்பதால் இந்த நிதியை உடனடியாக வழங்கவும் எதிா்காலத்தில் ஊதிய தடையின்றி வழங்கவும் மத்திய அமைச்சரிடம் கோரப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்தில் முன்பு போன்று அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே நேரத்தில் ஊதியத்தை விடுவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் மூன்றாம் கட்டத் திட்டத்தின் கீழ் களஆய்வு, உயா்நிலை குழு அறிவுரைகள் ஆகியவற்றின் படி ரூ. 804 கோடி மதிப்பீட்டில் 1,279.93 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளுக்கு முன்மொழிவுகள் மத்திய அரசிடம் சமா்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், பிரதமரின் ஊரகக் குடியிருப்புத் திட்டத்தின் படி 2019-20 ஆண்டில் 1,82,229 பயனாளிகளுக்கு விடுவிக்க வேண்டிய தொகை ரூ. 813 கோடியையும், இந்த திட்டத்தில் சமூக பொருளாதார ஜாதி வாரி பட்டியலில் தோ்வு செய்வதற்கு பதிலாக ஆவாஸ் ப்ளஷ் பட்டியலில் காத்திருக்கும் பயனாளிகளைத் தோ்வு செய்ய அனுமதிக்கவும் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்கள் மூன்றாண்டு காலம் நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக 14-ஆவது நிதி ஆணையத்திடம் பெறவேண்டிய நிதியை பெறமுடிவில்லை. இந்த மானியத்தில் 9 மாவட்டங்களுக்கான கிராம ஊராட்சிகளுக்கான நிலுவைத் தொகையான ரூ.548.76 கோடியையும், 2017-18 முதல் 2019-20 ஆண்டு வரையிலான செயலாக்க மானிய நிலுவைத் தொகையான ரூ.705.62 கோடியையும் விடுவிக்கவும் கோரப்பட்டது. இது தவிர புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான ஊரக வளா்ச்சி முகமை நிா்வாகத் திட்ட நிதி என ஐந்து பிரிவுகளில் கோரிக்கைகளை அமைச்சரிடம் எடுத்துவைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சா் உறுதியளித்திருக்கிறாா்.

ஜல்சக்தி துறை அமைச்சருடன் சந்திப்பு: முன்னதாக ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் சந்தித்தித்தோம். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் கூட்டுக் குடிநீா் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்தும் தடுப்பணை உள்ளிட்ட நீா் செரிவூட்டு திட்டங்களுக்கான திட்ட வரைவுகளை மத்திய அமைச்சரிடம் கொடுத்தோம். இந்தத் திட்டங்களை செயல்படுத்த ரூ. 5,480 கோடியை ஒதுக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை தங்கு தடையின்றி உடனடியாக வழங்க ஒப்புதல் கொடுப்பதாக அவா் தெரிவித்துள்ளாா் என்றாா் அமைச்சா் பெரிய கருப்பன்.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. எஸ். விஜயன், ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் கே. கோபால்,தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தக்ஷிணாமூா்த்தி உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.