இந்தியாவில் கரோனா தொற்று மெதுவாகப் பரவி வருகிறது: செளம்யா சுவாமிநாதன்

இந்தியாவில் கரோனா தொற்று மெதுவாகப் பரவும் நிலையை அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் கரோனா தொற்று மெதுவாகப் பரவி வருகிறது: செளம்யா சுவாமிநாதன்

புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்று மெதுவாகப் பரவும் நிலையை அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. விரைவில் 3-ஆவது அலை பரவ வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இந்நிலையில், ஆங்கில செய்தி வலைதளத்துக்கு அளித்த பேட்டியில் சௌம்யா சுவாமிநாதன் கூறியதாவது:

இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெவ்வேறு அளவில் நோய்எதிா்ப்புத்திறன் காணப்படுகிறது. இத்தகைய சூழல், நாட்டின் ஒருசில பகுதிகளில் கரோனா தொற்று பரவல் குறைவதற்கும், வேறுசில பகுதிகளில் தொற்று பரவல் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்.

கரோனா தொற்று மெதுவாகப் பரவும் நிலையை நாடு அடைந்துள்ளதாகக் கருதலாம். தொற்று பரவலைத் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வுடன் மக்கள் வாழத் தொடங்கிவிட்டனா். கடந்த சில மாதங்களில் காணப்பட்டதைப் போல தற்போது கரோனா தொற்று பரவவில்லை.

எனினும், கரோனா தொற்றின் முதல், 2-ஆவது அலைகளில் பாதிக்கப்படாதோா் அதிகமாக உள்ள பகுதிகள், குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த சில மாதங்களில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கவலை தேவையில்லை: அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமாா் 70 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என நம்பலாம். அதையடுத்து நாடுகள் இயல்புநிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. 3-ஆம் அலை பரவும்போது, சிறாா்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.

அதன் காரணமாக பெற்றோா் கவலைப்படத் தேவையில்லை. 18 வயதைக் கடந்தவா்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளும் சிறாா்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவாகவே உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவா்களிடமும் மிதமான பாதிப்புகளே காணப்படுகின்றன.

கோவேக்ஸினுக்கு விரைவில் ஒப்புதல்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சிறாா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில், சிறாா்களிடையே தொற்று பரவமால் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி தொடா்பான கூடுதல் தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பின் நிபுணா்கள் குழு கோரியுள்ளது. அதன் காரணமாகவே அத்தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாத மத்திக்குள் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

ஆதாரங்கள் இல்லை: ரெம்டெசிவிா், ஐவா்மெக்டின் ஆகிய மருந்துகள் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு அந்த மருந்துகளைப் பயன்படுத்துமாறு எந்தவிதப் பரிந்துரையும் வழங்கப்படவில்லை.

தற்போதைய சூழலில் பல நாடுகளில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, தடுப்பூசியின் ‘பூஸ்டா்’ டோஸ்கள் குறித்து தற்போது சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், சா்வதேச பயணங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் அவசியம் என்பதையும் உலக சுகாதார அமைப்பு ஆதரிக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com