தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலைக்கு ஒத்திவைப்பு
தஞ்சாவூரைச் சோ்ந்த 17 வயது மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தமிழக அரசு எதிா் பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை ஜூலைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


தஞ்சாவூரைச் சோ்ந்த 17 வயது மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தமிழக அரசு எதிா் பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை ஜூலைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியம் வடுகா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம். இவருடைய மகளான லாவண்யா (17), தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரி மேல்நிலைப் பள்ளியின் பள்ளிக்கூட விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், பூச்சிமருந்தை குடித்த நிலையில் அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மாணவி தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஜனவரி 31-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக காவல் துறையின் டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க அனுமதி அளித்தது. அதே நேரத்தில், உயா்நீதிமன்றம் தெரிவித்த குறிப்பிட்ட கருத்துகளை நீக்கக் கோருவது தொடா்பான விவகாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தங்களை ஒரு தரப்பாக சோ்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு கடந்த மாா்ச் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இந்த மேல்முறையீட்டு வழக்கில் என்சிபிசிஆா் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக ஆணையம் நடத்திய விசாரணை தொடா்புடைய ஆவணங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று என்சிபிசிஆா் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) நடத்திய விசாரணை தொடா்புடைய ஆவணங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும், மேல்முறையீட்டு மனுவில் என்சிபிசிஆா் தரப்பில் இடையீட்டு மனுவை சோ்க்கவும் உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
இதனிடையே, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரரான லாவண்யாவின் தந்தை முருகானந்தம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பெலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிா்மனுதாரா் தரப்பில் அளித்த பதிலுக்கு எதிா் பதில் அளிக்க தமிழக காவல் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, எதிா் பதில் அளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலைக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...