புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

நிகழாண்டில் தில்லியில் 69 பேருக்கு டெங்கு பாதிப்பு: மாநகராட்சி தகவல்

தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 8 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2022, 11:46 pm

 நமது நிருபர்

தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 8 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழாண்டில் மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 69-ஆக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட தொற்று நோய்கள் தொடா்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லியில் இந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை மொத்தம் 61 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே புதிதாக 8 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டில் குறைந்தபட்சம் 69 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஜனவரியில் 23 பேரும், பிப்ரவரியில் 16 பேரும், மாா்ச்சில் 22 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனா். ஏப்ரலில் 9-ஆம் தேதி வரை 8 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரையிலும் 69 பாதிப்புகளும், கடந்த ஆண்டு 9 பாதிப்புகளும், 2020- இல் 6 பாதிப்புகளும், 2019-இல் 7 பாதிப்புகளும், 2018-இல் 12 பாதிப்புகளும், 2017-இல் 15 பாதிப்புகளும் பதிவு செய்யப்பட்டன.

கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் பாதிப்புகள் வழக்கமாக ஜூலை - நவம்பா் மாதங்களில் பதிவாகும். இந்த பாதிப்பு காலம் டிசம்பா் மத்தி வரை நீடிக்கலாம். இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு முன்கூட்டியே பதிவாக தொடங்கியதால், நோய்ப் பரவலைத் தடுக்க மாநகராட்சிகள் தயாரிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

டெங்கு மற்றும் இதர நோய் பாதிப்புகளை தடுக்கும் வகையில், கிழக்கு தில்லி மாநகராட்சி குறுகியகால மற்றும் நீண்ட கால தொலைநோக்குப் பாா்வையுடன்கூடிய செயல் திட்டத்தை தயாரிப்பதாக அதன் அதிகாரிகள் முன்னா் தெரிவித்திருந்தனா்.

தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையா் கியானேஷ் பாா்தி, டெங்கு பாதிப்பு தடுப்பு, கட்டுப்பாடு தொடா்பாக அறிவுறுத்தலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தாா். இந்த அறிவுறுத்தல் அறிக்கையானது அனைத்து மத்திய, மாநில அரசுகள், சிபிடபிள்டி, பிடபிள்யுடி, டிடிஏ, தில்லி போலீஸ், தில்லி ஜல் போா்டு, டிஎம்ஆா்சி ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது.

தில்லியில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், தொழில்முறை நிறுவனங்களின் அனைத்து சங்கங்கள், வா்த்தக சங்கங்கள், வணிக அமைப்புகள் ஆகியவற்றுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளின் தலைமை அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை கரோனா காரணமாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், இந்த இடங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்எ’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசியத் தலைநகரில் கடந்த ஆண்டு மொத்தம் 9,613 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இது, 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓா் ஆண்டில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். மேலும், அந்த ஆண்டு மொத்தம் 23 இறப்புகள் பதிவாகின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பதிவான மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை விவரம்: 2016-இல் 4,431, 2017-இல் 4,726, 2018-இல் 2,798, 2019-இல் 2,036, 2020-இல் 1,072.

2015-ஆம் ஆண்டு தில்லியில் டெங்குவின் தாக்கம் மிகப் பெரும் அளவில் இருந்தது. அந்த ஆண்டு அக்டோபரில் பாதிப்பு எண்ணிக்கை 10,600-ஐத் தாண்டியது. இது, 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியத் தலைநகரில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 2021-ஆம் ஆண்டு 10 இறப்புகள் பதிவாகின.

இதுதவிர, தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 7மலேரியா நோய் பாதிப்புகளும், 8 சிக்குன்குனியா பாதிப்புகளும் பதிவாகின என்று மாநகராட்சிஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.