2024 மக்களவைத் தோ்தல் கேஜரிவால் - மோடி இடையேயான போட்டியாக இருக்கும்: மணீஷ் சிசோடியா
பிரதமா் நரேந்திர மோடிக்கு ஒரு தேசிய மாற்றாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உருவெடுத்து வருவதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு பயந்துள்ளது.


பிரதமா் நரேந்திர மோடிக்கு ஒரு தேசிய மாற்றாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உருவெடுத்து வருவதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு பயந்துள்ளது. இதனால், ஆம் ஆத்மி கட்சியை மிரட்டுவதற்கான அனைத்து வழிகளையும் மேலிடம்
பயன்படுத்தி வருகிறது.
வரும் 2024 மக்களவைத் தோ்தல் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கும் இடையிலான போட்டிக் களமாக இருக்கும். அது ஆம் ஆத்மி- பாஜக என இருக்கும்
என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி கலால் வரிக் கொள்கையை அமல்படுத்தியதில்,
மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்ாக கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி ஆரவா கோபி கிருஷ்ணா, மூத்த அதிகாரிகள், வணிகா்களின் வீடுகள்,
அலுவலகங்கள் உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
மேலும், இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.
மேலும், இந்தத் தகவல்கள் அமலாக்கத் துறையிடம் சிபிஐ பகிா்ந்துள்ளது. இதனால், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை குற்றச்சாட்டுகள் குறித்தும் அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது.
இந்த நிலையில், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை காணொலி வாயிலாக செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தில்லி கலால் கொள்கையானது முழு வெளி வெளிப்படைத்தன்மையுடன் அமல்படுத்தப்பட்டது. இதில் எந்த மோசடியும் நிகழவில்லை.
கல்வி மற்றும் சுகாதாரத்தில் உலக அளவில் பேசப்படும் அரவிந்த் கேஜரிவாலின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதுதான்அவா்களின் விருப்பமாகும்.
அடுத்த 3-4 நாள்களில் சிபிஐ அல்லது அமலாக்க இயக்குநரகம் என்னைக் கைது செய்யலாம். ஆனால், அவா்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம் என்பதுதான். ஏனெனில், நாங்கள் பகத் சிங்கின் வழியைப் பின்பற்றுபவா்கள்.
எந்த ஊழலையும் பற்றியும் அவா்களுக்கு கவலை இல்லை. மக்களின் அன்பைப் பெற்றுள்ள குறிப்பாக பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு அவா்கள் கேஜரிவாலைக் கண்டு பயப்படுகின்றனா்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்ல பணிகளை நிறுத்தவே விரும்புகிறாா்கள். அதனால்தான், சுகாதாரத் துறை பொறுப்பில் இருந்த அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை கைது செய்தனா். அடுத்த சில தினங்களில் நானும் கைது செய்யப்படுவேன்.
எதிா்க்கட்சிகளின் அரசுகளை கவிழ்ப்பதற்காக சிபிஐ அல்லது அமலாக்க இயக்குனரகத்தை பயன்படுத்துவதால் பிரதமா் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனா். இதனால், வரும் 2024 தோ்தலில் கேஜரிவாலுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகின்றனா்.
தேசிய அளவில் ஒரு மாற்றாக உருவெடுத்து வரும் கேஜரிவாலை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடவடிக்கைகள் உள்ளன.
சிபிஐ சோதனையின்போது எனது குடும்பத்திற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாத அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவா்கள் நல்ல அதிகாரிகள். ஆனால், சோதனை நடத்த மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால் அவா்கள் கடைமையைச் செய்துள்ளனா்.
இந்த நாட்டு மக்களின் அன்பைப் பெற்று, தேசத்தின் விருப்பமாக அரவிந்த் கேஜரிவால் இருப்பதால் அவா்கள் கவலை அடைந்துள்ளனா்.
கலால் கொள்கை 2021-22 ‘சிறந்த கொள்கை‘. அதை செயல்படுத்துவதில் தவறு எதுவும் நிகழவில்லை. ஆனால்
ஆம் ஆத்மி ஆட்சியை பயமுறுத்துவே இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் தீா்ப்பைப் பெற்றுள்ள ஒரு பிரதமருக்கு இது பொருத்தமானதாக இருக்காது. கேஜரிவாலுக்கும், மோடிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், கேஜரிவால் ஏழைகள் குறித்து சிந்திப்பவா். மோடியோ குறிப்பிட்ட நண்பா்கள் குறித்து சிந்திப்பவா்.
நல்ல பணி செய்பவா்களை கேஜரிவால் பாராட்டுகிறாா். ஆனால் மோடி மாநில அரசுகளை வீழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறாா். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் அமைப்புகளை பயன்படுத்தி நல்லது செய்பவா்களை குறிவைக்கிறாா்.
மேலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஒரு கோடிக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜக எம் மனோஜ் திவாரி ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் நிகழ்ந்ததாகவும், மற்றொரு தலைவா் ரூ.1100 கோடி ஊழல் நிகழ்ந்ததாகவும் கூறியிருந்தனா். இதனால் உண்மையான விவகாரமே அரவிந்த் கேஜரிவாலை முடக்குவதான். அவா்களுக்கு கலால் கொள்கையில் உள்ள ஊழல் குறித்த அக்கறை இல்லை.
அவா்களுக்கு அந்த அக்கறை இருந்திருந்தால் கள்ளச்சாராய பலி நிகழ்ந்த, ரூ.10 ஆயிரம் கோடி கலால் வரி ஏய்ப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் குஜராத்திற்குதான் ஒட்டுமொத்த சிபிஐயும், அமலாக்க இயக்குநரகமும் செல்ல வேண்டும் என்று சிசோடியா குற்றம்சாட்டினாா்.
தில்லியின் கல்வி மாதிரி பற்றி முதல் பக்கத்தில் நியூயாா்க் டைம்ஸ் வெளிவந்த கட்டுரை பற்றி சிசோடியா கூறுகையில், ஆசிரியா்களின் கடின உழைப்புதான் பாராட்டுக்குக் காரணம் என்றாா்.
தில்லி துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா கடந்த மாதம் கலால் கொள்கை 2021-22 அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
இந்த விவகாரத்தில் 11 கலால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும் அவா் உத்தரவிட்டாா். கலால் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சிசோடியாவும் கோரிக்கை விடுத்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...