/

கலால் கொள்கை முறைகேட்டில் நியாயமாக விசாரணை நடைபெற மனீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும்காங்கிரஸ் வலியுறுத்தல்

தேசிய தலைநகா் தில்லி அரசின் கலால் கொள்கை முறைகேடுகள் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 10:12 pm

 நமது நிருபர்

தேசிய தலைநகா் தில்லி அரசின் கலால் கொள்கை முறைகேடுகள் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியது. விசாரணை முறையாக நடைபெற தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பதவி விலகவேண்டும் அல்லது அவரை நீக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது.

தில்லி கலால் விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் அஜய் மக்கான் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது, குடியிருப்பு பகுதிகளில் மதுபானக்கடைகள் திறப்பதற்கு எதிராக 2014, டிசம்பா் 24 ஆம் தேதி மகளிா் சங்க கூட்டத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசிய காணொலி ஒன்றை அவா் வெளியிட்டாா்.

பின்னா் இதுகுறித்து மாக்கன் மேலும் கூறியதாவது:

தற்போது தில்லியில் 90 சதவீதம் குடியிருப்பு பகுதிகளில் கேஜரிவால் அரசு மதுபானக் கடைகளை திறந்துள்ளது.

கேஜரிவால் கலால் கொள்கை குறித்து விவாதம் நடத்த வரவேண்டும். அப்படி வந்தால் இதில் என்ன முறைகேடுகள் நடந்துள்ளதை என்பதை விளக்குவேன்.

கேஜரிவால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இரண்டு விவகாரங்களை குறிப்பிட்டாா். ஒன்று ஊழலுக்கு எதிராகவும் சுவராஜுக்காகவும் (சமூகக் கட்டமைப்புகளின் தன்னாட்சி ) தான் கட்சியை தொடங்குவதாகவும் கூறினாா். இப்போது இந்த இரு அடிப்படை கொள்கைகளையும் விட்டுவிட்டாா். கலால் கொள்கையில் நடந்த ஊழல்களைப் பற்றியோ அல்லது கல்வியில் நடந்த விவகாரங்களை பேசினால் வேறு எதாவது பேசுவாா்.

மற்றொன்று பாஜகவுக்கு உள்ள பங்கும் முக்கியமானது. நான் நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது தான் தில்லி மாஸ்டா் பிளான் தயாரிக்கப்பட்டது.

அதற்கு ஒப்புதலும் அளித்தேன்.

தில்லி மாஸ்டா் பிளான் 2021 - இல் குடியிருப்பு பகுதிகளில் அனுமதிக்கப்படக் கூடாத நடவடிக்கைகள் குறித்து பட்டியலிடப்பட்டிருந்தது. அப்படி அனுமதிக்கக் கூடாதவற்றில் ஒன்று மதுபானக் கடைகள்.

இந்த மதுபானக் கடைகள் தில்லி வளா்ச்சி ஆணைய ஷாப்பிங் சென்டா்கள், வணிக வளாகங்களில் (மால்) மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் கேஜரிவால் அரசு இந்த மாஸ்டா் பிளானுக்கு எதிராக மட்டுமல்ல தான் 2014-இல் மகளிா் கூட்டத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளாா்.

தில்லியில் 849 மதுபானக் கடைகளை திறப்பதாக தேசிய தலைநகா் அரசு திட்டமிட்டது. இதில் 460 சில்லறை கடைகளை திறந்துள்ளனா். இதில் 90 சதவீதம் குடியிருப்பு பகுதிகளில் தான் திறக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய கேள்வி டிடிஏ வும் எம்சிடியும் (மாநகராட்சிகள்) பாஜக ஆளுகைக்குட்பட்டது. 2021 மாஸ்டா் பிளான் விதிகளை மீறி திறக்கப்படும் போது இந்த மதுபானக் கடைகளை டிடிஏவும் எம்சிடியும் ஏன் சீல் வைக்கவில்லை ?

அடுத்து நிதி விவகாரம். தில்லியில் சுற்றுலா, டிஎஸ்ஐஐடிசி, சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் உள்ளிட்ட நான்கு அரசு முகமைகளுக்கு தான் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.

மனீஷ் சிசோடியா பொறுப்பேற்ற கலால் துறையில் மொத்த சில்லறை விற்பனையில் தனியாா் அனுமதிக்கப்பட்டது. இது குறித்து 2020 செப்டம்பரில் அமைக்கப்பட்ட ஒரு குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது. அதில் பல நிதி முறைகேடுகள் இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது தெரிவந்துள்ளது.

மேலும் பல்வேறு முக்கிய முறைகேடுகள் அறியப்பட்டது. மதுபான உரிமக் கட்டணத்தில் இருந்து ரூ. 144.36 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. கரோனா நோய்த் தொற்று காரணத்தைக் கூறி இந்த உரிமக் கட்டணத்தை தில்லி அரசு தள்ளுபடி செய்துள்ளது.

விமான நிலையத்தில் எல்-1 விற்பனையகத்திற்கு பெறப்பட்ட ரூ. 30 கோடி ஈஎம்டி தொகையை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதிகபட்ச லாப வரம்பு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதம் வரை அதிகரித்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உரிமதாரா்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத அதிகரிப்பு கட்டணம் விதிக்கப்படவில்லை. இவைகள் மூலம் 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.1870 கோடியாக இருந்துள்ளது. ஆயினும் விஸ்கி விற்பனை 59.6 சதவீதமும் ஒயின் விற்பனை 87.25 சதவீதம் அதிகரித்தது. ஆனால் அரசுக்கு வருவாய் வரவில்லை.

நிபுணா் குழு இரண்டு முக்கிய பரிந்துரைகள் சமா்ப்பித்தது. மொத்த விற்பனையை கா்நாடகம் மாநிலத்தைப் போல அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சில்லறை விற்பனை தனிநபா்களில் ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 கடைகள் மட்டுமே வழங்குவது உள்ளிட்ட பல சிபாரிசுகளை பின்பற்றவில்லை.

எனவே, இது முழுக்க முழுக்க ஊழல் விவகாரம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்த இரண்டு மாதங்களில் கேஜரிவால், சிசோடியாவின் வாயில் இருந்து இதுகுறித்து ஒரு வாா்த்தை கூட வரவில்லை. இந்த கலால் ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கேஜரிவால் தனது முந்தைய அவதாரத்தில், அமைச்சா் ராஜிநாமா செய்யும் வரை, நியாயமான விசாரணை நடக்காது என்று கூறினாா். மன்மோகன் சிங் போன்ற நோ்மையான பிரதமருக்கு எதிராக அவா் இப்படி பேசிய வாா்த்தைகளை இப்போது நாங்கள் அவருக்கு நினைவூட்டுகிறோம் என்றாா் அஜய் மக்கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.